புத் 67 இல. 32

மன்மத வருடம் ஆடி மாதம் 24 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 23

SUNDAY AUGUST 09 2015

 

கடினமான போட்டிய

கடினமான போட்டியை எதிர்நோக்கும் இலங்கை அணி

பாகிஸ்தான் அணியுடனான மூன்று வகைப் போட்டியிலும் தோல்வியுற்ற இலங்கை அணி மீண்டுமொரு கடினமான தொடருக்கு முகம் கொடுக்கவிருக்கின்றது. விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத கடந்த வரம் இலங்கை வந்து சேர்ந்தது. இதன் முதல் போட்டி எதிர்வரும் 12ம் திகதி புதன்கிழமை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்திய அணி தலைவராக இருந்த மகேந்திரசிங் டோனியின் ஓய்வுக்குப் பின் முதன் முதலாக முழுமையான ஒரு தொடரில் விளையாட விராட் கோஹ்லியின் தலைமையில் இந்தியா அணி இலங்கை வந்துள்ளது.

இத்தொடரைப் பொறுத்துவரையில் இலங்கை அணிக்கு மிக முக்கியமான தொடராக அமையப் போகின்றது. இலங்கை அணி அண்மையில் பாகிஸ்னுடனான டெஸ்ட் தொடரில் 2-1 என்ற அடிப்படையில் சொந்த மண்ணிலேயே 9 வருடங்களின் பின் தோல்வியுற்றுள்ளது. இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர் குமார் சங்கக்கார இத்தொடருடன் டெஸ்ட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெறப் போகிறார். அவர் கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் இம்மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள 2வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக ஓய்வு பெறவுள்ளார். ஏற்கனவே அவர் டுவண்டி -20 போட்டி. சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே இலங்கை அணி இந்தியாவுடனான இப்போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்று இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்காரவுக்கு சிறந்த ஒரு பிரியாவிடையை அளிக்க இலங்கை அணி எத்தணிக்கக் கூடும்.

ஆனால் அண்மைய இலங்கை அணியின் பெறுபேறுகளையும், வீரர்களின் திறமையை நோக்குகையில் சற்று பின்னடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது.

தற்போதைய இலங்கை அணியின் பந்து வீச்சு ஒரு டெஸ்ட் போட்டியை வெல்லக் கூடியளவுக்கு திறமையானதாக இல்லை. சிறந்த உதாரணமாக அண்மையில் பாகிஸ்தானுடனான மூன்றாவது போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 376 என்ற இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்தும் கூட இலங்கைப் பந்து வீச்சாளர்களால் பாகிஸ்தான் அணியை முழுமையாக அட்டமிழக்கச் செய்ய முடியாமல் தோல்வியுற்றது.

மேலும் இலங்கையில் உள்ள மைதானங்கள் அநேகமாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதனமானவையாக அமைந்துள்ளன. கடந்த காலங்களில் இலங்கை அணியின் தொடர் வெற்றிகளுக்கு முத்தையா முரளிதரன், அஜந்த மெண்டிஸ் அதைத் தொடர்ந்து ரங்கன ஹேரத் போன்ற சுழற் பந்து வீச்சாளர்களே முக்கிய காரணமாக அமைந்துள்ளனர்.

ஆனால் அண்மையில் நடைபெற்ற பாகிஸ்தான் அணியுடனான தொடரின் போது இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அவ்வளவாகப் பிரகாசிக்கவில்லை. இலங்கை அணியின் நட்சத்திரச் சுழற்பந்து விச்சாளரான ரங்கன ஹேரத் கூட முதல் இரண்டு போட்டிகளிலும் விளையாடி 2 விக்கெட்டுகளை மாத்திரமே கைப்பற்றியிருந்தார். அதன் பிறகு அறிமுகமான தரிந்து கெளசாலும் பந்து வீச்சில் அவ்வளவாகப் பிரகாசிக்கவில்லை.

எனவே விராட்கோஹ்லி, சிகர் தவான், ரோஹித் சர்மா, ரஹானே, புஜாரா போன்ற நீண்ட துடுப்பாட்ட வரிசையைக் கொண்ட இந்திய அணியினரை கட்டுப்படுத்துவது இலங்கைப் பந்து வீச்சாளர்களுக்கு சிரமமான காரியமாகவே அமையப் போகின்றது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தைப் பொறுத்தவரையில் சற்று பலமான துடுப்பாட்ட வரிசையைக் கொண்டிருந்தாலும், கெளசால் சில்வா, குமார் சங்கக்கார, தலைவர் மெத்தியூசைத் தவிர மற்றைய வீரர்கள் அண்மைய காலப் போட்டிகளில் அவ்வளவாகப் பிரகாசிக்கவில்லை. கடந்த பாகிஸ்தான் தொடரின் போது இலங்கை அணித் துடுப்பாட்ட வீரர்கள் சுழற் பந்து விச்சுக்கே அதிக தடவைகள் ஆட்டமிழந்து சென்றனர். அத்தொடரில் வீழ்த்தப்பட்ட விக்கெட்டுகளில் அதிகமான விக்கெட்டுகளை பாகிஸ்தான் சுழற் பந்து வீச்சாளர்களே கைப்பற்றியிருந்தனர். எனவே இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு பலமானதாகவே உள்ளது. அவ்வணியில் ரவிச்சந்திரன் அஸ்வின், ஹர்பஜன் சிங், அமித் மிர்ஸா போன்ற சிறந்த சழற் பந்து வீச்சாளர்கள் இலங்கை அணித் துடுப்பாட்ட வீரர்களுக்கு அதிக நெருக்கடிகளைக் கொடுக்கலாம்.

இந்திய அணியைப் பொறுத்த வரையில் அவ்வணி கடைசியாக முகம்கொடுத்த இரண்டு டெஸ்ட் தொடர்களிலும் பிரகாசிக்கவில்லை. இவ்வருட ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட தொடரில் தோல்வியுற்றது. அத்தொடர் தோல்வின் எதிரொலியாக அப்போதைய அணித் தலைவர் மகேந்திரசிங் தோனி கடுமையான விமர்சனங்களுக்கும் ஆளாகினார். அத்தொடரில் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே இடைநடுவில் டெஸ்ட் போட்டியிலிருந்தும் அவர் ஓய்வு பெற்றார்.

அதன் பின் இந்திய அணிக்கு இளம் வீரர் விராட் கோஹ்லி தலைவராகத் தேர்வானார். அவர் தலைமையில் அண்மையில் பங்களாதேஷ் அணிக்கெதிராக நடைபெற்ற ஒரே டெஸ்டும் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது.

எனவே இளம் வீரர் விராட் கோஹ்லியின் தலைமையில் ஒரு முழுமையான டெஸ்ட் தொடரை இந்திய அணி சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். எனவே அவ்வணி திறமையாக விளையாட வேண்டிய நிர்ப்பந்தத்தில் அவ்வணி வீரர்கள் உள்ளனர்.

இந்திய அணி இலங்கை மண்ணில் கடைசியாக 1993 ஆண்டு நடைபெற்ற போட்டித் தொடரில் வெற்றி பெற்றதன் பின் இதுவரை தொடர் வெற்றியொன்றைப் பெற்றதில்லை.

கடைசியாக 2011ஆம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி 1-1 என்ற ரீதியில் சம நிலையிலேயே டெஸ்ட் தொடரை முடித்துள்ளது. இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான முத்தையா முரளிதரன், அஜந்த மெண்டிஸ் போன்ற வீரர்கள் திறமையாகப் பந்து வீசி இலங்கை அணியின் வெற்றிக்கு பங்காற்றியுள்ளனர். அவர்களின் ஓய்வுக்குப் பின் ரங்கன ஹேரத் திறமையாக பந்து வீசி இலங்கை அணியின் வெற்றிக்கு காரணமாயிருந்தார். ஆனால் அவரின் பந்து வீச்சும் அண்மையில் பெரிதாக எடுபடவில்லை.

எனவே 22 ஆண்டுகளுக்குப் பின்னர் இளம் தலைவர் கோஹ்லியின் தலைமையிலான இந்திய அணி தொடரைக் கைப்பற்றுமா அல்லது அண்மைய தோல்விகளால் துவண்டு போயிருக்கும் இலங்கை அணி இந்திய அணியை தன் சொந்த மண்ணில் வெற்றி கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.