புத் 67 இல. 32

மன்மத வருடம் ஆடி மாதம் 24 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 23

SUNDAY AUGUST 09 2015

 

 
தோல்விகளைத் தோள்களில் சுமந்த,

தோல்விகளைத் தோள்களில் சுமந்த, தினமணியைத் தினமும் சுமந்த, கனவுகளின் காதலன் கலாம்:

கனவுகளைத் தொலைத்த இளைஞர்களுக்காக...

“வாழ்க்கையின் இந்த ஒரு நாள் தான் உன்னுடைய அழுகைக் குரல் கேட்டு உன் தாய் சிரிப்பது”

அவுல் பக்கீர் ஜைனுலாவுதீன்

அப்துல் கலாம்

வறுமையின் முகவரி. பறவைக் கனவிலிருந்து பல விதக் கனவின் சொந்தக்காரன். இந்தியப் பொற்காலத்தின் பொறியியலாளன். அணு விஞ்ஞானத்தால் அல்லலுற்ற சிறார்களை அசைய முடியா கால்களை அசைக்க வைத்த அறிவியலாளன். அக்னி ஏவுகணையின் தந்தை இந்தியாவை உலக நாடுகளுக்கு உச்சிக்கு கொண்டு சென்ற தமிழ்க் குடிமகன் எல்லாவற்றையும் கடந்து மனித நேயம் மிக்க மனிதாபிமானி ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.

முகவரி ஒன்று ஆரம்பமானது:

ஆழமான ஆர்ப்பரிக்குமாழியிலிருந்து பொங்கி வரும் அலைகளெல்லாம் அந்தச் சாலையின் கரையில் மோதி மோதி உடைந்து உருவாக்கும் நுரைகளால் அழகுற்றது அந்தச் சாலை. அதுதான் மசூதிச் சாலை. இந்தச் சாலை இராமேஸ்வரத் தீவின் கடற்கரைச்சாலை. இதில் ஒரு சுண்ணாம்புக் கட்டடத்தாலான வீடு இது தான் கலாமின் பிறந்தகம். இங்குதான் 1931ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 31ஆம் திகதி ஓர் அழகுரல் கேட்டது. அக்குரல் தான் ஆன்மகவு அப்துலின் அழுகுரல் அவ் அழுகுரல் அதிசயமான குரலாக மாறுமென யாரும் அப்பொழுது அறிந்திருக்கவில்லை.

முகவரியிலிருந்து

படகோட்டியான தந்தை ஜைனுலாதீன் இல்லத்தரசியான தாயார் ஆஷியம்மா. இருவருக்கும் இவன் இளைய புத்திரன். இவனுடன் ஆறு உடன் பிறப்புகள். இதுதான் இவ் இஸ்லாமியக் குடும்பத்தின் முகவரி.

“தந்தை சொல்மிக்க மந்திரமில்லை”

ஜைனுலாதீன் தினமும் அல்லாவைத் தொழும் ஒரு மதங் கடந்த மார்க்கப்பற்றாளர். ஐந்து முறை தொழுகையைத் தவறவிடாதவர். அல்லாவின் புனிதம் ஜைனுலாதீனில் அருளாகக் கிடைக்கப் பெற்றது. இதனால் அவர் புனித மாந்திரிக நீரை எல்லா மக்களுக்கும் தெளித்தார். மாந்திரிக நீரால் மக்கள் மதப் பண்பைப் பெற்றனர். அப்துலும் தளராத இறை நம்பிக்கையையும், வழுவாத நேர்மையையும் தந்தையிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

நிலாச்சோறு:

அம்மா ஆஷியம்மா. அதிகம் படிக்காதவர். அவர் அப்துலுக்கு அமுதுடன் அன்பையும் சேர்த்து ஊட்டினார். ஆசைமகன் அப்துல் அவள் வாஞ்சையுடன் வாழை இலையில் உண்ண இடும் உணவை வாயாற உண்பான். ஆனால் இது தொடர் கதையல்ல. வறுமையின் வலை அவளை இறுக்கமாகப் போர்த்திய போது அவள் ஏது செய்வாள்? வறுமையின் பிடியில் அகப்பட்டாள். வறுமையைக் களையக் கலாம் தனது சிறுவயதினிலே தினமணிக் கட்டுக்களைச் சுமக்கலானான். தினமணிக் கட்டுகளை மட்டும் அல்ல அவன் தனது கனவுகளையும் சேர்த்துச் சுமக்கத் தலைப்பட்டான்.

அதிகாலையில் தினமணி சுமந்தான். அதன் பின் காலையில் களைப்புடன் அவசர அவசரமாக அரபுப் பள்ளிக் கோடினான். அந்திபடும் நேரம் தொழுகைக் கோடினான். அதன் பின்பு தந்தை உடன் சேர்ந்து படகைத் தள்ளினான்.

மதங்கடந்த மார்க்கப்பற்றாளன்

இராமேஸ்வரத் தீவின் புகழ்பெற்ற கோயில் இராமேஸ்வரர் ஆலயம். இங்கு நடக்கும் தீர்த்தோற்சவத்தில் இறைவனைப் படகில் இழுக்க வேண்டும். இப்பொறுப்பை அப்துலின் தந்தை ஜைனுலாதீன் ஏற்றுக்கொண்டார். இராமேஸ்வர இழுவைப் படகில் இழுக்கும் போது கலாமும் சேர்ந்திழுத்தான். இதனால் கலாம் தனது இஸ்லாமிய மார்க்கத்துடன் இந்து மார்க்கத்தையும் சேர்த்து இழுத்தான். இதன் காரணமாக இந்து மதத்தினருடன் அவர் இறுக்கமான பற்றை ஏற்படுத்திக் கொண்டார். இதற்கு இன்னும் இரவினில் ஆஷியம்மா நபிகள் கதைகளையும் இராமாயணக் கதைகளையும் கூறிக் கலாமின் மதச் சார்பின்மைக்கு வலுச் சேர்ந்தார். கலாமின் பிஞ்சு நெஞ்சில் மதச் சார்பின்மை மிஞ்சி நின்றது.

