ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 03
விஜய வருடம் தை மாதம் 22ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, FEBRUARY , 03, 2014
வரு. 82  இல. 29
 

அழகிரி மெளன விரதம் ஏன்?

அழகிரி மெளன விரதம் ஏன்?

தி. மு. க., தென் மண்டல அமைப்புச் செயலர் பதவியை பறிகொடுத்த அழகிரி, தன் பிறந்த நாள் விழாவிற்கு பின், ‘ஆழ்ந்த’ மெளனம் காத்து வருவது, அரசியல் வட்டாரத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சுவரொட்டி பிரச்சினையால் ஆதரவாளர்கள் நீக்கம், நகர தி. மு. க., பொறுப்புகள் கூண்டோடு பறிப்பு, நிர்வாகிகளுக்கு கட்சி விதித்த கட்டுப்பாடு என அடுத்தடுத்த இடையூறுகளையும் தாண்டி, ஜன., 30ல் தன் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி முடித்தார் அழகிரி.

அனைத்து மாவட்டங்களில் இருந்தும், மாவட்ட செயலர்கள் மீதான அதிருப்தியாளர்கள், பிறந்த நாள் விழாவில் ஒன்று கூடியதால், தி. மு. க., தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பின், அழகிரி சொன்னது போல், தலைமைக்கு எதிராக, ஜன. 31ல் கட்சித் தேர்தல் முறைகேடுகள் குறித்த ஆதாரங்களை வெளியிடுவார் என, எதிர்பார்த்தவர்கள் ஏமாந்தனர்.

‘நான் அப்படி கூறவில்லை’ என அழகிரி நழுவினார். இதன்பின், தொடர்ந்து அமைதி காத்து வந்த அழகிரி தன் பிறந்த நாள் விழாவின் போது கூட்ட நெரிசலில் சிக்கி, காலை உடைத்துக்கொண்ட, சென்னை, ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த, கருணாகரன், வீட்டிற்குச் சென்று, அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு மதுரை திரும்பினார். சென்னையில் அழகிரியிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு 10 நாட்களாக, நான் உங்களுக்குத் தேவையான பதில் சொன்னேன், போதும், ‘என கூறிவிட்டு, ஏதாவது பேசினால், சர்ச்சையாகி விடும், என்று எதுவும் பேசவில்லை.

அழகிரி மெளனம் குறித்து அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் கூறியதாவது: பிறந்த நாளுக்கு கூடிய கூட்டத்தை, கட்சித் தலைமை எதிர்பார்க்கவில்லை. முக்கியமாக எந்த மாவட்டத்தில், தி. மு. க., விற்கு அதிக அதிருப்தியாளர்கள் இருந்தனர் என்ற தகவலும் கிடைத்துள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில், அழகிரியுடன் சமரசம் தான் நல்லது என சில மூத்த தலைவர்களும் கருத்து தெரிவித்து உள்ளனர். அதனால் தான், பிறந்த நாளில் பங்கேற்ற எம்.பி.க்கள் மீதும் நடவடிக்கை எடுக்க தலைமை யோசிக்கிறது.

தி. மு. க., முக்கியத் தலைவர் ஒருவரும் அழகிரியிடம் பேசியுள்ளார். அதனால் தான், அவர் மெளனமாகியுள்ளார். அவரது நோக்கம், அமைதியாக இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பழைய பொறுப்புக்களை பெற்றுத் தருவது தான். ‘அதுவரை அமைதியாக இருப்போம்’ என கூறியுள்ளார்.

மதுரை நகர் உட்கட்சி நிர்வாகிகள் தேர்தல் தொடர்பாக பெப்ரவரி 8 அல்லது 9ல் கட்சித் தலைமை முக்கிய முடிவு ஒன்றை வெளியிட உள்ளதாக, தகவல் கசிந் துள்ளது.

அதாவது தேர்தல் நடத்தாமல், அனைத்து வார்டுகளுக்கும், ‘தற்காலிக அமைப்பாளர்கள்’ நியமனம் செய்வதே அந்த முடிவு.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி