புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

 

உலக பொருளாதார நெருக்கடியால் தேயிலைக் கைத்தொழிலிலும் பாதிப்பு

உலக பொருளாதார நெருக்கடியால் தேயிலைக் கைத்தொழிலிலும் பாதிப்பு

கொழும்பு சர்வதேச தேயிலை மாநாட்டில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க

தேயிலைத்துறை எதிர்கொள் ளும் சவால்களுக்கு முகங் கொடுக்கும் வகையில் தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளு டன் நாம் இணைந்து செயற்பாட்டுத் திட்டம் ஒன்றைத் தயாரிக்க வேண்டும். அப்போதுதான் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என தான் நம்பு வதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

அண்மையில் கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் அங்கு மேலும் உரையாற்றுகையில்; சர்வதேச மட்டத்தில் காணப்பட்ட ஸ்திரமற்ற தன்மை, ஐரோப்பாவின் பொருளாதார நெருக்கடிகளினால் எமது நாட்டின் தேயிலைக் கைத்தொழில் கடந்த ஜூன் மாதத்தில் பல நெருக்கடிகளைச் சந்தித்தது.

பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் நாம் வெற்றி பெற்றுள்ள நிலையில், அதன் நன்மைகளை அனுபவித்து வருகின்றோம். எனினும் வெற்றி கொண்டுள்ள சமாதானத்தை தக்க வைப்பது யுத்தத்தில் வெற்றிகொண்டதை விட சவாலானதாகும். சர்வதேச மட்டத்தில் தற்போது காணப்படுகின்ற பொருளாதார நெருக்கடி நிலையிலும் இலங்கை 8.3 வீத பொருளாதார வளர்ச்சியை பெற்றுக்கொண்டுள்ளது. பயங்கரவாதத்தை தோற்கடித்ததன் மூலமாக நாட்டில் ஸ்திரமான நிலை ஏற்பட்டது. இந்த அடிப்படையற்ற பயங்கரவாதம் காரணமாக எமது தேசிய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காக எமது வளங்கள் அதிகளவு விரயமாகின. இந்த வளங்களை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தியிருக்கலாம். எவ்வாறெனினும் யுத்தம் முடிந்த பின்னர் எமது வளங்களை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இந்நிலையில் கடந்த வருடத்தைப் போலவே இவ்வாண்டிலும் தேயிலை கைத்தொழிலை மேம்படுத்தும் பொருட்டு ஜனாதிபதியினால் வரவு - செலவுத் திட்டத்தில் அதிகளவு நிதியொதுக்கப்பட்டுள்ளது. எமது நாட்டின் தேயிலை உற்பத்தியை பார்க்கும்போது சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களே 76 வீதமான பங்களிப்பை வழங்குகின்றனர். ஏனைய 24 வீதமானது தனியார் நிறுவனங்களின் பங்களிப்பாகும்.

கடந்த வருடத்தைப் போலவே இவ்வருடமும் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு பல வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. தேயிலை உற்பத்தியில் புதிய தேவைகள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. தேயிலைத் துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளுடன் இணைந்து செயற்பட வேண்டும். எனவே தேயிலை உற்பத்தியாளர்களின் ஒன்றியத்தை அமைப்பதற்கான சாத்தியத்தை ஆராயுமாறு உலக உணவு மற்றும் விவசாய அமைப்பிடம் கோரிக்கை விடுக்கின்றேன். அப்போது தேயிலை உற்பத்தியாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராயக்கூடியதாக இருக்கும்.

எமது நாட்டில் 20 இலட்சம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழில் சந்தர்ப்பங்களை பெற்றுள்ளனர். 2011 ஆம் ஆண்டில் தேயிலை உற்பத்தியில் சாதனைமிக்க வருமானத்தை பெற்றுள்ளோம். இவற்றைப் பார்க்கும் போது தேயிலைக் கைத்தொழிலாளனது இலங்கைக்கு எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தெளிவாகின்றது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் அனுசரணையில் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தின் 20 ஆவது தேயிலை பருவகால கூட்டத் தொடரை இலங்கை நடத்தியது. இந்நிகழ்வில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ஏர்ள் குணசேகர உட்பட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. ரோமைத் தலைமையகமாகக் கொண்ட அமைப்பின் செயலாளர் நாயகம் கெய்சன் சாங் மற்றும் அமைப்பின் கொழும்பு வதிவிடப் பிரதிநிதி பற்றிக் இவான்ஸ் ஆகியோர் உள்ளடங்கலாக 20 இற்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.

உலகளாவிய ரீதியில் தேயிலைக் கைத்தொழில் எதிர்நோக்கும் சவால்கள், பிரச்சினைகள் தற்பொழுது நிகழும் சந்தைப் போக்குகள், அதன் முன்னேற்றங்கள், தேயிலையின் கேள்வி, நிரம்பல் சமநிலையை பாதிக்கும் விடயங்கள், நீண்டகால மற்றும் குறுகிய கால வரையான எதிர்வுகூறல் போன்ற பலதரப்பட்ட விடயங்கள் அமர்வுகளின்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.