புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

வீடு

ஹீpவாகர் சுற்றிச் சுழன்றுக் கொண்டிருந்தான். அவனுடைய நீண்ட நாளைய கனவு இன்று நனவாகிறது. ஆமாம் பத்து வருடங்கள் ஜப்பானில்உழைத்து கற்பனையில் வடிவம் கொடுத்த தனது ‘வசந்த மாளிகையை’ நிஜத்திலேயே கட்டி முடித்து.... கிருகப் பிரவேசம் செய்து.... இன்று உறவினருக்கு விருந்தளிக்கும் விழா!

உறவினர்கள், நண்பர்கள் அயலவர்கள் என பலராலும் வீடு நிரம்பி வழிந்தது. அந்த வீட்டின் விஷேச அமைப்பே எல்லோர் கவனத்தையும் கவர்ந்தது. ஜப்பான் கலைவண்ணமும் நம் நாட்டு கலை வண்ணமும் இடைக்கிடையே மேனாட்டு அம்சங்களும் உட்புகுத்தி அமைக்கப்பட்ட அற்புதப் படைப்பாக அந்த வீடு கம்பீரமாக காட்சியளித்தது.

எதெது எங்கு இருக்க வேண்டுமோ அதது அங்கு இருந்தது என்பதே அந்த வீட்டின் நேர்த்திக்கு போதுமான சான்று. இன்னும் கொஞ்சம் சொல்வதானால்..... அழகிய சிறிய பூஞ்சோலையைக் கடந்து.... கலா பவனத்துள் நுழைவது போன்ற வரவேற்பறையுள் புகுந்து.... நாகரீகத்தின் உச்சமான விருந்தினரறையைக் கடந்து.... இதமான படுக்கை அறைகளைக் கடந்து.... கண்ணுக்கு குளிர்ச்சியான சாப்பாட்டறை..... சமையலறை இவை பிரதான பகுதி.

மேல் மாடியிலோ.... சிறிய நூலகம்.... கணனி அறை.... வழிபாட்டறை என ஒரே அமர்க்களம். ஆனாலும் எல்லாவற்றிலுமே ஒரு வித அடக்கமும் சாந்தமும் வெளிப்படுவதைக் குறிப்பிட்டாகவே வேண்டும்.

இந்த வீட்டில் உள்ள இன்னுமொரு விஷேசம் என்னவென்றால், கீழ் மாடியில்.... திவாகரின் பெற்றோருக்கு என்று தனியான “எனெக்ஸ்” ஒன்றும் பெரிய வீட்டோடே இணைந்து அமைக்கப்பட்டுள்ளது.

பெற்றோருக்காக தனியாக அமைக்கப்பட்ட அந்த வீட்டில் அழகான இரு அறைகள்.... நூலகம்.... சமயலறை.... எல்லாமே உண்டு. வயோதிபத் தம்பதிகளுக்கு தனியாக இருக்கக் கூடிய வகையில் அதி நவீன கருவிகளின் வசதிகளுடன் கூடிய செளகரியமான வீடாக அது அமைக்கப்பட்டிருந்தது.

ஒட்டுமொத்தமாகவே திவாகரின் வீடே.... அந்த ஊருக்கே ஒரு பெரு விருந்தாக அமைந்திருந்தது. எனினும் அதிலும் குறிப்பாக பெற்றோருக்காக அமைக்கப்பட்ட வீடு எல்லோர் கருத்தையும் கவர்ந்தது.

விருந்துக்கு வந்த கும்பல் குழுக் குழுவாகப் பிரிந்து வீட்டை அக்குவேறு ஆணிவேராக அலசி.... பல்வேறு கருத்துரைகளை பரிமாறிக் கொண்டிருந்தன.

சிலரது விழி புதுமையால் விழித்தது.

சிலரது விழி பொறாமையால் கனன்றது.

சிலரது விழி இயலாமையால் நொய்ந்தது.

சிலரது விழி மகிழ்ச்சியால் பூரித்தது!

அது போலவே

சிலரது மொழி புதுமையை சிலாகித்தது.

சிலரது மொழி பொறாமையில் பிசுபிசுத்தது!

சிலரது மொழி இயலாமையில் தழுதழுத்தது.

சிலரது மொழி சந்தோசத்தில் பொங்கியது.

இப்படி வீடும் திவாகரும் விமர்சனத்துக்குரிய கருவாக பலரால் பலவிதத்தில் திறனாயப்பட்டுக் கொண்டிருந்தது.

திவாகரோ தன் மனைவி மக்கள் சகிதம் எல்லோரையும் நலம் விசாரித்துக் கொண்டும் உபசரித்துக் கொண்டுமிருந்தான். இடைக்கிடை தன் பெற்றோர் உள்ள பகுதிக்குச் சென்று அங்குள்ளவர்களையும் கவனித்துக் கொண்டான்.

வீடே கலகலத்துக் கொண்டிருந்தது. வீட்டின் அழகும் அலங்காரங்களும் பரிமாற்றப்பட்ட உணவுகளின் மணமும் சுவையும் எல்லோரிடத்திலும் ஒருவித இன்பத்தையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தியது.

பிரியாவிடை பெறும் நேரம். எல்லோரும் திவாகரை புகழ்ந்து தள்ளினார்கள். வாழ்த்தி மகிழ்ந்தார்கள். எல்லோருமே.... கற்பனையில் இப்படித்தான் வீடு கட்ட வேண்டும். வாழும் போது சிறப்பாக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்று கங்கனம் கட்டினர்.

விருந்தினர் ஒருவர் பின் ஒருவராக சென்று கொண்டிருந்தனர். சிறிது நேரத்தின் பின் வீடே ஓய்ந்து போனது! பல நாள் ஓய்வொழிச்சலின்றி பாடுபட்டதால், திவாகருக்கு உடம்பெல்லாம் “அடித்து போட்டாற் போல்” இருந்தது. படுக்கைக்குச் சென்றிருந்தால் போதும் என்றிருந்தது. எனினும் பெற்றோரை பார்த்து விட்டு வருவோம் என்று எண்ணிய வாறு..... அவர்கள் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றான்.

அப்போது.... திவாகரின் அப்பாவின் உறவுக்கார பெண்ணொருவர்.. தன் பெற்றோருடன் பேசுவது கேட்டது. தன் பெயர் அடிபடுவது கண்டு... இந்த நேரம்தான் உள்ளே நுழைவது சரியில்லையே என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அந்த பேச்சுக் குரல் தெளிவாக கேட்டது.

“என்ன மாமி.... இது... உங்க புள்ள திவாகர் செய்த வேல.... ஒரே புள்ளண்டு கண்ணுக்குள் வெச்சி வளத்தீங்க.... நீங்க எவ்வளவோ கஷ்டப்பட்டு நல்லா அவர படிக்க வெச்சீங்க.... ஆ...னா.... இப்ப பாருங்க உங்க நெலமய... இவ்வளவு பெரிய வீடு கட்டி... அதுல உங்களுக்குன்னு ஒரு அறை கூட இல்லை. வயசான உங்கள வெளியில தள்ள முடியாம இப்பிடி ஒதுக்கி வெச்சத பாத்தீங்களா....?”

“எல்லாருமே... அதப் பத்தித்தான் இண்டக்கி கதைச்சாங்க. எல்லோருக்குமே இது கவலைதான். நீங்க ரெண்டு பேரும் எப்படித்தான் இதத் தாங்கிக் கொண்டிருக்கிaங்களோ? நானின்டா உங்கள மாதிரி இப்படியெல்லாம் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டேன். செய்ற வேலயே வேற.... மாமி.... உங்களால முடியாவிட்டா நானாவது உங்களுக்காக திவாகரோட இது பத்தி கதைக்கவா?”

பேச வேண்டியதெல்லாம் பேசி முடித்து விட்டா.... இப்போது உள்ளே போவமா என்று யோசிக்கையில்.... அம்மா பேசத் தொடங்கினார்கள். நான் அப்படியே நின்று பேச்சைக் கேட்கலானேன.

“மகள்.... நீங்க எங்களிருவரப் பற்றியும் இவ்வளவு அன்பாகவும் அக்கறையாகவும் இருக்கிறத நெனச்சி நாங்க ரொம்ப சந்தோசப்படுறோம். ஆ....னா... நீங்க நெனக்கிற மாதிரி... எங்க புள்ள எங்கள வெளியில தள்ளவும் இல்ல. நாம கவலையிலயும் இல்ல.

உண்மையிலே சொல்லப்போனா நாங்க ரெண்டு பேரும் மிகவும் கொடுத்து வெச்ச வங்க. ஏன் தெரியுமா.....? எங்கள.... எங்கட உணர்வுகள நன்றாக புரிஞ்சிக்கிட்ட மகனும் மருமகளும் வாய்த்ததுக்கு.

வயசான காலத்தில பெற்றோரின் நிலையும் அவங்க பட்றபாடும் வார்த்தையால விவரிக்க ஏலாதவை. அதிகமானவங்க பிள்ளைகளோடயும் போராடுபவங்களா இருக்கிறாங்க. சில பேர் நோய் நொடியால அவஸ்தப்பட்டு, தங்கள பராமறிக்க ஆளில்லாம இருப்பாங்க.

இன்னும் நெறய பேருக்கு.... அவங்க பிள்ளைகள் திருமணம் செஞ்சி குடும்பமாயிட்டா, வீட்டிலுள்ள அறைகளெல்லாம் அவர்களுக்காகி விடும். வயோதிப தம்பதிகள் ஆளுக்கொரு இடத்தில் இல்லாட்டி, ஆளுக்கொரு வீட்டில பிரிந்து வாழுவாங்க.

