ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 06
கர வருடம் ஆனி மாதம் 24ம் திகதி சனிக்கிழமை
SATURDAY, JULY 09, 2011
வரு. 79 இல. 160
 

கேரளாவில் 26 பேருக்கு பன்றிக்காய்ச்சல் தமிழகத்தில் பரவாது தடுக்க தீவிர கண்காணிப்பு

கேரளாவில் 26 பேருக்கு பன்றிக்காய்ச்சல் தமிழகத்தில் பரவாது தடுக்க தீவிர கண்காணிப்பு

கேரளாவில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், குமரி உட்பட எல்லைப்புற மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை தீவிரம் காட்டி வருகிறது. கேரளாவில் தற்போது ‘எச்1என்1’ எனப்படும் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அங்குள்ள ஆலப்புழா மாவட்டத்தில் மட்டும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் பன்றிக்காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து கேரளாவையொட்டி யுள்ள எல்லைப்புற மாவட்டங்களான தமிழகத்தை சேர்ந்த குமரி, கோவை மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 50க்கும் மேற்பட்டவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வர்களை தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிறப்பு வார்டு ஒன்றும் திறக்கப்பட்டது.

தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் சுகாதார துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது பற்றி குமரி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மதுசூதனன் கூறியதாவது, கேரளாவில் பன்றிக் காய்ச்சல் (எச்1 என்1) பரவுகிறது என்ற தகவல் தெரியவந்தவுடன், இது தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள் குமரி மாவட்டத்தில் சுகாதார துறையால் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த வாரமே மாவட்டத்தில் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களுக்கும் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாட்பட்ட சளி, இருமல், தொண்டை வலி, உடல் வலி, காய்ச்சலுடன் வரும் நோயாளிகளில் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் வருவோரை கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று கேரளாவில் இருந்துவரும் தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகளில் காய்ச்சலுடன் வந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர், தொழில் நிமித்தமாக சென்றுவிட்டு வரும்போது தீராத காய்ச்சலுடன் வருவோரை அடையாளம் காண சுகாதாரத்துறை பணியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கிராமப்புறங்களில் களப்பணியில் ஈடுபடும் இவர்கள் இது தொடர்பாக தகவல்களை சேகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் இதுவரை பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏதும் கண்டறியப்படவில்லை. பன்றிக் காய்ச்சல் அறிகுறி உள்ளோர் தும்மல், இருமல் வரும்போது கைக்குட்டையை பயன்படுத்துவதன் மூலம் அருகில் உள்ள மற்றவர்களுக்கு நோய் பரவாமை தடுக்கலாம். இவ்வாறு மதுசூதனன் தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி