ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 18
கர வருடம் ஆனி மாதம் 06ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE 21, 2011
வரு. 79 இல. 145
 
23இல் சுகயீனலீவுப் போராட்டம் நடத்த தொழிற்சங்கங்கள் தீர்மானம்

ஆளுநருடனான பேச்சு தோல்வி :

23இல் சுகயீனலீவுப் போராட்டம் நடத்த தொழிற்சங்கங்கள் தீர்மானம்

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற் றத்தைக் கண்டித்து நாளை மறுநாள் 23ஆம் திகதி மாகாணம் தழுவிய ஒருநாள் சுகயீன லீவுப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையி லான குழுவினருக்கும் ஆசிரியர் தொழிற்சங்கங்களும் இடையில் ஆசிரியர் இடமாற்றங்களை இரத்துச்செய்வது தொடர்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையிலேயே இந்த ஒருநாள் அடையாள சுகயீன லீவு போராட்டத்தை நடத்தப்போவதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஆளுநர் அலுவலகத்தில் நேற்று இடம் பெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்ரம, ஆளுநரின் செயலாளர் உடகே, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஏ.ஜே.புஸ்பகுமார உள்ளிட்டோர் ஆளுநர் தரப்பிலும், ஆசி ரியர் தொழிற்சங்கங்கள் சார்பில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் த.மகாசிவம், இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் ஜோசப் ஸ்ராலின், முஸ்லிம் ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் எம்.அனஸ், கிழக்கு மாகாண தமிழ் ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர்.ஜெரோம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பின் போது கிழக்கு மாகாணத்தில் கொண்டுவரப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்றங்களை மீள்பரிசீல னைக்குட்படுத்துமாறு ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தரப்பினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டபோதும் அதனை ஆளுநர் தரப்பு மறுத்துவிட்டதை தொடர்ந்தே இந்த ஒரு நாள் சுகயீனலீவு போராட்டத்தை நடத்தப்போவதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்த அடையாள போராட்டத்துக்கும் உரிய பதில் கிடைக்காவிடில் தொடர்ந்து தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் அச்சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி