ஹிஜ்ரி வருடம் 1432 துல்கஃதா பிறை 02
கர வருடம் புரட்டாதி மாதம் 13ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, SEPTEMBER 30, 2011
வரு. 79 இல. 231
 

அல்லாஹ்வின் அன்பை பெறுவோம் !

அல்லாஹ்வின் அன்பை பெறுவோம் !

“(நபியே!) கூறுங்கள். நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ்வும் உங்களை நேசிப்பான். உங்களது பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் பாவங்களை மன்னிக்கும் நிகரற்ற கருணையாளனாக இருக்கிறான்.” (3:31)

இவ்வசனத்தில் அல்லாஹ்வை நேசிப்போரிடம் இருக்க வேண்டிய பண்புகளில் ஒன்றை அல்லாஹ் குறிப்பிடுகிறான். “அல்லாஹ்வை நேசிக்கிறோம்” என்று வார்த்தைகளால் கூறிவிடுவது மட்டும் போதாது. நீங்கள் அதனை செயலில் காட்ட வேண்டும்.

எந்த நேரத்திலும் எத்தகைய இக்கட்டான நிலையிலும் அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றக் கூடியவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். இதில் வரப்போகும் இலாப நட்டங்களைப் பற்றி நீங்கள் கவலைப்படவே கூடாது. இதுதான் ஒரு மனிதன் அல்லாஹ்வை நேசிக்கிறான் என்பதற்கு அடையாளமாகும். இதனை மற்றுமொரு விதமாகவும் கூற முடியும்.

மனிதர்களுக்கு அன்பு செலுத்த நினைத்தால் அவர்களை நேரில் கண்டு, உறவாடி நேசம் பாராட்டுகிறோம். எனினும், அல்லாஹ்வுடனான நேசத்தை அவ்வாறு ஏற்படுத்திக் கொள்ள முடியாது.

காரணம், நாம் அவனை நேரில் காண்பதில்லை. இவ்வுலகில் அது சாத்தியமுமில்லை. நபிகளாரைப் பொறுத்தவரையிலும் இதே நிலைதான். ஸஹாபிகளுக்குப் பிறகு நபிகளாரை எவரும் கண்டதில்லை. எனவே, அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் மீதும் அன்பு கொள்வதற்கு ஒரே வழி அல்லாஹ்வின் கட்டளைக்கும் அவனது தூதரின் முன்மாதிரிக்கும் அமைய ஒரு மனிதன் தனது வாழ்வை அமைத்துக்கொள்வதாகும்.

இது ஈமானின் சுவையைத் தருகின்ற முதலாவது அம்சம். ஒரு மனிதனை நேசிக்கும்போது அல்லாஹ்வுக்காக அவனை நேசிப்பதே இரண்டாவது அம்சமாகும். இந்த நேசத்தின் சுருக்கமான விளக்கத்தை இவ்வாறு கூறலாம்.

அல்லாஹ்வின்பால் கனிந்த அன்பின் வெளிப்பாடாக அவனது அடியானின் பாலும் அன்பு சுரப்பது இயல்பானதே. ஒரு மனிதன் மீதான அன்பு இந்த அடிப்படையில் அமையுமாயின், அது களங்கமற்றதாகவே இருக்கும். அதில் சுயநல நோக்கங்களோ, குறுகிய மனப்பான்மையோ ஆட்சி செய்ய மாட்டாது.

எனவே, அல்லாஹ் விரும்புகின்ற இடங்களிலெல்லாம் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு அன்பு செலுத்துவான். அல்லாஹ் வெறுக்கின்ற இடங்களில் அவன் தனது அன்பைத் துண்டித்துக்கொள்வான்.

அன்பு செலுத்துகின்றபோது அவன் இலாபங்களை எதிர்பார்க்கவும் மாட்டான். அன்பைத் துண்டிக்கின்றபோது பாதிப்பு களுக்கோ அடுத்தவர்களது நிந்தனைகளுக்கோ ஆளாகுவதை அவன் பொருட்படுத்தவும் மாட்டான்.

அதுமட்டுமல்ல, அல்லாஹ்வுக்காக அன்பு செலுத்தும்போது நாம் விரும்பாத மனிதனாக இருந்தாலும், அவன் மீது எங்களால் அன்பு செலுத்த முடிகிறது. நாங்கள் விரும்புகின்ற மனிதனாக இருந்தாலும் அவனோடு உள்ள அன்பை எங்களால் துண்டிக்கவும் முடிகிறது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி