வரு. 77 இல. 245

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 25
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 29ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER 15, 2009

தமிழ்க் கைதிகளின் விசாரணைகளை துரிதப்படுத்த விசேட நீதிமன்றம்

தமிழ்க் கைதிகளின் விசாரணைகளை துரிதப்படுத்த விசேட நீதிமன்றம்

பாதுகாப்பு அமைச்சில் நடந்த விசேட கூட்டத்தில் தீர்மானம் 10 சட்டத்தரணிகளை நியமித்து செயற்பட முடிவு

சிறைகளில் விசாரணைகள் எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சுமார் 600 தமிழ்க் கைதிகள் தொடர்பாகத் துரிதமாக விசாரணை நடத்தவென விசேட நீதிமன்றமொன்றை அமைக்க அரசாங்கம் நேற்று (14) தீர்மானித்துள்ளது.

கைதிகளின் வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தி அவர்களின் விடுதலைக்கு விரைவில் தீர்வொன்றைக் காணும் நோக்கில் இந்த நீதிமன்றம் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி, சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வி. புத்திரசிகாமணி தெரிவித்தார்.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுடன் நேற்று (14) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட் டதாகப் பிரதியமைச்சர் கூறினார்.

இதேநேரம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு ஏற்ப 10 சட்டத்தரணிகளை நியமித்து கைதிகளின் வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட விருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் சிறைகளில் உள்ள தமிழ் கைதிகளுக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்குமென்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட கூட்டத்தில் நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொட, சட்டமா அதிபர், பொலிஸ் திணைக்கள உயரதிகாரிகள், சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக நீதி சட்ட மறுசீரமை ப்பு பிரதி அமைச்சரின் ஊடக இணைப்புச் செயலாளர் தெரிவித்தார்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •