ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 18
கர வருடம் ஆனி மாதம் 06ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE 21, 2011
வரு. 79 இல. 145
 
நுளம்பு ஒழிப்புக்கு இடையூறு விளைவித்தால் கடும் நடவடிக்கை

நுளம்பு ஒழிப்புக்கு இடையூறு விளைவித்தால் கடும் நடவடிக்கை

அமைச்சர் மைத்திரிபால

நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக செயற்படுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார்.

நாடெங்கிலும் நேற்று ஆரம்பமான நுளம்பு ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களின் பணிகளுக்கு சில இடங்களில் இடையூறுகள் விளைவிக்கப்பட்டதாகவும், வேறு சில இடங்களில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நுளம்பு ஒழிப்பு பணிகளில் நேற்று ஈடுபட்டிருந்தவர்களுக்கு இடையூறு விளைவித்தவர்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்தவர்களுக்கும் எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் நேற்று நாடெங்கிலும் ஆரம்பமானது. இவ் வேலைத்திட்டத்தின் பிரதான வைபவம் நுகேகொட ஆனந்த சமரகோன் திறந்த வெளி அரங்கில் ஆரம்பமானது. இந் நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேல்மாகாணம் உட்பட நாட்டின் பல பிரதேசங்களில் டெங்கு நோய் தீவிரமடைந்துள்ளது. இந்நோய்க்கு இற்றைவரையும் 7800க்கும் மேற்பட்டோர் உள்ளாகியுள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றார்கள்.

இவ்வாறான நிலையில் நாட்டு மக்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு அரசாங்கம் 20ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரையான ஒரு வாரகாலத்தை தேசிய நுளம்பு ஒழிப்புவாரமாக பிரகடனப் படுத்தியுள்ளது.

நுளம்பு ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியும், சுகாதார அமைச்சும் இணைந்து நாடெங்கிலும் நுளம்பு ஒழிக் கும் பணிகளை நேற்று ஆரம்பித்தன. முப் படையினரதும், பொலிஸாரதும் முழு மையான ஒத்துழைப்புடன் சுகாதாரத்துறை ஊழியர்கள் இத்தேசிய வேலைத்திட்டத்தை நேற்றுக் காலையில் ஆரம்பித்தனர்.

இந்த நுளம்பு ஒழிப்பு பணிகளுக்கு சில பிரதேசங்களில் இடையூறு விளைவிக் கப்பட்டுள்ளதுடன், மேலும் சில இடங் களில் அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளன. இவை உடனடியாக அமைச்சரின் கவனத் திற்குக் கொண்டுவரப்பட்டன. இச்சமயம் தேசிய நிகழ்வின் தொடக்க வைபவத்தில் கலந்துகொண்டிருந்த அமைச்சர் மேற் கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரை யாற்றிய அமைச்சர், நுளம்புகள் பரப்புகின்ற உயிராபத்து மிக்க நோய்களிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காகத்தான் இவ்வாறான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கின்றது. இவ் வேலைத்திட்டங்களில் ஈடுபடுபவர்களின் பணிகளுக்கு இடையூறு விளைவிப்பதையும், அச்சுறுத்தல் விடுப்பதையும் எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது. இது நாட்டின் சுகாதாரத்துறைக்கே பெரும் ஆபத்தாக அமைந்துவிடும்.

இதன் காரணத்தினால் நுளம்பு ஒழிப்பு பணிகளில் நேற்று ஈடுபட்டவர்களின் பணிகளுக்கு இடையூறு விளைவித் தவர்களுக்கும், அச்சுறுத்தல் விடுத்தவர் களுக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

நாட்டு மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்படுகின்ற இத்தேசிய வேலைத்திட்டத்துக்குப் பொது மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என்றும் கூறினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி