ஹிஜ்ரி வருடம் 1432 துல்கஃதா பிறை 02
கர வருடம் புரட்டாதி மாதம் 13ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, SEPTEMBER 30, 2011
வரு. 79 இல. 231
 

வட்டியில்லா வங்கி இஸ்லாமிய சட்டத்துக்கு ஏற்புடையதா?

வட்டியில்லா வங்கி இஸ்லாமிய சட்டத்துக்கு ஏற்புடையதா?

விளக்கம் தருகிறார் வை. எல். எம். மாஜித்

B.A. (Hons)
Special in Islamic Banking and Finance

,ஸ்லாமிய வங்கிகளை குறை கூறி பாரம்பரிய வங்கிகளில் வட்டியில் முழுமையாக மூழ்குவதனை விட இஸ்லாமிய வங்கிப் பிரிவுகளிலேனும் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வது சிறந்ததே!

கடந்த 2011 செப்டம்பர் மாதம் 9ம் திகதி தினகரன் பத்திரிகையில் ஆலமுல் இஸ்லாம் பகுதியில் சகோதரர் என்.பி. றியால்தீன் என்பவர் ‘வட்டியில்லா வங்கி இஸ்லாமிய சட்டத்துக்கு ஏற்புடையதா?’ என்ற தலைப்பில் கட்டுரை வடிவிலான கேள்விகளை தொடுத்திருந்தார்.

எனவே, அவருடைய கேள்விகளுக்கான விடைகளையும் கட்டுரை வடிவிலே தொடுக்கலாமென நினைக்கின்றேன். ஏனெனில், சகோதரர் றியால்தீனைப் போன்ற இன்னும் எத்தனையோ சகோதர்களுக்கும் கூட இது பிரயோசனமாக அமையலாம்.

சகோதரனின் வினாக்களுக்கு விடை காண்பதற்கு முன்பதாக இஸ்லாமிய வங்கி முறைமை என்றால் என்ன? அதன் அடிப்படைகள் என்ன? அவ்வங்கி முறைமையினை முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் அமுல்படுத்துவதில் செல்வாக்கு செலுத்தும் தடைக்காரணிகள் போன்ற பொதுவான விடயங்களை நோக்குதல் அவசியமாகும்.

இங்கு முதலில் நாம் வட்டியில்லாத வங்கி முறைமை அதாவது இஸ்லாமிய வங்கி முறைமை என்றால் என்ன? என்று புரிந்து கொள்ள வேண்டும். இது பற்றி இஸ்லாமிய அறிஞர்களும் கூட பல்வேறு வரைவிலக்கணங்களை முன்வைத்துள்ளனர்.

“இஸ்லாமிய வங்கி முறை என்பது அவசியம், அது ஆத்மீகத்திலிருந்து பிரித்தெடுக்க முடியாத ஒரு துறையாகும். இஸ்லாத்தின் உறுதிமிக்க அடிப்படைகளுக்கு ஏற்ப அவை வரையறுக்கப்பட்டதாக காணப்படும்”  Dr. Ziauddin Ahamed  கூறுகின்றார்.

“இஸ்லாமியப் பொருளாதார வழியில் செல்வத்தைப் பயன்படுத்துவதற்கும், வளப் பங்கீட்டை சீர்படுத்துவதற்கும், நீதியையும் சமூகப் பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதற்கும், சேவைகளை வழங்குவதற்கும், செல்வங்களை ஒன்று திரட்டி தொழில் முயற்சிகளில் ஈடுபடுகின்ற நிதிசார் நடவடிக்கைகளை இஸ்லாமிய வரையறைக்குள் மேற்கொள்கின்ற நிறுவனமே இஸ்லாமிய வங்கியாகும்” என டொக்டர் அஹமட் நஜ்ஜார் என்ற அறிஞர் கூறுகின்றார்.

மேற் குறித்த விளக்கங்களை வைத்து நோக்கும் போது இஸ்லாமிய வங்கி முறைமை (Islamic Banking System)  என்பது கொடுக்கல் வாங்கலின் போது அல்லது பணப்பரிமாற்றலின் போது வட்டியிலிருந்து தவிர்த்துக்கொள்ளக் கூடிய மத்திய மயப்படுத்தப்பட்ட ஒரு நிதிக் கொள்கையாகும். மற்றும் இஸ்லாமிய பொருளாதாரத்தினுடைய நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு உதவி புரியக் கூடிய வகையில் செயற்பாடுகளை அமைத்துக் கொள்வதுமாகும். பொருளியல் சமத்துவத்தை போதிக்கும் இஸ்லாமிய அடிப்படைகளிலிருந்து கட்டியெழுப்பப்பட்டதாகும்.

எனவேதான் இலாபம் நட்டம் ஆகிய இரண்டையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய உன்னத தன்மை வாய்ந்ததாகும். எனவே இஸ்லாமிய வங்கிகள் ஜிழிஷி PLS (Profit and Lost Sharing என அடையாளப்படுத்தப்படுகின்றன.

அந்தவகையில் இஸ்லாமிய வங்கியியலின் அடிப்படைகளை நாம் பின்வருமாறு நோக்கலாம்.

1. வட்டியிலிருந்து விடுபடல்

2. நிச்சயமற்ற தன்மையிலிருந்து தவிர்ந்து கொள்ளல்

3. சூதாட்டத்தை நிராகரிக்கின்றது.

4. ஹராம் - ஹலால் பற்றி கவனத்திற் கொள்கின்றது.

5. ஸகாத் - இஸ்லாமிய வரியை பேணி நடைமுறைப்படுத்துகின்றது.

எனவே இஸ்லாமிய வங்கியொன்று தனது செயற்பாடுகளை மேற்கொள்ளும்போது மேற்கூறப்பட்ட அடிப்படைத் தத்துவங்களினை பின்பற்றியே செயற்பட வேண்டும். ஏனெனில் அவை இஸ்லாமிய பொருளியல் கோட்பாட்டினை அடியொட்டியதாகும். இஸ்லாமிய பொருளியல் கோட்பாடானது ஏனைய பொருளியல் கோட்பாடுகளை போன்றல்லாமல் இறைவனிடமிருந்து பெறப்பட்டதாகும்.

இக்கோட்பாடானது இஸ்லாமிய அடிப்படை சட்ட மூலாதாரங்களான அல்குர்ஆன், அல்ஹதீஸ் என்பவற்றின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டதாகும். எனவேதான் அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் வாழும் ஒவ்வொரு முஸ்லிமும் வட்டியில்லாத வங்கிமுறையான இஸ்லாமிய வங்கிமுறையினடிப்படையில் இஸ்லாமிய ஷரீஆவிற்குட்பட்ட முறையில் தமது கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும்.

இன்றைய உலகில் இஸ்லாமிய வங்கியியல் முறையொன்று முஸ்லிம் அறிஞர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை இது பல்வேறு பிரச்சினைகளையும் எதிர்நோக்குகின்றது என்பது மறுப்பதற்கில்லை.

அந்த வகையில் இஸ்லாமிய வங்கியியல் எதிர்நோக்குகின்ற பாரியதொரு பிரச்சினை முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழுகின்ற நாடுகளில் இஸ்லாமிய வங்கி முறைமையை நடைமுறைப்படுத்துவதாகும். முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழுகின்ற நாடுகளில் இஸ்லாமிய வங்கி முறைமையை நடைமுறைப்படுத்துவதில் பின்வரும் பிரதான காரணிகள் தடைக்காரணிகளாக காணப்படுகின்றன.

1. இஸ்லாமிய வங்கிகளுக்கென ஒரு தனியான மத்திய வங்கி காணப்படாமை.

2. இஸ்லாமிய வங்கிகளின் வளர்ச்சியின் போது அரசினது அல்லது மத்திய வங்கியினது தலையீடுகளுக்கு, கட்டுப்பாடுகளிற்கு உட்படல்.

3. தற்போது நடைமுறையிலுள்ள கவர்ச்சிகரமான வட்டியுடன் கூடிய வங்கிகளுடன் போட்டி போட முடியாமை.

4. இஸ்லாமிய வங்கிகள் கிளைகளை அமைத்து தமது சேவைகளையும், நடவடிக்கைகளையும் விஸ்தரிக்க முடியாமை.

5. இஸ்லாமிய பொருளாதார, முதலீட்டு நடவடிக்கைகள் பற்றிய அறிவின்மைகளும், முதலீடுகளில் திருப்தி கொள்ளாமையும்.

நமது நாடான இலங்கையும் முஸ்லிம்களையும் சிறுபான்மையினராகக் கொண்ட நாடாகும். இங்கு முஸ்லிம்கள் 8 சதவீதத்தினரே வாழ்கின்றனர். எனினும் இஸ்லாமிய வங்கித்துறையை பொறுத்தமட்டில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி கண்டுள்ளதென கூறிக்கொள்ள முடியும்.

ஏனெனில் முஸ்லிம்களை சிறுபான்மையாகக் கொண்டுள்ள நாடுகளில் இஸ்லாமிய வங்கி முறைமையை அமுல்படுத்துவதில் பிரச்சினைகள் காணப்பட்ட போதிலும், இலங்கையில் 1988 ஆம் ஆண்டு வங்கியியல் சட்டமானது 2005 ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டதன் பின்னர் வர்த்தக வங்கிகளுக்கும், விசேட வங்கிகளுக்கும் ஷரீஆவினடிப்படையில் செயற்பாடுகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டது.

அதன் வெளிப்பாடுதான் இன்று இலங்கையில் காணப்படுகின்ற இஸ்லாமிய வங்கிகளாகும். அது மட்டுமன்றி பாரம்பரிய வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கூட இன்று இஸ்லாமிய வங்கிப் பிரிவுகளை (Islamic Banking Windows) உருவாக்கி தமது சேவைகளை இலங்கையின் பல பாகங்களிலும் விஸ்தரித்துள்ளது.

இனி சகோதரரின் வினாக்களிற்கான விடைகளை ஆராயலாம் என நினைக்கிறேன். அந்த அடிப்படையில் இலங்கையில் செயற்படும் இஸ்லாமிய வங்கிகள் ஹலால் ஹராம் பேணுதலுடையதா? இஸ்லாமிய ஷரீஆ விதிமுறைகளிற்கு உட்பட்டதா? என்ற சந்தேகம் சகோதரர் றியால்தீனைப் போன்ற எத்தனையோ சகோதரர்களின் உள்ளங்களில் ஊசலாடலாம்.

இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் வட்டியுடன் கூடிய வங்கி முறையான பாரம்பரிய வங்கி முறையிலிருந்து விடுபட்டு இஸ்லாமிய வங்கி முறையினடிப்படையிலான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள வேண்டுமென சிந்தித்த முஸ்லிம் அறிஞர்கள், உலமாக்கள் இஸ்லாமில் வங்கி முறையியலின் பக்கம் தமது கவனத்தை திருப்பி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அந்தவகையில் ஹராம் -ஹலாலினடிப்படையில் இஸ்லாமிய ஷரீஆவிற்கு உட்பட்ட முறையில் செயற்பட வேண்டும் என்பதற்காகத்தான் இஸ்லாமிய வங்கிகளும், வங்கிப் பிரிவுகளும் தமது செயற்பாடுகளை மேற்பார்வை செய்ய தமக்கென தனித்தனியான ஷரீஆ சபைகளையும் உருவாக்கியுள்ளன.

அந்த ஷரீஆ சபைகளில் இலங்கையிலுள்ள கல்விமான்களும், பிரபலமான உலமாக்களும், மார்க்க அறிஞர்களும், மற்றும் சர்வதேச தரத்திலான ஷரீஆ சட்ட நிபுணர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இதற்கு உதாரணமாக அமானா வங்கியின் ஷரீஆ சபையின் தவிசாளராக பாகிஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியும், சர்வதேச நிதியியல் நிறுவனத்துக்கான கணக்கியல் மற்றும் கணக்காய்வு சபையின் (AAOIFI)  தவிசாளரும், நிறைவேற்று அதிகாரியுமான “மெளலானா முஹமட் தகி உஸ்மானி” செயற்படுவதனைக் குறிப்பிடலாம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி