புத் 67 இல. 32

மன்மத வருடம் ஆடி மாதம் 24 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 23

SUNDAY AUGUST 09 2015

 

 
மீள்குடியேற்றத்தின் உண்மை நிலையை கூற நல்ல சந்தர்ப்பம்:

மீள்குடியேற்றத்தின் உண்மை நிலையை கூற நல்ல சந்தர்ப்பம்:

உண்மைக்கு அழிவில்லை என்கிறார் றிஷாட் பதியுதீன்

கேள்வி : மஹிந்த அரசிலே பிரபல அமைச்சராக இருந்த நீங்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் திடீர் என விலகிய காரணம் என்ன?

பதில் : நான் சிறுவயதில் இருந்தே செய்ய வேண்டும் என எண்ணும் காரியத்தை மிகவும் கரிசனையுடன் செய்து முடிக்கும் சுபாவம் உள்ளவன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அவர்களின் அரசிலே அமைச்சராக இருந்து அந்த அரசின் கொள்கை களுக்கேற்ப நாட்டின் நன்மையைக் கருத்திற்கொண்டு அமைச்சுப் பணி செய்தேன். எனது பணியில் நேர்மையும் திறமையும் இருப்பதைக் கண்டு மீள் குடியேற்ற அமைச்சுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டேன்.

யுத்தம் முடிவடைந்ததையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். காரணம் அல்லல்பட்டு வாழும் அகதிச் சகோதரர்களுக்கு விடிவுகாலம் பிறந்ததாக எண்ணியதே. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த ஜனாதிபதி மீது அளவு கடந்த மதிப்பும் வைத்திருந்தேன். அவரது நம்பிக்கைக்கு உரியவனாகவும் செயல்பட்டேன். இந்த நிலையிலே இடம்பெயர்ந்த தமிழ் மக்களை மீள்குடியேற்றும் பணி தரப்பட்டது. இடம்பெயர்ந்தோர் கொஞ்ச மக்கள் அல்ல, மிகப்பெரும் தொகையினர். நான் ஒரு முஸ்லிம் ஆக இருந்த தால் இன ரீதியான அசட்டைத்தனம் இருக்கக் கூடாது என்ற கவனத்துடன் மிகவும் கஷ்டங்களின் மத்தியில் தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்தைத் திருப்திகரமாகச் செய்தேன். அதனால் அந்த வேளை அரசு சார்ந்த அரசியல் வாதிகள் மட்டுமல்ல எதிரணியினரும் எனது பணியில் திருப்திகண்டு என்னைப் பாராட்டிப் பேசினர்.

அதேவேளை 25 ஆண்டுகளுக்கு முன் இடம்பெயர்ந்த எனது சோதரர்களும் இவ்வாறு குடியேற்றப்பட வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது.

ஆனால் முஸ்லிம் மீள்குடியேற் றத்துக்கான உரியவேளை வந்தபோது நான் கைத்தொழில், வாணிபத்துறை அமைச்சைப் பொறுப்பேற்க நேர்ந்தது. இருந்தாலும் எனது இனத்தின் நல்வாழ்வே எனது இலட்சியமாக இருந்தது. இந்நிலையில் முஸ்லிம்கள் மீது கடும் போக்காளர்களின் தாக்குதல் இடம்பெற்றது. தம்புள்ளைப் பள்ளியில் தொடங்கி ஹலால், முஸ்லிம் பெண்களின் மார்க்க உடை போன்ற தேவையற்ற விஷயங்களில் பொதுபலசேன, இராவண பலய போன்ற விஷமிகளின் சீண்டல்கள் இடம்பெற்றன.

இவைகளையிட்டு மனம் கொதிப்படைந்த நான் ஜனாதிபதி அவர்களுடன் இறுக்கமாகவே பேசினேன். முஸ்லிம்களைக் காப்பாற் றுமாறும் சேனாக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் மிக விநயமாகக் கோரினேன். ஆனால் எனது வேண்டு கோளுக்குரிய பலன் கிடைக்கவில்லை.

இந்த நிலையிலே தான் அளுத்கம, பேருவளை சம்பவங்கள் இடம்பெற்றன. அந்த இடங்களுக்கு விரைந்தேன். நிலைமையை ஜனாதிபதிக்கு விளக்கினேன். செவிடன் காதில் சங்க நாதம் பட்ட நிலைமையே இருந்தது. எவருமே கைதுசெய்யப்பட வில்லை, குற்றவாளிகள் தண்டிக்கப் படவில்லை என்பது என்னைப் பெரிதும் வாட்டியது. இரண்டும் கெட்டான் நிலையில் அழுது தொழுது அல்லாஹ்விடம் முறையிட்டேன். அரசைவிட்டு விலகுவதே சரியெனத் தெரிந்தது. எனது அமைச்சுப் பதவியை விட முஸ்லிம் மக்களின் நலனே முன்னின்று பேசியது. அதனால் அரசை விட்டு விலகினேன். இந்த முடிவு எனது தனிப்பட்ட முடிவு மட்டுமல்ல.

கட்சி முக்கியஸ்தர்களின் முடிவுமாக அமைந்தது. ஜனநாயக வழிகளையே பின்பற்றினேன். நல்லாட்சிக்கான அரசமைக்கும் மைத்திரி - ரணில் கோஷ் டியுடன் இணைந்தேன். எனக்குப் பின்னர்தான் சிரேஷ்ட முஸ்லிம் அரசியல் கட்சிகள் அரசைவிட்டு விலகி நாம் சென்ற வழிக்கு வந்தனர்.

எனது அரசியல் வாழ்வு மக்கள் நலனை கருப்பொருளாகக் கொண்டது. சிறுபான்மை இன மக்கள் பாதிக்கப்படும் போது அந்த இடத்தில் நான் குரல் கொடுப்பேன்.

கேள்வி : வில்பத்து பிரச்சினை விசுவரூபம் எடுத்துள்ளதே?

பதில் : இது ஒரு தேவையற்ற பிரச்சினை. 25 ஆண்டுகளாக தென்னிலங்கையில் முகாம்களில் முடங்கி வாழ்ந்த அகதி மக்கள் வடபுலத்தில் மீண்டும் தம் சொந்தப் பூமிக்கு வருவதை, அங்கு வாழ்வதை விரும்பாத சக்திகள் மீள்குடியேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்தன அதேபோன்று தென்னிலங்கைக் கடும்போக்கு சக்திகள் முஸ்லிம்களைத் தாக்குவதற்கும் அவர்கள் மீது அபாண்டம் சுமத்துவதற்கும் வில்பத்தை ஒரு பேசுபொருளாக எடுத்து முஸ்லிம் களும் றிஷாட்டும் வில்பத்துவை கபZகரம் செய்வதாக ஓலமிட்டனர். ஊடகங்கள் வில்பத்து விஷயத்துக்கு இயன்றவரை களம் அமைத்துக் கொடுத்தன. றிசாட்டுக்கு வில்பத்துவில் வாழைத் தோட்டம் இருப்பதாகவும் பல்லாயிரம் ஏக்கரை றிசாட் தம்வசப்ப டுத்தியுள்ளதாகவும் அபாண்டமான பொய்கள் பரப்பப்பட்டன. உண்மைக்கு அழிவேயில்லை என்றே நாம் அமை தியாக இருந்து செய்ய வேண்டிய காரியங்களைச் செய்தோம்.

எனினும் இனவாதிகளும் ஊட கங்களும் எம்மைத் தொடர்ந்து சீண்டும் போக்கையே கைக் கொண்டன. எனவே உரிய நிலைமையை, உண்மை நிலைமையை நான் அரசுக்கு எடுத்துக் காட்டினேன். வில்பத்துவில் ஓர் அங்குலம் கூட எடுக்கப்படவில்லை என்பதை நிதர்சனமாகக் காட்டினேன். சூழலியல் அதிகாரிகள், ஊடகவியலா ளர்கள் அங்கே வந்து உண்மை நிலையை அறிந்து சென்றபோதும் அவர்களில் சிலர் தவறாகவே வழிநடத்தப்பட்டனர்.

என்மீது காழ்ப்புணர்வு கொண்ட இரண்டொரு கோடரிக்காம்புகளும் இந்த விஷமத்தனத்தில் சேர்ந்து கொண்டனர். நான் கவலைப்பட வில்லை. இறைவன் பார்த்துக் கொள்வான் என அவனில் பாரத்தைச் சுமத்தினேன்.

கேள்வி : எதிர்வரும் செப். 16 ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தினால் வில்பத்து தொடர்பாக உங்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டதாக அறிகிறோம். அதுபற்றி என்ன கூறவிரும்புகிaர்கள்.

பதில் : அழைப்பாணை அனுப் பப்பட்டுள்ளது உண்மைதான். இந்த விஷயம் நீதிமன்றம் வரை வந்ததை யிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். வில்பத்திலே எனக்குக் காணியும் இல்லை. தோட்டமும் இல்லை.

உண்மைநிலைமை இதுதான். வில்பத்துவில் இருந்து எங்கோ தொலைவில் முஸ்லிம்களின் கிராமங்கள் உள்ளன. மறிச்சுக்கட்டி, முசலி போன்றவை. தற்போது மீள குடியேறச் சென்ற மக்களின் பெற்றோர், பாட்டன்மாருக்குரியதாகப் பல காணிகளுக்குரிய உறுதிகளும் உள்ளன. 25 ஆண்டு காடாகிப் போனதால் தனியாருக்குச் சொந்தமான காணிகள் அரச காணிகள் ஆகிவிட முடியாது. பாவம் இந்த அப்பாவி மக்கள் 25 ஆண்டு அல்லல்பட்ட நிலையில் மீள் குடியேற பட்ட துன்பங்கள் ஏராளம். இவர்களை நான் பிரதிநிதித்துவப் படுத்துவதால் அவர்களுக்குரிய காணிகளின் உரிமை காக்கவே நான் இதில் பிரவேசித்தேன். எனது நடவடிக்கைகள் ஜனநாயக ரீதியானவை. அரசுக்கு விரோதமானவை அல்ல. நான் அரசை நேசிப்பவன். அரசுக்கு விசுவாசி. இந்த நிலையில் உதவிக்குச் சென்ற என்மீது வீண் பழி சுமத்துகிறார்கள். நான் இறைவனுக்கு பயந்தவன். யாருக்கும் துன்பம் செய்யாதவன். என்னை இறைவன் காப்பாற்றுகிறான்.

நான் சாதாரண குடும்பத்தில் பிறந்து மக்கள் பணியால் முன்னுக்கு வந்தவன்.

என்மீது காழ்ப்புணர்வு கொண் டவர்கள் இல்லாத கதைகளை இட்டுக்கட்டி என்மீது சேறுபூசுகிறார்கள். எனவே இந்த விஷயம் நீதிமன்றம் வருவதால் இப்பகுதி மக்களின் காணி உறுதிகளை அது பரிசீலிக்கும் அவர்களுக்குரிய காணி கிடைக்கவும் வாய்ப்புக் கிடைக்கும். அத்துடன் என்மீது சுமத்தப்படும் பொய்க் குற்றச்சாட்டுக்களும் புஷ்வா ணமாக வழிபிறக்கும்.

முசலி மக்களின் கஷ்டங்களுக்கு கைகொடுக்க முஸ்லிம் அரசியல் வாதிகள் யாரும் முன்வரவில்லை. யாரும் உதவிக்கு வராத நிலையிலேயே நான் மட்டும் அவர்களுக்கு கைகொடுக்க வேண்டி இருந்தது. ஆனால் இன்று பனர்களைத் தாங்கிக்கொண்டு வாக்குக் கேட்டு வருகிறார்கள். மக்கள் கஷ்டப்பட்ட நேரங்களில் ஏறெ டுத்துப் பார்க்காதவர்கள் இப்போது தேர்தலுக்காக மட்டும் இந்தப் பிரதேசத்தில் நடமாடுகிறார்கள். வாக்காளர்கள் இவர்களுக்கு தகுந்த பாடம் படிப்பிப்பார்கள் என நான் எண்ணுகிறேன்.

கேள்வி : தேர்தலுக்கு தேர்தல் தம்மைப் பிரசித்தப்படுத்தும் பழைய, புதிய அரசியலவாதிகள் வடபுலத்தில் வீடு வீடாகச் சென்று கைகுலுக்கியும் சலாம் கொடுத்தும் ஆதரவு கேட்பது பற்றி என்ன சொல்ல விரும்பு கின்aர்கள்?

பதில் : “ஆறுகடக்கும் வரை அண்ணன் தம்பி அதன் பின் நீ யாரோ நான் யாரோ” என்ற கூற்றுத் தான் எனக்கு ஞாபகம் வருகின்றது. இத்தனை காலமும் இந்தப் பழைய, புதிய முகங்கள் எங்கே போனார்கள்.

தேர்தலுக்காக, வாக்கு வேட்டைக்காக வன்னியில் மையித்து வீடுகளுக்குப் போய் அனுதாபம் பெற முயற்சிப்பது எத்தனை தூரம் ஏமாற்றுவித்தை என்பதை வன்னி வாக்காளர்கள் நன்கு அறிவர். அவர்கள் நன்றி மறந்தவர்களும் அல்ல. மடையர்களும் அல்ல. புதியவர்களுடைய தற்போதைய புன்னகையும் சலாமும் 25 ஆண்டுகளாக அகதி முஸ்லிம்கள் பட்ட கஷ்டங்களை நீக்க உதவுமா?

கேள்வி : தேர்தலில் உங்கள் கட்சியின் வெற்றி வாய்பு எப்படி இருக்கிறது.

பதில் : நாம் அம்பாறையில் தனித்து எமது மயில் சின்னத்தில் போட்டியிடுகின்றோம். திருகோண மலை, மட்டக்களப்பு, அநுராதபுரம், புத்தளம், குருநாகல், வன்னி மாவட்டங்களில் ஐ. தே. க.வுடன் இணைந்து யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றோம். செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் அன்பும் ஆதரவும் உள்ளது. எட்டு ஆசனங்களைக் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை பெரிதும் உள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.