வயசான காலத்தில அவங்கட வாழ்க்கைய பத்தி யோசிக்கவோ.... அனுபவிக்கவோ இடமோ.... வாய்ப்போ சூழலோ கிடைக்காது. வெளியில சொல்ல வெட்கப்படுவார்கள். சொல்லவும் முடியாம... தனியா.... பிரிந்து வாழவும் முடியாம.... சேர்ந்து இருக்க வாய்ப்போ வசதியோ இல்லாம தவிச்சிட்டிருப்பாங்க.

பொதுவா.... இன்றக்கி எங்கட சமூகத்துல வயசாலிப் பெற்றோரட நில இது தான். ஆ....னா.... எங்க மகனும் மருமகளும் ரொம்ப புத்திசாலிங்க. அவங்கட வீட்டிலே நாம இருந்தா வயசாலியான நாக “சுதந்திரமா”... இஸ்டமா.... அந்நியோன்னியமா இருக்க சங்கடப்படுவோம். குழந்தைங்கட சத்தமும் குழப்படியும் எங்களுக்கு அஸெளகரியமாகலாம் என்றெல்லாம் யோசித்திருக்கிறாங்க.

வயசான நாங்க.... யாரிடயும் இடையூறு இல்லாம.... நிம்மதியா.... சந்தேசமா இருக்க வேணும்னுதான் இப்படி செஞ்சிருக்கிறாங்க.

எங்கள ஒதுக்கி வைக்கல்லம்மா.... எங்களுக்கு “புது வாழ்வு” தந்திருக்கிறாங்க.

நான் ஷ¤கர் பேஷண்ட். இவரோ ஹாட் பேஷண்ட். நாங்க டெண்ஷனாகாம... இருக்க இந்த ஏற்பாடு மிகவும் ஏற்றது. இப்ப நமக்கு “புத்துயிர்ப்பே வந்திருக்கிறது” அனுபவத்தால உணர்வோம்.

காலையில ஆபிஸ் போக முன்னம் வந்து பார்க்கிறாங்க. நாங்க தூங்கியிருந்தா அமைதியா போறாங்க. எங்கள கவனிக்க ஒரு பெண்ணிருக்கிறா மாலையிலயும், இரவிலயும் ஒன்னா இருந்து கதைச்சி மகிழ்கிறோம். அம்மா.... உண்மையிலேயே எங்க மகன் திவாகர் எங்களுக்கு செய்தது பெரிய உபகாரம்மா! ஊர் வேணும்னா என்ன வேணும்னாலும் பேசிக்கட்டும். ஆ...னா... எங்க புள்ளதான் எங்க மனச புரிஞ்சி... எங்கள கெளரவிச்சி... வயசான.... நோயாளியான எங்களுக்குத் தேவையான.... சூழல ஏற்படுத்தி எங்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை தந்திருக்கிறான்.

வயசான காலத்தில கணவனும், மனைவியும் இப்பிடி அந்நியோன்னியமாக வாழ எத்தின பேருக்கு கொடுத்து வெச்சிருக்கோ.....? பெற்றோர்னா பார்த்துப் பார்த்து புள்ளங்களுக்கு செய்வாங்க.... ஆ...னா.... பெற்றவங்க வயோதிபத்த அடஞ்ச ஒடனே.... பெற்ற பிள்ளைகளே உணர்ந்து கொள்கிறதில்லயே! வயோதிப கணவனும் மனைவியும் ஒன்றாயிருந்து கதைக்கவே படும்பாடு!

பெரும்பரிதாபம் ! ஆ...னா... அந்த வகையில நாங்க கொடுத்து வெச்சவங்க..... எங்க புள்ளயும், குடும்பமும் எங்க கூடத்தானே இருக்கிறாங்க. அதேநேரம் நாங்க சுதந்திரமா..... நிம்மதியா... சந்தோசமா... தானிருக்கிறோம். கடவுள்தான் எங்க புள்ளக்கும் மருமகளுக்கும் இன்னு மின்னும் புண்ணியத்தைக் கொடுக்கணும்மா....” நீண்ட நேரம் கதைத்த என்னம்மா..... உணர்ச்சி மேலிட்டு அழுதார்கள்.

எனக்கோ..... தாங்க முடியாத மகிழ்ச்சி....!

நான் மனதால் எதை நினைத்து என் வீட்டை அமைத்தேனோ.... அதை நான் சொல்லாமலே பெற்றோர் புரிந்து கொண்டனர். என் பெற்றோருக்கான எமது அன்புக் காணிக்கை அவர்களுடைய சந்தோசம்! நிம்மதி! ஆரோக்கியம்....! யாவும் அவர்களுக்கு கிட்டியதை அவர்கள் வாய்மூலமாகவே..... ஆசிர்வாதமாக பெற்றுக்கொண்டேன்....! என் வீடு எனக்கு ஆனந்தமாக விளங்கியது. மனம் நிறைந்த அன்போடு எனது பெற்றோரைக் காணச் சென்றேன்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.