ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 08, 2013
வரு. 81 இல. 238
 

புதிய அரசு அமைக்க தலைமை ஏற்க வாருங்கள்; ராகுல் காந்தியிடம் பிரதமர் வலியுறுத்தல்

புதிய அரசு அமைக்க தலைமை ஏற்க வாருங்கள்; ராகுல் காந்தியிடம் பிரதமர் வலியுறுத்தல்

குற்ற வழக்குகளில் 2 ஆண்டுக்கு மேல் சிறைத் தண்டனை பெறும் எம்.பி., எம். எல். ஏ.க்களின் பதவியை பறிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஜுலை மாதம் 10 ஆம் திகதி அதிரடியான தீர்ப்பை வெளியிட்டது.

கிரிமினல் அரசியல்வாதிகளை காப்பாற்றும் விதமான மத்திய அரசு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்து அதை அவசர சட்டமாக அறிவித்தது.

இந்த அவசர சட்டம் முட்டாள்தனமானது என்று ராகுல் காந்தி தெரிவித்ததால் சர்ச்சை வெடித்தது. இதை தொடர்ந்து மத்திய அரசு அவசர சட்டத்தை வாபஸ் பெற்றது.

இந்த அவசர சட்டம் தொடர்பாக ராகுல் காந்தி கடந்த 2 ஆம் திகதி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார்.

அப்போது ராகுல் காந்தியிடம் பிரதமர் பேசிய விவரம் தற்போது வெளியாகி உள்ளது. தீவிர அரசியலில் ஈடுபட்டு அடுத்த அரசு அமைக்க தலைமை தாங்க வாருங்கள் என்று ராகுல் காந்தியிடம் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தி இருக்கிறார்.

81 வயதான மன்மோகன் சிங் 3 வது முறையாக பிரதமர் பதவியை ஏற்க விரும்பவில்லை. அடுத்த பாராளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் தன்னால் அந்த பதவியில் நீடிக்க இயலாது என்பதையும் ராகுல் காந்தியிடம் அவர் தெரிவித்து இருக்கிறார். இதனால்தான் ராகுலை தலைமை ஏற்க வருமாறு அவர் வலியுறுத்தி இருக்கிறார். ராகுல் காந்தி, தற்போது காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருக்கிறார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி