ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 08, 2013
வரு. 81 இல. 238
 

சீமாந்திராவில் மின் ஊழியர் போராட்டம் 13 மாவட்டங்கள் இருளில் மூழ்கின

சீமாந்திராவில் மின் ஊழியர் போராட்டம் 13 மாவட்டங்கள் இருளில் மூழ்கின

தெலுங்கான மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திராவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

கடந்த 4 நாட்களாக ரோயல் சீமா, கடலோர ஆந்திராவில் நடந்த முழு அடைப்பு காரணமாக சீமாந்திரா முடங்கியது.

கடந்த 4 நாட்களாக எல்லா கடைகளும் மூடப்பட்டிருந்தன. பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

சீமாந்திராவின் பல பகுதிகளில் நேற்று முன்தினம் நடைபெற்ற போராட்டங்களின் போது வன்முறை வெடித்தது. இதனால் தீவைப்பு கல்வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்தன. இதையொட்டி ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

விஜயவாடா உட்பட சில நகரங்களில் நேற்று முன்தினம் பதற்றம் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து பொதுமக்கள் திரள்வதை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. என்றாலும் தடையை மீறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கலவரம் செய்பவர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது போராட்டக்காரர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எங்களை சுட்டாலும் பரவாயில்லை, தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்று போராட்டக் குழுவினர் கூறியுள்ளனர். இதையடுத்து பதற்றமான பகுதிகளுக்கு கூடுதல் பொலிஸ் படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சீமாந்திராவில் நேற்று (திங்கட்கிழமை) 5வது நாளாக தீவிர போராட்டங்கள் நடந்தன. போக்குவரத்து தொடங்கினாலும் வாகனப் போக்குவரத்து குறைவாகவே இருந்தது. பல இடங்களில் வீதிகளில் டயர்களை எரித்தும் கற்களை தூக்கிப் போட்டும் தடை ஏற்படுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் அடுத்தக் கட்ட போராட்டம் பற்றி பல்வேறு அமைப்புகளும் ஆலோசனை நடத்தி வருகின்றன. ஐதராபாத்தில் ஜெகன்மோகன் ரெட்டியும், டில்லியில் சந்திரபாபு நாயுடுவும் உண்ணாவிரதம் இருப்பதால் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ், தெலுங்குதேசம் தொண்டர்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் சீமாந்திராவில் தொடர்ந்து போராட்டங்களும், பதற்றமும் நீடிக்கிறது. இதற்கிடையே முழு அடைப்பில் ஈடுபட்ட சீமாந்திரா மின் ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை காலவரையற்ற போராட்டமாக மாற்றியுள்ளனர். இதனால் மின் உற்பத்தி, மின் பகிர்மானம் மற்றும் அவசர மின் சேவை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் சுமார் 40 ஆயிரம் மின் ஊழியர்கள் நேற்று எந்த வேலையிலும் ஈடுபடாமல் புறக்கணித்தனர்.

இதனால் சீமாந்திராவில் தினமும் 4 ஆயிரம் மேகா வோட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இது சீமாந்திராவில் உள்ள 13 மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாவட்டங்களில் உள்ள சுமார் 2 ஆயிரம் கிராமங்கள் கடந்த 2 நாட்களாக மின்சாரம் இல்லாமல் துண்டிக்கப்பட்டுள் ளன.

மின் ஊழியர்கள் போராட்டம் காரணமாக நெல்லூர் மாவட்டம் தான் அதிகபட்ச பாதிப்பை சந்தித்துள்ளது. அந்த மாவட்டத்தில் மட்டும் 800 கிராம மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் சீமாந்திரா பகுதிகளில் ரயில் சேவைகள் நிறுத்தப் பட்டுள்ளன. 40 ரயில்கள் நேற்று இயக்கப்படவில்லை.

சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் 4 ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி