ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 06
கர வருடம் ஆனி மாதம் 24ம் திகதி சனிக்கிழமை
SATURDAY, JULY 09, 2011
வரு. 79 இல. 160
 

தெலுங்கானா தனி மாநிலம் கோரி அனைத்து கட்சிகளும் சேர்ந்து மீண்டும் போராட்டம்

தெலுங்கானா தனி மாநிலம் கோரி அனைத்து கட்சிகளும் சேர்ந்து மீண்டும் போராட்டம்

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பகுதியைப் பிரித்து தனி மாநிலமாக அறிவிக்கும்படி இந்தப் பகுதியில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி எம். பி. எம். எல். ஏக்கள், எம். எல். சி.க்கள் 100 பேர் கட்சி வேறுபாடின்றி ராஜினாமா செய்துள்ளனர். தெலுங்கானா கூட்டு போராட்டக்குழு சார்பில் கடந்த 4ம் திகதி நள்ளிரவு முதல் 2 நாட்கள் பந்த் நடத்தப்பட்டது. வங்கிகள் அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன. இதனால் தெலுங்கானா மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பியது. அதே நேரம், ஹைதராபாத் உட்பட தெலுங்கானாவின் 10 மாவட்டங்களில் மாணவர் கூட்டுக்குழு சார்பில் நேற்று முன்தினம் கண்டன ஊர்வலங்கள், தர்ணா, ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் செய்யப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து தெலுங்கானாவில் இன்று மறியல் போராட்டமும் பொது இடத்தில் சமைக்கும் போராட்டமும் நடத்தப்படும் என்று கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்து இருந்தது. இந்நிலையில், கூட்டுக்குழுவின் தலைவர் கோதண்டராம ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் கூறுகையில, தெலுங்கானா கோரி தனித்தனியே போராடாமல், அனைவரையும் ஒன்றிணைத்து கூட்டாக போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் எம். பி. க்கள் எம். எல். ஏ. க்களுடனும் பேசி வருகிறோம். அடுத்த கட்டப் போராட்டம் பற்றி 2 நாளில் முடிவு செய்யப்படும். எனவே இன்றும் நாளையும் நடத்தப்பட இருந்த ரயில் மறியல் சமையல் போராட்டங்கள் ஒத்திவைக்கப்படுகின்றன என்றார். கூட்டு நடவடிக்கை குழுவில் இப்போது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பா. ஜ. மற்றும் பல்வேறு அமைப்புக்கள் இடம்பெற்றுள்ளன. அடுத்த கட்ட போராட்டத்தின் போது, காங்கிரஸ் தெலுங்கு தேசம் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் இதில் அணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போராட்டம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்துவதற்காக சில தினங்களுக்குமுன் பதவியை இராஜிமானாச் செய்த தெலுங்கு தேசம் கட்சி எம். எல். ஏக்கள் நேற்று பஸ் யாத்திரை தொடங்கினர். தெலுங்கானாவின் 10 மாவட்டங்களிலும் ஒரு வாரம் இந்த யாத்திரை நடக்க உள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி