ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 06
கர வருடம் ஆனி மாதம் 24ம் திகதி சனிக்கிழமை
SATURDAY, JULY 09, 2011
வரு. 79 இல. 160
 

தொடர் வெற்றி எதிர்பார்ப்புடன் இலங்கை - இங்கிலாந்து இன்று களத்தில்

தொடர் வெற்றி எதிர்பார்ப்புடன் இலங்கை - இங்கிலாந்து இன்று களத்தில்

இலங்கை- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடரை தீர்மானிக்கும் ஐந்தாவதும் கடைசியுமான ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் இன்று நடைபெறவுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் நடந்து முடிந்த 4 போட்டிகளில் இலங்கை அணி 2, 3 ஆவது போட்டிகளை தொடர்ந்து வென்றதோடு, இங்கிலாந்து முதலாவது மற்றும் 4 ஆவது போட்டிகளில் வெற்றியீட்டியது. இதன்படி இரு அணிகளும் தொடரை கைப்பற்றும் எதிர்பார்ப்புடன் இன்று பலப்பரீட்சை நடாத்தவுள்ளன.

இதில் இலங்கை அணி தான் வெற்றியீட்டிய போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதோடு தோல்வி அடைந்த இரு போட்டிகளிளும் சரசரியான ஆட்டத்தைக் கூட வெளிக்காட்டவில்லை. தொடர் வெற்றியை பெறுவதற்கு இந்த குறைபாட்டை இலங்கை தவிர்த்துக்கொள்ள வேண்டும். அதேபோன்று முதல் 5 துடுப்பாட்ட வீரர்களுள் குறைந்தது மூவராவது சோபிப்பது கட்டாயமாகும்.

அதிலும் முன்னணி வீரர்களான சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் அணித்தலைவர் டில்ஷான் ஆகியோருள் இருவரேனும் சிறப்பாக செயல்பட்டால் இங்கிலாந்துக்கு சவால் விடுக்க முடியும். குறிப்பாக இந்த தொடரில் இலங்கை அணி வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான களத்தில் துடுப்பெடுத்தாட தடுமாறி வருகிறது. இதனை இங்கிலாந்து தனக்கு சாதகமாக இன்றைய தினத்தில் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு உள்ளது. எனினும் இன்றைய போட்டி நடைபெறும் மான்செஸ்டர் ஒல்ட் டிரபட் அரங்கு சுழற்பந்துக்கும் சாதகமான அரங்கு என்பது ஆறுதல் அளிக்கிறது. இங்கு இலங்கை அணி இதற்கு முன்னர் விளையாடிய 4 போட்டிகளில் மூன்றில் இலங்கை அணியால் வெல்ல முடிந்துள்ளது. ஒன்றில் மாத்திரமே தோற்றுள்ளது.

எனவே, இன்றைய போட்டியல் இலங்கை சுழற் பந்துவீச்சாளர்கள் சரியாக செயல்பட்டால் இங்கிலாந்து அணியின் ஓட்டங்களை மட்டுப்படுத்த முடியும். அத்துடன் மாலிங்க உட்பட வேகப்பந்து வீச்சாளர்கள் சோபித்தால் இலங்கையின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். மறுபுறத்தில் தனது சொந்த மண்ணில் தொடரை வெல்லும் எதிர்பார்ப்போடு அலஸ்டயர் குக் தலைமையிலான இங்கிலாந்து அணி களமிறங்குகிறது. இதில் 4 ஆவது போட்டியில் ஆரம்ப வீரர்களான குக், கிஸ்விட்டர் ஆகியோர் சிறப்பாக துடுப்பெடுத்தாடினர். இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது. இவர்களுடன் பீட்டர்ஸன், மோர்கன் ஆகிய முன்னணி வீரர்கள் அரைச்சதத்தை தாண்டினால்கூட இலங்கைக்கு சவால் விடுக்க முடியும். அதேபோன்று பந்துவீச்சில் அன்டர்ஸன், பிரோட் மற்றும் ஸ்வான் ஆகியோர் சோபித்தால் இங்கிலாந்தின் வெற்றியை தவிர்க்க முடியாது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி