வரு. 78 இல. 232
ஹிஜ்ரி வருடம் 1431 ஷவ்வால் பிறை 25
விகிர்தி வருடம் புரட்டாதி மாதம் 18ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, OCTOBER, 04, 2010

சைவபோசனத்தில் முக்கிய இடம் வகிக்கும் கத்தரிக்காய்

சைவபோசனத்தில் முக்கிய இடம் வகிக்கும் கத்தரிக்காய்

சைவபோசனமென்றால் கத்தரிக்காயில்லாது எதுவுமில்லை. கறியாகவும், சாம்பராகவும், குழம்பாகவும், பொரியலாகவும் ஆக்கத்தக்க இக் கத்திரிக்காய் சைவ உணவிற்கு மிகுந்த ஊட்டம் தருகிறது.

மகாவிஷ்ணு தந்த கத்தரி விதை :

எமது அன்றாட உணவில் முக்கியம் பெறும் கத்தரிக்கான விதையை ஸ்ரீ கோட் மடத்தை அலங்கரித்த ஸ்ரீ வாதிராஜர் எனும் மகானிற்கு மகாவிஷ்ணு கொடுத்த விதைகளே முளைத்து இன்று பூலோகமெங்கும் கத்தரிச் செடியாகப் பரவியதாக ஒரு கதையுண்டு.

கத்தரி வந்த கதை :

மகான் ஸ்ரீவாதிராஜரிற்கு குதிரை முகங்கொண்ட விஷ்ணுவை வணங்குவதில் அலாதி பிரியம். இவர் தினந்தோறும் இறைவனிற்கு வேண்டிய நைவேத்தியங்களைத் தயாரித்து நிவேதனம் பண்ணுவார். அவர் இறைவனிற்கு நிவேதனம் பண்ணும்போது கதவுகளைத் தாழிட்டுக் கொள்வது வழக்கம். அத்துடன் தான் கொண்டுவந்த நிவேதனப் பொருட்களை தலையில் சுமந்தபடி நிற்பார். பரிமுக இறைவன் அவரின் நிவேதனப் பொருளில் குறித்த பாகத்தை உண்டுவிட்டு மிகுதியை விடுவாராம். இதனை மகான் ஸ்ரீ வாதிராஜர் ஆலயத் தொண்டர்களிற்கும் வழங்கி அகமகிழ்வார்.

இதனைக் கண்ணுற்ற ஆலயத் தொண்டர்களில் சிலர் இவர் கதவைத் தாளிட்டுவிட்டு தான் நிவேதனப் பொருட்களை உண்டபின்னர் மிகுதியை தமக்குத் தருவதாக எண்ணி மனங் குழம்பியிருந்தனர்.

வழக்கம்போல மகான் தனது படையலுடன் இறைவன் சந்நிதானம் சென்று இறைவனிற்கு நிவேதனம் செய்தார். அப்போது இறைவன் முழு நிவேதனப் பொருட்களையும் உண்டுவிட்டார். இதனைக் கண்ட மகான் ஆலயத்தின் அடியார்களிற்கு படையல் பொருட்களைக் கொடுக்க முடியவில்லையே என்று கவலையுடன் கதவைத் திறந்தார் அப்போது ஆலயத்தில் நின்ற சிலர் அவர் உயிருடன் திரும்பியதைக் கண்டு ஏக்கமடைந்தனர். தாம் நஞ்சூட்டிய நிவேதனப் பொருட்களை உண்ட மகான் ஆலயத்தினுள் மீளாத் துயில் கொண்டிருப்பார் என எண்ணினர்.

ஆனால் நடந்தது வேறு. அப்போது இறைவனைப் பார்த்தபோது வெண்ணிற உடலேயான பரிமுகக் கடவுள் நீல நிறமாகக் காட்சி தந்தார்.

இதனைக் கண்ட அடியார்கள் ‘நிவேதனத்தை இறைவன் உண்பதாக மகான் சொன்னது நிஜம், இந்த நிகழ்வை யாம் நம்பாமல் இருந்துவிட்டோம்’ என்று பயமும், பதற்றமும் அனைவரையும் ஆட்டிப் படைத்தது. அவர்கள் மகானின் காலில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டனர்.

மகான் இறைவனின் நீலமேனியைக் கண்டு மனம் வருந்தினார். இறைவனோ ‘மகனே வருந்தாதே நீ எந்தத் தவறும் செய்யவில்லை. நீ என்மீது வைத்திருந்த பக்தியை பிறரிற்கு உணர்த்தவே இப்படிச் செய்தேன்.’ இதற்கு பரிகாரமாக ‘இதோ இந்த விதைகளை நாட்டி வளரும், செடி வளர்ந்ததும் காய்களைப் பறித்து நாற்பத்து எட்டு நாட்கள் எனக்கு நிவேதனம் செய். நஞ்சுண்டதால் ஏற்பட்ட எனது நீலநிற மேனி மீண்டும் வெண்மையாகும்’ என்று கூறி பரந்தாமன் கொடுத்த அந்த விதைகளிலிருந்து கத்தரிக்கான சந்தானம் உருவானது என்பது இவ்வரலாற்றுக் கதையாகும்.

கத்தரிக்காய் நைவேத்தியம் :

தென்னிந்தியாவில் கரிஞ்சலாக்குடர் எனும் ஊரில் பரதனுக்கு ஒரு கோவில் உண்டு. இக் கோவிலில் இறைவனிற்கு தீபாராதனையில்லை. இவ் இறைவனிற்கு விருப்பமான உணவான கத்தரிக்காயே முதன்மையான படையற் பொருளாகும். முன்னொரு காலத்தில் வயிற்றுவலியால் துடித்த ஒரு முதியவரிற்கு இவ் ஆலயத்தின் மூலவர் தோன்றி 101 கத்தரிக்காயில் சமையல் செய்து படைக்குமாறு வேண்டினார். இவர் இவ்வாறு படையல் செய்தபோது அவரது வயிற்றுவலி இடம்தெரியாது மறைந்துவிட்டது.

இதன்பின் இவ்வூர் மக்கள் தமது வேண்டுதல்களை நிறைவேற்றிக்கொள்ள கத்தரிக்காய் படையல் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

மட்டுவில் கத்தரிக்காய் :

இலங்கையின் வடபால் மட்டுவில் எனும் ஊரில் கண்ணகியம்மன் கோவில் உண்டு. அவ் ஆலயத்தைச் சூழ கத்தரித் தோட்டங்கள் உண்டு. பங்குனி மாதம் என்றால், அக்கோயில் சூழலிலுள்ள கத்தரிகள் அபரிமிதமாகக் காய்ப்பதுணடு. இக் கத்தரிக்காய்கள் வெண்மை நிறமாகவும், முட்டிபோன்றும் காட்சியளிக்கும். இதனால் இக் கத்தரிக்காயை ‘மட்டுவில் முட்டிக் கத்திரிக்காய்’ எனவும் அழைப்பர்.

பங்குனி மாதத் திங்கட்கிழமைகளில் இவ் ஆலயத்தில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெறுவதுண்டு. அப்போது கத்தரிக்காய் கறியும் செய்து படைத்து பக்தர்கள் தாமும் உண்டு மகிழ்வர். இக் கத்திரிக்காய்கள் மட்டுவில் அம்மன் கோவில் கேணித் தண்ணீரினை எடுத்துக் கறியாக்கும் போது ஏற்படும் கறியின் சுவையை வாயால் விபரிக்க முடியாது. இவ்வாறு பல்வகையிலும் சிறப்புமிக்க விஷ்ணுவால் தரப்பட்ட கத்தரியை எமது இடத்திலும் நாட்டி எமக்கு வேண்டிய உணவை நாமே உற்பத்தி செய்து கொள் வோமாக.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
»