ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் மாதம் பிறை 15
ஜய வருடம் ஆடி மாதம் 27ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,12, 2014
வரு. 82  இல. 190
 
எட்டே வார்த்தைகளில் ஒருவனின் சரித்திரத்தையே படம்பிடித்து காட்டிய கவிஞன்

எட்டே வார்த்தைகளில் ஒருவனின் சரித்திரத்தையே படம்பிடித்து காட்டிய கவிஞன்

ண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டி ருந்த தமிழ்த் திரை யுலகுக்கு ‘உலகமயமாக்கல்’ என்ற தாதுபுஷ்டி லேகியத்தை வழங்கி தெம்பூட்டியவன் கண்ணதாசன்.

“மதனமோக ரூப சுந்தரி” என்ற ரீதியில் இருந்த பாடல்களை “பொன்மகள் வந்தாள்” பாணியில் மாற்றிய வார்த்தை சித்தன் அவன். அந்த செட்டி நாட்டுச் சிங்கம் ‘கஞ்சன்’ என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. வார்த்தைகளை அவனைவிட சிக்கனமாக வேறு யாரும் கையாண்டிருக்க இயலாது. “பேசுவது கிளியா?” என்ற பாடல் நல்லதொரு உதாரணம். இரண்டிரண்டு வார்த்தைகளாய் அமைந்த சந்தத்தின் விந்தை அப்பாடல்.

“பாடுவது கவியா? - இல்லை

பாரிவள்ளல் மகனா?

சேரனுக்கு உறவா?

செந்தமிழர் நிலவா?

இவ்வரிகள், “பாடுவது கவியா?” என்று கண்ணதாசனின் கவிநயத்தை தம்பட்டம் அடிப்பதோடன்றி, பாடுகின்ற கதாநாயகனின் கொடுத்துச் சிவந்த கொடைத்தன்மை, அவனது கேரளத்து பூர்வீகம், அவன் தமிழகத்தில் அடைந்திருந்த சொல்லொணா செல்வாக்கு, அத்தனையும் அழகுற எடுத்தியம்பியிருந்தது. எட்டே வார்த்தைகளில் ஒருவனது சரித்திரத்தையே படம்பிடித்துக் காட்ட கண்ணதாசனால் மட்டுமே முடிந்தது.

இன்றைய பாடல்களை எடுத்துக் கொண்டால் “என்ன விலை அழகே?” என்ற கேள்வி இருக்கும் கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்காது. அடுத்த அடி “சொன்ன விலைக்கு வாங்க வருவேன்” என்று தொடர்ந்து மேலே போய்க் கொண்டேயிருக்கும்.

கண்ணதாசனின் பாணி அலாதியானது. அவனுக்கு முடிச்சு போடவும் தெரியும், அவிழ்க்கவும் தெரியும். கேள்வியும் எழுப்பி பதிலும் சொல்வதில் அவன் கில்லாடி “உன் புன்னகை என்ன விலை?” என்ற கேள்விக்கு “என் இதயம் தந்த விலை” என்ற பதில் தொடர்ந்து வரும்.

“நதி எங்கே போகிறது?” என்ற கேள்வியை எழுப்பிவிட்டு “கடலைத் தேடி” என்ற பதிலையும் தருவான் நம் கவிஞன். ஏனெனில் அவன் ஒரு “Perfectionist”. அவன் போட்ட வார்த்தைக்கு ஈடாக வேறொரு நல்ல வார்த்தை அவனால் மட்டுமே போட முடியும். நாம் போட்டால் அந்த “Imperfection” காட்டிக் கொடுத்துவிடும்.

உண்மையான கவிஞன் எப்படி இருக்க வேண்டும்? அவன் நாட்டையும் நடப்பையும் முறையே தெரிந்து வைத்திருக்க வேண்டும். சமுதாயத்தின் அன்றாட விஷயங்களில் ஐக்கியமாகி இருக்க வேண்டும். பொது அறிவு நிரம்பியவனாக இருக்க கற்பனைத் திறன் வேண்டும். சமயோசித புத்தி உடையவனாக இருத்தல் வேண்டும்.

இவை அத்தனை குணங்களும் ஒருங்கே அமையப் பெற்றவன் கண்ணதாசன். ‘மானிட ஜாதியை ஆட்டி வைப்பேன்’ என்று அந்த காவியத் தாயின் இளைய மகன் பெருமை கொண்டதில் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது. அவன் மறைந்து இத்தனை வருடங்களான பின்பும் அவன் பாடல்களை நாம் அலசுகின்றோமே? அப்படியென்றால் “எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்ற அவனது தீர்க்கதரிசனம் பலிக்கிறது என்றுதானே பொருள்?

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை தமிழ்மொழியில் பெயர்த்த தலையாய கவிஞருள் கண்ணதாசன் குறிப்பிடத்தக்கவன். அவன் கம்பனையும். பாரதியையும், பட்டினத்தாரையும் மட்டும் அறிந்து வைத்தவனில்லை; அதற்கு மேலாக பாரசீக மேதைகளையும், மேலை நாட்டு அறிஞர்களையும் அவர்தம் படைப்புக்களையும் கரைத்துக் குடித்தவன் என்ற உண்மை புலப்படுகிறது.

பேசுவது கிளியா - இல்லை
பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா

கொத்து மலர்க்கொடியா
பாடுவது கவியா - இல்லை

பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா

செந்தமிழர் நிலவா
(பாடுவது கவியா)

கல்யாணப் பந்தலில் ஆடும் தோரணமா - இல்லை.

கச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமாக

வில்லேந்தும் காவலன்தானா வேல்விழியாள் காதலன்தானா

சொல்லாமல் சொல்லும் மொழியில்

கோட்டை கட்டும் பாவலன்தானா

(பேசுவதி கிளியா)

மன்னாதி மன்னர்கள் கூடும் மாளிகையா - உள்ளம்

வண்டாட்டம் மாதர்கள் கூடும் மண்டபமா

செண்டாடும் சேயிழைதானா தெய்வீகக் காதலிதானா

செந்தூரம் கொஞ்சும் முகத்தில்

செவ்வாய் மின்னும் தேன்மொழிதானா

(பேசுவது கிளியா)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி