ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 18
கர வருடம் ஆனி மாதம் 06ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE 21, 2011
வரு. 79 இல. 145
 

ஹசாரேவின் கோரிக்கைகள் சாத்தியமற்றது மத்திய அரசு நிராகரிப்பு

ஹசாரேவின் கோரிக்கைகள் சாத்தியமற்றது மத்திய அரசு நிராகரிப்பு

அரசுத் துறையில் பணியாற்றும் அனைத்து தரப்பினர் மீதமான ஊழல் வழக்குகளையும், லோக்பால் தான் விசாரிக்க வேண்டும் என அன்னா ஹசாரே உள்ளிட்டோர் வலியுறுத்துவது சாத்தியமற்றது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழல் புகார்கள் பதிவு செய்யப்படும். இவை அனைத்தையும் லோக்பால் விசாரிப்பது என்பது நடைமுறைக்கு ஒத்து வராது என அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மத்திய அரசில் பணியாற்றும் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசுத் துறைகளில் பணியாற்றும் கீழ்மட்ட ஊழியர்களில் இருந்து உயர்மட்ட அதிகாரிகள் வரை அனைவரின் மீதான ஊழல் புகார்களையும், லோக்பால் அமைப்பு தான் விசாரிக்க வேண்டும் என அன்னா ஹசாரே உள்ளிட்டோர் வலியுறுத்துகின்றனர்.

இதில் நடைமுறை சிக்கல் உள்ளது. அரசுத் துறையில் பணியாற்றுவோர் மீது ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழல் புகார்கள் பதிவு செய்யப் படுகின்றன.

இவை அனைத்தையும் லோக்பால் அமைப்பு விசாரிக்க முடியாது.

இது மிகப் பெரிய வேலையாகி விடும். நியாய விலைக் கடைகளில் பணியாற்றுவோர், ரேஷன் கார்டு வழங்குவோர், டிரைவிங் லைசென்ஸ், பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை விநியோகம் செய்வது போன்ற பணிகளில் ஈடுபடுவோர் மீது தான் அதிகமாக லஞ்ச குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

எனவே இணைச் செயலர் மற்றும் அதைவிட உயர்வான பதவிகளில் உள்ளவர்கள் மீதான ஊழல் மற்றும் லஞ்ச புகார்களை மட்டுமே லோக்பால் விசாரிக்க வேண்டும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது. இதை அன்னா ஹசாரே உள்ளிட்டோர் ஏற்க மறுக்கின்றனர்.

மேலும் பிரதமர் பதவி வகிப்போரையும், லோக்பால் மசோதா வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் என அன்னா ஹசாரே கூறி வருகிறார். இதை நடை முறைப்படுத்தினால் பல்வேறு பிரச்சி னைகள் ஏற்படும்.

குறிப்பாக பிரதமர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தினால் விசாரணை நேர்மையாக நடப்பதை உறுதி செய்யும் வகையில் பிரதமராக இருப்பவர் தன் பதவியை ராஜினாமா செய்ய நேரிடும். இதுபோன்ற சூழ் நிலை ஏற்பட்டால் மத்திய அரசில் நிலை தன்மை இருக்காது. இது பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி