ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 03
விஜய வருடம் தை மாதம் 22ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, FEBRUARY , 03, 2014
வரு. 82  இல. 29
 

4 எம். எல். ஏ.க்கள் எனக்கு ஆதரவு; அரசை கவிழ்க்கப் போவதாக பின்னி மிரட்டல்

கெஜ்ரிவால் அரசுக்கு சிக்கல்;

4 எம். எல். ஏ.க்கள் எனக்கு ஆதரவு; அரசை கவிழ்க்கப் போவதாக பின்னி மிரட்டல்

புதுடில்லியில் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்கப் போவதாக ஆம் ஆத்மியில் இருந்து வெளியேற்றப்பட்ட எம். எல். ஏ. வினோத்குமார் பின்னி மிரட்டியுள்ளார்.

டில்லி மந்திரி சபையில் இடம் கிடைக்காத வினோத்குமார் பின்னி எம். எல். ஏ. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதை அடுத்து ஆம்ஆத்மி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

இதனை அடுத்து கடந்த வாரம் வினோத்குமார் பின்னி கெஜ்ரிவாலுக்கு எதிராக ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருந்தார். பின்னர் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் மற்றும் அன்னா ஹசாரேவின் கோரிக்கையை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிடுவதாக கூறி 4 மணி நேரங்களில் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

இந்நிலையில் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட எம். எல். ஏ. வினோத்குமார் பின்னி தனக்கு 4 எம். எல். ஏ.க்கள் தனக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார். அரசை கவிழ்க்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

டில்லியில் 70 உறுப்பினர்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு 27 உறுப்பினர்கள் உள்ளனர். பெருமுபான்மைக்கு 36 உறுப்பினர்கள் போதுமானது. ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் கட்சியின் 8 உறுப்பினர்கள், ஜனதா தளம் கட்சியின் ஒரு உறுப்பினர் மற்றும் ஒரு சுயேச்சை உறுப்பினர் ஆதரவு அளித்து வந்தனர். இந்நிலையில் எம். எல். ஏ. வினோத்குமார் பின்னி வெளியேற்றப்பட்டார்.

இதனை அடுத்து வினோத் குமார் பின்னி தனக்கு ஜனதா தளம் மற்றும் சுயேச்சை எம். எல். ஏ.க்கள் ஆதரவு அளிக்கின்றனர். இந்நிலையில் தங்களது கோரிக்கைகள் குறித்து 48 மணி நேரங்களில் ஆலோசிக்கவில்லை என்றால், ஆதரவு எம். எல். ஏ.க்களுடன் சேர்ந்து துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கை சந்தித்து ஆதரவை வாபஸ் பெறப்போவதாக மிரட்டியுள்ளார். அவர்கள் ஆதரவை வாபஸ் பெற்றால் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்படும்.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பின்னி 5 புகார்களை கூறியுள்ளார். இரண்டு ஆத் ஆத்மி எம். எல். ஏ.க்களும் தனக்கு ஆதரவு அளிப்பதாக பின்னி கூறியுள்ளார். மேலும் குடிநீரு மற்றும் மின்சாரம் தொடர்பான பிரச்சினைகளை ஆம் ஆத்மி அரசு உடனடியாக தீர்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி