புத் 67 இல. 32

மன்மத வருடம் ஆடி மாதம் 24 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 23

SUNDAY AUGUST 09 2015

 

 
இலங்கையில் நிகழ்ந்த முதலாவது பொதுத்தேர்தல்...

இலங்கையில் நிகழ்ந்த முதலாவது பொதுத்தேர்தல்...

சோல்பரியாப்புப் பிரகாரம் சுதந்திர இலங்கையின் முதலாவது பொதுத் தேர்தலை நடாத்த 1947 ஜுலை 07ம் திகதி அரசுக்கழகம் தீர்மானித்தது. இதற்கமைய 1947 ஜுலை 28ம் திகதி தேர்தலுக்கான நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

சுதந்திர இலங்கையின் முதலாவது பொதுத் தேர்தல் சோல்பரி அரசியல் யாப்புப் பிரகாரம் நடந்தேறியது. 1977ல் முன்வைக்கப்பட்ட முதலாவது குடியரசு யாப்பு வரை பல பொதுத் தேர்தல்கள் நடைபெற்றன. சோல்பரி யாப்புப் பிரகாரம் சுதந்திர இலங்கையின் முதலாவது பொதுத் தேர்தலை நடாத்த 1947 ஜுலை 07ம் திகதி அரசுக்கழகம் தீர்மானித்தது. இதற்கமைய 1947 ஜுலை 028ம் திகதி தேர்தலுக்கான நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 23, 25, 26, 27, 28, 29ம் திகதிகளிலும் மற்றும் செப்டம்பர் 1, 4, 6, 8, 9, 10, 11, 13, 15, 16, 17, 18, 20ம் திகதிகளிலுமாக மொத்தம் 19 தினங்கள் இத்தேர்தல் இடம்பெற்றது.

ஒன்பது அரசியற் கட்சிகளின் சார்பாக 179 கட்சி அபேட்சகர்களும் 182 சுயேச்சை அபேட்சகர்களுமாக மொத்தம் 361 வேட்பாளர்கள் 35 ஆசனப் பிரதிநிதித்துவத்துக்காக 89 ஆசனங்களில் போட்டியிட்டனர். எனினும் 88 ஆசனங்களுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது. புத்தளம் ஆசனத்திற்காக எஸ். எச். எம். இஸ்மாயில் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார். இவ்வாசனங்களில் கொழும்பு மத்தி, அம்பலாங்கொடை, கடுகண்ணாவை, பதுளை மற்றும் பலாங்கொடை என்பன பல் ஆசனத் தொகுதிகளாகும். இந்த ஐந்து ஆசனங்களிலிருந்தும் 11 உறுப்பினர் தெரிவானார்கள்.

இப்பிரதிநிதிகள் சபையில், தேர்தல் மூலமும் போட்டியின்றியும் தெரிவான 95 உறுப்பினர்களுடன் தேசாதிபதியால் நியமிக்கப்பட்ட 6 பேரும் உட்பட மொத்தம் 101 பிரதிநிதிகள் அடங்கினர். கிரியுள்ள ஆசனத்திலிருந்து தெரிவான புளொரன்ஸ் சேனநாயக்க பெண்மணியாவார்.

இத்தேர்தலில் பதிவு செய்யப்பட்ட 30,52,814 வாக்குகளில் 18.81,364 வாக்குகள் (55.9 சதவீதம்) மட்டுமே அளிக்கப்பட்டன. அளிக்கப்படாத வாக்குகள் 1171,450 (44 சதவீதம்) ஆகும். ஐ.தே.கட்சி 42 ஆசனங்களையும், லங்கா சமசமாஜக் கட்சி 10 ஆசனங்களையும், தமிழ்க் கட்சி 07 ஆசனங்களையும், இலங்கை இந்திய காங்கிரஸ் 6 ஆசனங்களையும், தொழிற் கட்சி ஒரு ஆசனத்தையும், கம்யூனிஸ்ட் கட்சி மூன்று ஆசனங்களையும், பொலசவிக் லெனின் கட்சி ஐந்து ஆசனங்களையும் பெற்ற வேளை 21 சுயேச்சை அங்கத்தவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

இத்தேர்தல் மூலம் தேசாதிபதிக்குப் பதிலாக மகா தேசாதிபதியாக பிரித்தானிய குடியின் இறுதித் தேசாதிபதியாக பணிபுரிந்த சேர் மெங்மேசன் மூர் நியமனம் பெற்றதோடு பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றிய ஐ.தே. கட்சியின் தலைவரும், மீரிகம தேர்தல் தொகுதியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினருமான டி. எஸ். சேனநாயக்க பிரதமராக 1947.05.26ம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டார்.

மூதவை செனெட் சபையெனப்பட்டது. இச்சபைக்கு பிரதிநிதிகள் சபையிலிருந்து 15 உறுப்பினர்களும் மகா தேசாதிபதியால் நியமிக்கப்பட்ட 15 பேருமாக மொத்தம் 30 பேர் நியமனம் பெற்றனர். சேர் ஒலிவர் குணதிலகா இச்செனட் சபையின் தலைவராகத் தெரிவானார்.

42 ஆசனங்களைப் பெற்ற ஐ.தே.கட்சி, தமிழ்க் கட்சி, தொழிலாளர் கட்சி, சுயேட்சை குழு என்போரை இணைத்து 69 உறுப்பினர்க் கொண்ட ஸ்திரமான அரசை பிரதமராகத் தெரிவான டி. எஸ். சேனநாயக்க அமைத்தார். அவருட்பட 14 பேர் இப்பாராளுமன்றில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.

பிரதமர் மற்றும் பாதுகாப்பு, வெளிவிவகார அமைச்சர் டி. எஸ். சேனநாயக்க, சுகாதாரமும் உள்ளூராட்சியும் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க, கைத்தொழில், கடற்றொழில் ஆராய்ச்சி கடற்றொழில் அமைச்சர் ஜோர்ஜ் ஈ. டி. சில்வா, உள்நாட்டு விவகாரம் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் ஆர். எஸ். எஸ். குணவர்தன, தொழில் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் ரி. பி. ஜாயா, நிதியமைச்சர் ஜே. ஆர். ஜயவர்தன, நீதியமைச்சர் எல். ஏ. ராஜபக்ஷ, கல்வியமைச்சர் ஈ. ஏ. நுகேவல, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன் கொத்தலாவல, உணவு, கூட்டுறவு அமைச்சர் ஏ. இரத்நாயக்க, காணி விவகார அமைச்சர் சி. சிதம்பரம், வர்த்தக அமைச்சர் சி. சுந்தரலிங்கம் என்போர் அமைச்சரவையில் இடம்பெற்றனர்.

பலாங்கொடை தொகுதியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சேர் பிரான்ஸிஸ் மொலமூரே 1947.10.14 - முதல் 1951.01.25ம் திகதி வரை சபாநாயகராகவும் அவரது இராஜினாமாவையடுத்து 1951.02.13ம் திகதி முதல் 1952.04.08ம் திகதி வரை நாத்தாண்டியத் தொகுதியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சேர் அல்பேர்ட் பீரிசும் சபாநாயகராகப் பணிபுரிந்தனர். சேர் ஹென்றி மெங்மேசன் மூரையடுத்து சொல்பரி பிரபு இப்பாராளுமன்றில் மகாதேசாதிபதியாக நியமிக்கப்பட்டார். 1952.03.12ம் திகதி வரை டி. எஸ். சேனநாயக்க பிரதமராகப் பதவி வகித்தார் 1952 ஏப்ரல் 08ம் திகதி இப்பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.

சோல்பரி யாப்பின் பிரகாரம் பாராளுமன்றம் ஐந்தாண்டு கால எல்லையைக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.