வரு. 78 இல. 232
ஹிஜ்ரி வருடம் 1431 ஷவ்வால் பிறை 25
விகிர்தி வருடம் புரட்டாதி மாதம் 18ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, OCTOBER, 04, 2010

புரட்டாதி மஹாளயம்

புரட்டாதி மஹாளயம்

நமது வாழ்வில் தேவ வழிபாடு, பிதிர் வழிபாடு என்பன கூறப்பட்டு உள்ளன. ‘பிதிர் வழிபாடு செய்து தேவ ஆசியுடன் வாழ்க’ எனக் கூறுவர். இறந்த எமது முன்னோர்களுக்காகச் செய்யப்படுவது பிதிர் வழிபாடு. இறந்த திதியைச் சிரத்தையுடன் செய்வது சிரார்த்தம் அல்லது திவசம் ஆகும். மாதா மாதம் அமாவாசையில் எள்ளும் நீரும் இறைத்து வழிபாடுவது புரோகிதருக்கு அரிசி காய்கறி கொடுத்து மோக்ஷ அர்ச்சனை செய்வதும் பிதிர் வழிபாடாகும்.

அதேபோன்று புரட்டாதி மாத பெளர்ணமி முதல் அமாவாசை வரை உள்ள தினங்களில் செய்வது மஹாளயம் ஆகும். மஹாளயத்தில் ஒரு விசேஷம் உள்ளது. நாம் இறந்த எமது முன்னோருக்கும் நம்மை அறிந்த சகலருக்குமாகச் செய்வது மஹாளயம் ஆகும். இதனால் சகல பிதிர்களின் ஆசியையும் நாம் பெறுகின்றோம்.

பிதிர் வழிபாட்டில் பிண்டம் போட்டு சமைத்த உணவு, பழங்களை நைவேதிக்கின்றேம். பிதிர்கள் திருப்தியடைய எள்ளுந் தண்ணீரும் இறைக்கின்றோம். புரோகிதருக்கு அரிசி, காய்கறி, வேட்டி சால்வை, தட்சணை கொடுக்கின்றோம். இவ்வழிபாட்டால் எமக்குப் பிதிர் ஆசியும் குரு ஆசியும் கிடைக்கின்றது. மேலும் நாம் கோவிலில் நெய் விளக்கு ஏற்றி மோக்ஷ அர்ச்சனை செய்து வழிபடுவதால் தேவ ஆசியும் கிடைக்கின்றது.

நமது வாழ்வில் வரும் இன்ப துன்பங்கள் யாவும் நாம் எமது முற்பிறப்பில் செய்த பாப புண்ணியத்துக்கு அமையவே நடைபெறும். அதிலே பிதிர் காரியமும் ஒன்றாகும். அதனை நாம் கிரமமாக சிரத்தையுடன் செய்ய வேண்டும். அது தவறின் பிதிர்களின் கோபத்துக்கு ஆளாவோம் என ஜோதிஷ சாஸ்திரம் கூறுகின்றது.

நாம் பிறக்கும் போது நமது ஜாதகத்தைக் கணிப்பர். அதனைப் பார்த்து ஜோதித்தர் கிரக தோஷம் உள்ளதால் பிள்ளைப் பாக்கியம் குறைவு என கூறுவார். இத்தகைய கிரகதோஷம் உள்ளதால் பிதிர் வழிபாடு செய்யுங்கள் என கூறுவார்.

இதனால் நமக்குப் பிள்ளை இல்லையே என்ற குறைபாடு கண்டவிடத்து பிதிர் வழிபாட்டை சிரமமாகச் செய்தல் வேண்டும். வீட்டிலே மேலே கூறியவாறு செய்கின்றோம். கீரிமலையில் செய்கின்றோம். வசதியானோர் இராமேஸ்வரம், திருவாலங்காடு, காசி, காயா சென்று பிதிர் வழிபாடு, தேவ வழிபாடுகளைச் செய்வதை நாம் அறிவோம்.

ஆகவே பிதிர் வழிபாடு மிக முக்கியமானது. அதிலும் மஹாளயஞ் செய்து பிதிர் வழிபாடு செய்து பிதிர் ஆசி, குரு ஆசி, தேவ ஆசி பெற்று வாழ்வது மிக மிக மேலானது. இதனை வீட்டில் செய்ய முடியாதோர் புரட்டாதி அமாவாசையில் புரோகிதருக்கு அரிசி, காய்கறி கொடுத்து மோக்ஷ அர்ச்சனை செய்யலாம்.

ஆகவே மஹாளயம் செய்து பிதிர் வழிபாடு செய்வோம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
»