புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

மற்றொரு கெப்டன் Cool மிஸ்பா-உல்-ஹக்?

மற்றொரு கெப்டன் Cool மிஸ்பா-உல்-ஹக்?

பயங்கரவாதத் தாக்குதல், ஊக்கமருந்துப் பாவனை, இலஞ்ச ஊழல், ஆட்ட நிர்ணய சதி போன்ற பல காரணங்களால் கடந்த சில வருடங்களாகப் பலவீனப்பட்டுப் போயிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த வருட ஆரம்பத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக சல்மான் பட் தலைமையில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டித் தொடர்களில் தோல்வியுற்றிருந்தது. அத்தோடு தலைவர் சல்மான் பட், மொஹம்மட் ஆஸிப் மற்றும் மொஹம்மத் ஆமீர் ஆகியோர் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டு போட்டித் தடைகளுக்கும் ஆளானார்கள்.

ஆனால், அதன்பிறகு ஏதேச்சையாக பாகிஸ்தான் அணித் தலைமைப் பொறுப்பு 50 டெஸ்ட் போட்டியில் கூட ஆடிய அனுபவமற்ற 37 வயதான மிஸ்பா உல் ஹக்கிடம் வழங்கப்பட்டது.

இவர் தலைமை பொறுப்பேற்ற நேரத்தில் ஆட்ட நிர்ணய சதியினாலும், மேலும் பல காரணங்களாலும் பாகிஸ்தான் அணியில் இருந்து சொயிப் மாலிக், கம்ரான் அக்மல், ரானா நவீட், மொஹம்மட் யூசுப் போன்ற அனுபவ வீரர்கள் ஓய்வு பெற்றிருந்தனர்.

புதிய இளம் வீரர்களடங்கிய ஒரு அணி மிஸ்பா உல் ஹக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர் தலைமைப் பொறுப்பை ஏற்ற பின் மேற்கிந்தியத் தீவுக்கு எதிரான தொடர் 1-1 என்ற ரீதியில் சமநிலையில் முடிந்தது. அதன் பின் நியூசிலாந்து அணிக்கு எதிராக 1-0, ஸிம்பாப்வே அணிக்கு எதிராக 1-0, பங்களாதேஷ் அணிக்கு எதிராக 2-0, இலங்கை அணிக்கு எதிராக 1-0, மற்றும் கடைசியாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 3-0 (வைட் வொஷ்) என்ற ரீதியில் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஐந்து தொடர் வெற்றிகளைப் பெற்று பாகிஸ்தான் அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றுள்ளார்.

கடைசியாக துபாயில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதலாவது போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, சயீத் அஜ்மலின் சுழலின் உதவியோடு 182 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. இதில் ஆகக் கூடிய ஓட்டமாக மெட் பிரேயர் 49 ஓட்டங்களைப் பெற்றார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி ஹபீஸ், அஸார் அலி, மிஸ்பாஉல் ஹக் மற்றும் சபிக்கின் அரைச்சதங்களின் உதவியுடன் 326 ஓட்டங்களைப் பெற்றது. இங்கிலாந்து பந்து வீச்சில் ஸ்டூவர்ட் புரோட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 144 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 160 ஓட்டங்களுக்குள் சுருண்டது. உமர் குல் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வெற்றி இலக்கை விக்கெட் இழப்பின்றி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இப்போட்டியில் மொத்தமாக 10 விக்கெட்டைக் கைப்பற்றிய சயீத் அஜ்மல் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

அபூதாபியில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி மிஸ்பா உல் ஹக்கின் 84 ஓட்டங்களுடன் 257 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. புரோட் ஸ்வான் 3 விக்கெட் வீதம் வீழ்த்தினார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி அலிஸ்டயர் குக் 92, ட்ரொட் 74 ஓட்டங்கள் பெற 327 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. மீண்டும் திறமையாகப் பந்து வீசிய அஜ்மல் 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். 70 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 214 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஒதுங்கியிருந்த இங்கிலாந்து அணி சுழல் பந்து வீச்சாளரான மொன்டி பனேசர் பாகிஸ்தானுடனான தொடருக்கு மீண்டும் அழைக்கப்பட்டிருந்தார். இங்கிலாந்து தேர்வாளர்களின் அணுகுமுறை சரியென நிரூபித்த பனேசர் பாகிஸ்தானின் இரண்டாவது இன்னிங்ஸில் 58 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி யிருந்தார். 144 ஓட்டங்கள் என்ற இலகு வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 72 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்து 72 ஓட்டங்களால் தோல்வியுற்றது. இதில் பாகிஸ்தான் அணியின் மற்றொரு சுழல் பந்து வீச்சாளரான அப்துல் ரஹ்மான் 45 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன் ஆட்டநாயகனாகவும் தெரிவானார்.

தொடரை இழந்த இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றியையாவது பெறலாம் என்ற நோக்கில் டுபாயில் ஆரம்பமான 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப் பந்து வீச்சாளர்கள் திறமையாகப் பந்து வீசி பாகிஸ்தான் அணியை 99 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது. ஸ்டுவர்ட் புரோட், அன்டர்சன் ஆகியோர் தலா 3 விக்கெட் வீதம் கைப்பற்றினர். வெற்றி பெறக் கூடிய ஒரு இலக்கைப் பெறலாம் என தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 141 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டியின் வெற்றியை நிர்ணயிக்கும் இரண்டாவது இன்னிங்ஸை 42 ஓட்டங்கள் பின்னாலிருந்து ஆரம்பித்த பாகிஸ்தான் அணி மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடியது. யூனிஸ் கான் மற்றும் அஸார் அலி ஆகியோரின் சதங்களின் உதவியுடன் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 365 ஓட்டங்ளைப் பெற்றது. இங்கிலாந்து பந்துவீச்சில் மீண்டுமொரு முறை சிறப்பாகச் செயற்பட்ட மொண்டி பனேசர் 86 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

324 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 252 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து 72 ஓட்டங்களால் தோல்வியுற்றது. அலிஸ்டயர் குக், மெட் பிரேயர் ஆகியோர் 49 ஓட்டங்கள் வீதம் குவித்தனர். பந்துவீச்சில் உமர் குல், சயீத் அஜ்மல் 4 விக்கெட் வீதம் வீழ்த்தினர். மூன்றாவது போட்டியின் சிறப்பாட்டக் காரராக அஸார் அலி தெரிவானார். தொடர் சிறப்பாட்டக்காரராக 3 போட்டிகளிலும் 24 விக்கெட்களைக் கைப்பற்றிய சுழற் பந்து வீச்சாளர் அயீத் அஜ்மல் தெரிவானார்.

பாகிஸ்தான் அணியானது இங்கிலாந்து அணியை முழுமையாக ஒரு தொடரில் தோற்கடித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 72 ஓட்ட எண்ணிக்கையானது பாகிஸ்தான் அணிக்கு எதிராகப் பெற்ற குறைந்த ஓட்டமாகும். இதற்கு முன்பு 1957ம் ஆண்டு ஓவல் மைதானத்தில் பெற்ற 130 ஓட்டங்களே குறைந்த மொத்த ஓட்டமாக இருந்தது.

இத் தொடர் வெற்றியானது பாகிஸ்தான் அணி பெற்ற 50ஆவது தொடர் வெற்றியாகும். மேலும் அவ்வணி தொடர்ந்து 5 டெஸ்ட் தொடர்களில் வெற்றிபெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன்பு 1993-94ம் ஆண்டு பருவகாலத்தில் தொடர்ந்து 4 தொடர்களில் வெற்றிபெற்றிருந்தது பாகிஸ்தான் அணி.

மேலும் 1987ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடர் முழுக்க சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய தொடராக இது அமைந்தது. அச்சமயம் அப்துல் காதிர், தெளபிக் அஹமட் ஆகியோர் 45 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தனர். இம்முறை அஜ்மல், அப்துர் ரஹ்மான் ஜோடி தொடர் முழுக்க 43 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தனர்.

இத் தொடர்கள் ஆரம்பமாவதற்கு முன்பு சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலின் தரவரிசைப் பட்டியலில் 84 புள்ளிகளைப் பெற்று 7வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி தற்போது 108 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

125 புள்ளிகளுடன் முதலிடத்திலிருந்த இங்கிலாந்து அணி 118 புள்ளிகளைப் பெற்று தொடர்ந்தும் முதலிடத்திலிருந்தாலும் இம்மாதம் நடைபெறும் தென்னாபிரிக்கா - நியூசிலாந்து டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்கா கைப்பற்றினால் இங்கிலாந்தின் முதலிடம் பறிபோகும் அபாயம் உள்ளது.

பாகிஸ்தான் - இங்கிலாந்து மோதிய மூன்றாவது டெஸ்ட்டின் போது ஒரு அணி முதல் இன்னிங்ஸில் 100க்கும் குறைவான ஓட்டங்களைப் பெற்று அப் போட்டியில் வெற்றி பெற்றது கிரிக்கெட் வரலாற்றில் இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு 105 வருடங்களுக்கு முன்பு 1907 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி இச்சாதனையைச் செய்திருந்தது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.