ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் மாதம் பிறை 15
ஜய வருடம் ஆடி மாதம் 27ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,12, 2014
வரு. 82  இல. 190
 
வளமான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதே சர்வதேச இளைஞர் தினத்தின் நோக்கம்

வளமான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதே சர்வதேச இளைஞர் தினத்தின் நோக்கம்

ஆகஸ்ட் மாதம் 12ம் திகதியான இன்று சர்வதேச இளைஞர் தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தினூடாக இளைஞர்களை ஒன்றுதிரட்டி ஆக்கபூர்வமான செயற்திறன் களுக்கு அவர்களை பயிற்றுவித்து, ஒரு வளமான எதிர்காலத்தை கட்டியெழுப்பு வதே இதன் நோக்கமாகும்.

இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்று கூறப்பட்டாலும், ஒரு நாட்டின் சொத்து இளைஞர்களே. ‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு’ என்பது போல் இளைஞர் ஒன்றிணைந்து செயற்படும் போது அங்கு வலிமையும் சக்தியும் வெளிப்படும். ஒரு நாட்டின் முதுகெலும்பு இளைஞர்களேயாவர்.

உலகளாவிய ரீதியில் இளைஞர்களின் போராட்டங்களே விஸ்வரூபமெடுத்து ஆக்கபூர்வமான அல்லது அழிவுபூர்வமான நடவடிக்கைகளுக்கு பயன்படுகின்றன. பாடசாலை, பல்கலைக்கழகங்களை குறிவைத்தே இளைஞர்கள் திரட்டப்படுகின்றனர். இளைஞர்கள் பலவான் கையிலுள்ள அம்புக்கு ஒப்பாயிருக்கிறார்கள். இவர்களை சீராகப் பயன்படுத்தும் போது ஆக்கபூர்வமான பயணங்களில் வெற்றிகள் கிடைக்கப் பெறும்.

1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 08ம் திகதி முதல் 12ம் திகதி வரை லிஸ்பன் நகரில் நடைபெற்ற உலக நாடுகளின் இளைஞர் விவகாரங்களுக்குப் பொறுப்பானவர்கள் இளைஞர்களின் செயற்பாடுகளையும் கவனத்திற் கொள்ளும் வகையில் இளைஞர்களுக்கான சர்வதேச தினம் ஒன்றை பிரகடனப்படுத்த வேண்டும் என சிபார்சு செய்தனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரப் பிரகாரம் 2000 வருடம் முதல் சர்வதேச இளைஞர் தினம் (International Youth Day) ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி கொண்டாடப்படுகிறது.

இளைஞர்களை நெறிப்படுத்தி, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி செளபாக்கியமான எதிர்காலமொன்றுக்கு வழிகாட்டுவதும் அவர்களது உணர்வுகளை சிறந்த முறையில் நெறிப்படுத்துவதும், நம்பிக்கை உணர்வினையும், வெற்றி மனப்பாங்கினையும் ஏற்படுத்துவதுடன், இளைஞர்களின் செயற்பாடுகளை கெளரவித்து மதிப்பளிப்பதும் இத்தினத்தின் முக்கிய நோக்கமாகக் கொள்ளப்படுகிறது.

ஆனாலும் எமது நாட்டை பொறுத்த வரை இளைஞர் விவகாரங்களுக்கென பிரத்தியேக அமைச்சொன்று செயற்பட்டு வருகிறது. அத்துடன் மகரகமவில் இளைஞர்களுக்கான மத்திய பயிற்சி நிலையமொன்று இயங்குவது வரவேற்கத்தக்கதாகும்.

இளைஞர்களிடையே சில பண்புகள் உண்டு. காரியத்தை ஆற்றும் துணிவு, சிந்தனை சக்தி, அறிவு வளர்ச்சி, திட்டமிடும் செயல், எடுத்த காரியத்தை முடிக்கும் செயற்பாடு ஆகியனவாகும். எமது நாட்டில் அந்நிய முதலீட்டை ஈட்டுக்கொடுப்பதில் இளைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு, முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள், உல்லாசப் பயணத்துறை மற்றும் விளையாட்டுத்துறை ஆகியவற்றிலும் பிரகாசிப்பவர்கள் இளைஞர்களேயாவர்.

இளைஞர் சமுதாயத்தை குறிவைத்தே போதைவஸ்து விற்பனையும் இடம்பெறுவது துக்ககரமான செயற்பாடாகும். எமது நாட்டில் இளைஞர்கள் வீதமே அதிகம். அரசியல், சமூக சேவைகள், உற்பத்தி முயற்சிகளில் இளைஞர்கள் நுழைந்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகமாக அதிகரிக்கும். அதற்கேற்ப சிறந்த வழிகாட்டிகளை உருவாக்குவது காலத்தின் தேவையாகும்.

அரசாங்கமும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை பயிற்றுவிக்க பல திட்டங்களை முன்னெடுக்கின்றது. அண்மையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டின் பின்னர் இளைஞர்களுக்கென பிரத்தியேக மாநாடொன்றும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். நாட்டின் நலத்திட்டங்களுக்கு இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து பயணிக்க உதவிகள் புரிதல் வேண்டும். அதுவே வளமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி