ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 18
கர வருடம் ஆனி மாதம் 06ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE 21, 2011
வரு. 79 இல. 145
 

பத்மநாப சுவாமி கோயிலின் ரகசிய அறைகளை திறக்க முடிவு

பத்மநாப சுவாமி கோயிலின் ரகசிய அறைகளை திறக்க முடிவு

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலின் ரகசிய அறைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இத்தகவலை கோயிலின் நிர்வாக அதிகாரி ஹரிகுமார் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திருவனந்தபுரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த பழமைவாய்ந்த கோயிலில் உள்ள 6 அறைகள் மட்டும் நீண்டகாலமாக பூட்டி வைக்கப்பட்டுள்ளன.

அந்த அறைகளில் விலை மதிப்பற்ற கோயில் நகைகள், வைரங்கள் உள்ளிட்ட பூஜைப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

இதனிடையே கோயில் நிர்வாகம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பூட்டிய அறைகளில் உள்ள கோயில் சொத்துக்களை கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

மேலும் கோயில் நிர்வாகத்தை கேரள அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதையடுத்து கேரள உயர்நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் சொத்துக்களின் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் முன்னிலையில் இந்த மாத இறுதிக்குள் கோயிலில் பூட்டி வைக்கப்பட்டுள்ள அறைகள் திறக்கப்படுகின்றன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி