ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 06
கர வருடம் ஆனி மாதம் 24ம் திகதி சனிக்கிழமை
SATURDAY, JULY 09, 2011
வரு. 79 இல. 160
 
தமிழின் சிறப்பை உலகெங்கும் பரப்புவதற்கு பாலமாக திகழ்ந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி

தமிழின் சிறப்பை உலகெங்கும் பரப்புவதற்கு பாலமாக திகழ்ந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி

ழத்துத் தமிழரின் பெருமையை உலகிற்கும் அதேபோல உலகில் உள்ள பல நல்ல விடயங்களை தமிழுக்கும் அறியச் செய்ததில் ஒரு பாலமாகவும் ஒரு முன்னோடியாகவும் விளங்கியது மாத்திரமல்லாது சங்க இலக்கியத்திற்கும் கணனி யுகத்தில் உருவான நவீன இலக்கியத்திற்கும் இடையிலான ஒரு ஊடாட்டத்தை உருவாக்கியவர் அமரர் பேராசிரியர் சிவத்தம்பி ஆவார்.

சங்ககால இலக்கியத்தையும் நவீனத்தையும் முறையாக கற்றறிந்தவர் அவர். தமிழின் தனிச் சிறப்பை மேற்குலகம் அறியச் செய்து தமிழின் புகழ் எட்டுத் திசை பரவுவதற்கு கால்கோளாக இருந்தவர்களில் முதன்மையானவர் பேராசிரியர் சிவத்தம்பி என்றால் அது மிகையாகாது.

'கற்றாருள் கற்றார் எனப்படுவர், கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார்' என்ற குறளுக்கு அமைவாக அறிஞர்கள் மத்தியில் அவர் கற்ற விடயங்களை மற்றவர்கள் இரசிக்கும்படியும் வியப்புறும் வகையிலும் சொல்லுவதன் மூலம் தனது தனித்துவத்தை நிலைநாட்டியவர்.

பேராசிரியரின் பணியானது வெறுமனே தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்தியதோடு மட்டும் நின்று விடாது பேராசிரியர் வித்தியானந்தனுடன் இணைந்து பண்டைய மரபு ரீதியான நாடகத்தையும் கூத்தையும் நாடகத்தையும் நவீன மயமாக்குவதிலும் தமிழ் இன்னியத்தை உருவாக்குவதிலும் எட்டப்பட்ட பெருமை பேராசிரியரையே சாரும்.

¡டகம், நுண்கலை, சமூகவியல், அரசியல், பொருளியல் போன்ற பல்துறைகளிலும் சிறந்த தேர்ச்சியுடனும் அவற்றை அதன் தளங்களில் நின்று மிகச் சரியாக அணுகியதுடன் புதிய முயற்சிகளுக்கும் முன்னின்று உழைத்து அவற்றை சர்வதேசத்திற்கும் கொண்டு சென்றவர் அவர்.

பேராசிரியர் சிவத்தம்பி அமரர்களான பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் வித்திகானந்தன் ஆகியோரின் சமகாலத்தவர். அத்தோடு இலங்கையில் இருக்கும் பேராசிரியர்களில் சர்வதேச மட்டத்தில் புகழுக்கும் பெருமைக்கும் உரியவர் என்றால் அது மிகையாகாது.

அண்மையில் தினகரனுக்கு இவர் அளித் பேட்டியில், 'நான் முன்னுதாரணமாகவோ, வழியாட்டியாகவோ இருப்பதை விரும்பவில்லை. என்னுடைய ஆளுமையின் ஆக்கத்தில் மூன்று அம்சங்கள் தங்கியுள்ளன. எனது தாயார் எழுத்தறிவு இல்லாதவர். ஆனால் எதையும் ஒரு இரங்கல் உணர்வுடன் பார்ப்பவர். என்னுடைய தந்தையார் ஒரு பண்டிதர். அத்துடன் ஒரு சைவப் புலவருமாவார். எந்த கஷ்டத்தையும் உள்நோக்கியே ஆராய்ந்து பார்ப்பார். அத்தோடு என்னுடன் மாக்ஸ்சிஸமும் சேர்கிறது. மாக்சிஸம் என்னுடன் சேர்ந்த பிறகு நான் எல்லாவற்றையும் வெளியில் வைத்து பார்க்கும் திறன் என்னுள் உருவாகியது. எனது வளர்ச்சிக்கு அடிப்படையாக எனது பெற்றோரின் பின்புலம், நான் கல்வி கற்ற பாடசாலைகளின் பின்புலம் எல்லாவற்றிற்கும் மேலாக மாக்சிய சிந்தனையுடன் தமிழ் மீதான பற்றுதலும் காரணமாக இருக்கலாம். அத்துடன் எனக்குள்ள மிகப் பெரிய பலமாக இருந்தது எனது மொழியாற்றல், ஆங்கிலம், தமிழ், சிங்கள மொழிகளுடன் பாஷைகளில் ஆர்வம் இருந்தபடியால் வேறு பல மொழிகளும் படித்ததுண்டு. கிaக், ஜேர்மன் ஆகிய மொழிகளைப் படித்திருக்கிறேன். ஆனால் மொழி என்பது தொடர்ந்து பேசுவதிலும், காதினால் கேட்பதிலுமே தங்கியிருக்கிறது. அவற்றை பேசாவிட்டாலும் கேட்காது விட்டாலும் அவை இல்லாமல் போய்விடும். என்னைப் பொறுத்தவரையில் இங்கிலாந்தில் ஏதாவது விடயங்கள் இருந்தால் அவற்றை தமிழ் உலகுக்கும் தெரிவிக்க வேண்டுமென்பதில் ஆர்வமாக இருந்திருக்கிறேன். இவற்றுக்கெல்லாம் நான் ஒரு காலாக இருந்திருக்கிறேன் என்பதை மட்டுமே நான் கூறிக் கொள்ள விரும்புகிறேன்' என்று கூறியிருந்தார்.

இவரின் விமர்சனம் அல்லது திறனாய்வுப் பார்வையானது மற்றையவர்கள் பார்க்கும் பார்வை போல்அல்லாது மாறுபட்டதாகவும் பலவித கோணங்களில் இருந்தும் நோக்கப்படுவதால் எமக்கு அவை பல உணர்வு பூர்வமானதும் அறிவுபூர்வமானது மான மாறுபட்ட பல விடயங்களை உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கின.

இதற்கு உதாரணமாக அண்மையில் தமிழக எழுத்தாளர் 'ஓர் ஈழத்தமிழன் பார்வையில் ஜெயகாந்தன் என்ற உலகப் பொது மனிதன்' என்ற குறும்படத்தில்ஜெயகாந்தனின் ஒவ்வொரு படைப்புக்களையும் அவரது பேச்சுக்க ளையும் மிக விரிவாகவும் நுணுக்க மாகவும் ஆராய்ந்திருந்தார்.

அவர் தனது வாழ்க்கையில் நிறைந்த திருப்தி தருவனவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நுண்கலை என்ற பாடத்தை ஒரு துறையாக்கும் முயற்சி யில் ஏற்பட்ட கஷ்டங்களையும் அதில் கிடைத்த வெற்றியையும் குறிப்பிட்டார்.

தமிழ் இலக்கியத்தை ஆழமாகப் படிப்பதற்கு எனக்கு மூன்று பேர் முக்கியம். இளங்கோ, கம்பன், பாரதி, இதில் பாரதியின் திறமையும் ஆளுமையும் இன்னமும் முழுமையாக வெளிக்கொணரப்படவில்லை. அது முழுமையாக வெளிக்கொணரப்பட வேண்டும். வெளிக்கொணரப் படாவிட்டால் அது தமிழுக்கு நாம் செய்யும் துரோகம். பாரதியின் ஆளுமையை பன்முகப்பட அவனை ஒரு தமிழனாக, ஒரு இந்தியனாக, சர்வதேசத் தலைவனாக, சர்வதேச அரசியல்வாதியாக, தேசபக்தி உள்ளவனாக காட்டுவது மிகவும் முக்கியம் என்றும் பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிட்டுள்ளார்.

உலகில் தமிழ் சார்ந்த ஏதாவது புதிய முயற்சிகளுக்கு பேராசிரியரின் பங்களிப்பானது தவிர்க்க முடியாததாக விளங்கியது. அவரது ஆளுமையே இதற்குக் காரணம். இதற்கு ஒரு சான்றாகஅமைவது கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாடு, அம்மாநாட்டில் பேராசிரியர் தலைமை வகித்து அதை நெறிப்படுத்தி உரையாற்றியமையானது இலங்கைத் தமிழரான எமக்கு சர்வதேசத்தில் புகழைச் சேர்த்தது.

இலங்கை இலக்கியப் பரப்பில் முதுபெரும் பேராசிரியர் சிவத்தம்பியின் வகிபாகமானது எவராலும் நிரப்பவோ அல்லது ஈடுசெய்யவோ முடி யாதொன்றாகும். அவரின் இழப் பானது தமிழ் கூறும் நல்லுலகில் ஒரு பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருப்பதை எவராலும் மறுக்க முடியாது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி