வரு. 78 இல. 232
ஹிஜ்ரி வருடம் 1431 ஷவ்வால் பிறை 25
விகிர்தி வருடம் புரட்டாதி மாதம் 18ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, OCTOBER, 04, 2010

எந்தத் திசையில் எவ்வித கற்கள் அணியலாம்

எந்தத் திசையில் எவ்வித கற்கள் அணியலாம்

ஒரு மனிதனுடைய முன்னேற்றத்திற்கும் துன்பப் பிடியில் இருந்து விடுபடவும் நவக்கிரகங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான நவரெத்தினங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவைகளை எந்தந்த திசைகளில் அணியலாம் எனவும் யோதிடத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. எதனையும் முறைப்படி தக்க குருவைக் கொண்டு செய்வதே சிறந்த பயனை விளைவிக்கும்.

* சூரிய திசை நடைபெறும் போது மாணிக்கம் என்ற சிவப்பு ரெத்தினத்தை ஞாயிறு நாளில் வளர் பிறைத் திதியில் சுப வேளையில் அணிய வேண்டும்.

* சந்திர திசை காலத்தில் முத்து ரெத்தினத்தை ஒளிவிடும் பெளர்ணமித் திதியில் திங்கட்கிழமையில் அணிய வேண்டும்.

* செவ்வாய் திசை நடைபெறும் போது பவள ரெத்தினத்தை வளர் பிறைத் திதியில் செவ்வாய்க்கிழமை சுப நேரத்தில் முருகனை வழிபட்டு அணிதல் நன்று.

* புதன் திசை நடைபெறும் போது மரகதம் என்ற பச்சை ரெத்தினத்தை பூர்வபட்சத்தில் புதன்கிழமை நாளில் பெருமானை வழிபட்டு சுப நேரத்தில் அணிந்து கொள்வதால் சுபீட்சம் கிட்டும்.

* குரு திசை சஞ்சாரத்தில் புஸ்பராக ரெத்தினத்தை வளர்பிறை கூடிய வியாழக்கிழமை சுப நேர வேளையில் தெட்சிணா மூர்த்தியை வழிபட்டு குரு வணக்கமுடன் தக்க ஆசானது ஆசீர்வாதத்துடன் அணிந்து கொள்வதால் உசிதமான பலன்களை பெற்றுக் கொள்ளலாம்.

* ஒரு மனிதனுடைய ஜெனன கால சுழற்சியின் படி சுக்கிர திசை நடைபெறும் போது வைர ரெத்தினத்தை முறைப்படி நல்ல நேரம் பார்த்து வெள்ளிக்கிழமையில் சுக்கிர பகவானை துதிசெய்து அணிந்து கொள்ள வேண்டும்.

* சனி திசை காலத்தில் நீல ரெத்தினத்தை சனிக்கிழமை நாளில் ஸ்ரீமந் நாராயண மூர்த்தியையும் சனீஸ்வர பகவானையும் வேண்டி அணிந்து கொள்வதால் கெடுபலன்கள் குறைந்து சனீஸ்வரனின் ப்ரீதியைப் பெற்றுக் கொள்ள முடியும்.

* ராகு திசை நடைபெறும் போது கோமேதக ரத்தினத்தை ராகு கால வேளையில் துர்க்கா தேவியையும், ராகு தேவனையும் வழிபட்டு, செவ்வாய், வெள்ளி, சனி ஏதாவது ஓதி நாளில் அணியலாம்.

* கேது திசையில் வைடூரிய ரெத்தினத்தை முறைப்படி தயார் செய்து விநாயகர், கேது பகவான் இருவரையும் வழிபட்டு வெள்ளி, ஞாயிறு நாளில் அணிய வேண்டும்.

மேற்கூறிய நவரெத்தினங்களிலும் அசல் நகல் கண்டறியப்பட்டு அசலான ரெத்தினங்களையே நவக்கிரகங்களின் ப்ரீதியைப் பெறுவதற்கு தேர்ந்தெடுத்து மோதிரங்களிலோ அல்லது சங்கிலியிலோ பதித்து கொள்ள வேண்டும். அப்படித் தயார் செய்யப்பட்ட ஆபரணத்தை ஆசர சீலராக அணியப் போகின்ற நபர் தக்க குருவின் மூலமாக அவரது ஆசீர்வாதத்துடன் அணிந்து கொள்வதால் தீங்குகள், குழப்பங்கள், பயம், பகை தோஷங்கள் மறையலாம் எஎன இந்து சமயத்தில் யோதிட மூலம் அறிவிக்கப்படுகின்றது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
»