உறவுகள் உரம் ஊட்டின

கலாமுடன் உடன் பிறந்தவர்கள் அறுவரில் மூவர் முத்தியடைய மிஞ்சியவர்கள் அண்ணன் முத்துமீரான். அவருடைய இல்லம்தான் இப்பொழுது “கலாம்” இல்லம் ஆனது. அடுத்த அண்ணன் முஸ்தபா. அவரும் மண வாழ்க்கையின் ஆரம்பப் படிகளில் மரணமடைந்தார். ஆசைச் சகோதரி ஜொகரா அப்துலின் அக்கா. அப்துலின் விமானக் கனவை நனவாக்க வளையல் விற்ற வள்ளல் அவள். அவளின் வளையலின் பெறுமதி இந்தியாவுக்கு வெகுமதியானது.

நொருங்கியது பிஞ்சு நெஞ்சு

அப்துலுக்கு வயது ஆறு. ஒரு மாலைப் பொழுதில் ஆழ்கடலின் அமைதியெல்லாம் அலைகளாகப் பொங்கி எழுந்து ஆர்ப்பரித்தன. அதிர்ந்தது கடல், கலாமும், தந்தையும், கலாமின் நண்பர் ஜலாலுதீனும் இணைந்து கட்டிய படகு அலைகளின் அடிப்பால் தகர்ந்து போனது. படகு மட்டுமல்ல கலாமின் பிஞ்சு நெஞ்சுக் கனவுகளும் தான். கலைந்து போன கனவுகளையெல்லாம் மீண்டும் கருக்கொள்ளச் செய்யும் தன்மையை ஜலாலுதீன் தான் கலாமுக்குக் கற்பித்தார். அலைகடலுடன் அப்துலின் கனவுகளெல்லாம் அடித்துச் செல்லாமலிருக்கத் தைரியமூட்டிய தைரியவான் இவர்தான் பிற்காலத்தில் அப்துலின் அக்காவின் கணவரானார்.

கடின உழைப்புக்கு வித்திட்டார் சும்சுதின்

சும்சுதீன் அப்துலின் ஒன்றுவிட்ட அண்ணன். தினமணிப் பத்திரிகையின் முகவர். இரண்டாம் உலக மகா யுத்தத்தில் இந்தியாவும் பங்கேற்க வேண்டியேற்பட்டதால் இராமேஸ்வரத்தில் ரயில் தரித்து நிற்பது தடைப்பட்டது. இதனால் அதிகாலை ரயிலிலிருந்து அவசர அவசரமாகத் தினமணிக் கட்டுகள் தூக்கி வீசப்படும். வீசப்படும் கட்டுகளையெல்லாம் அப்துல் அதிகாலையில் சுமந்து சும்சுதினுக்குக் கொடுப்பான். பின் வீடு வீடாக விற்பான். சிறிது தாமதமானால் வீட்டாரின் கனல் போன்ற வார்த்தைக் கணைகளையும் ஏற்றுக்கொண்டான். இதனால் கலாம் கடின உழைப்பைக் கற்றுக் கொண்டான். இதன் போது கலாம் மூன்றாம் வகுப்புத்தான் படித்துக் கொண்டிருந்தான். தினமணியும், புளியங் கொட்டைகளும் கலாமின் கடின உழைப்புக்கு வசைமைத்தன. தினமணிக்கு அப்போது தெரியாது இந்தக் கலாமைத் தான் ஒருநாள் சுமந்து வருவேன் என்று.

கலாமின் நட்பு நசுக்கப்பட்ட போது:

இராமேஸ்வரத் தொடக்கப் பள்ளியில் கலாமும், இராமேஸ்வர ஆலயக் குருக்களின் புத்திரன் இராமநாத சாஸ்திரியாரும் இணைபிரியா நண்பர்கள். கலாம், சாஸ்திரியுடன் வகுப்பின் முன் இருக்கையில் இருந்த போது, புதிதாக வகுப்புக்கு வந்த பிராமண ஆசான் தொப்பியும், பூனூலும் ஒன்றாக இருப்பதா? முடியவே முடியாதெனக் கலாமைக் கடைசி இருக்கைக்கு விரட்டினார். கலாமின் பிஞ்சு நெஞ்சு உடைந்து போனது. ஆயினும் சாஸ்திரியின் தந்தை இதனைக் கடுமையாக எதிர்த்தார். மீண்டும் சாஸ்திரியும் கலாமும் காலமெல்லாம் நண்பர்களாயினர்.

முதற் குரு சிவசுப்பிரமணிய ஐயர்:

இவர் கலாமின் விஞ்ஞான ஆசிரியர். இவர் தான் கலாமின கனவுகளுக்கு உயிரோட்டம் கொடுத்த உன்னத ஆசான். கலாமின் விஞ்ஞான அறிவை விரிய வைத்த வித்தகர். குரு சிஷ்ய உறவைத் தனித் தன்மையைக் கலாமுக்குக் கற்றுக் கொடுத்தவர். இஸ்லாமிய மாணவன் இந்து வீட்டில் விருந்துண்பதை ஐயரின் மனைவி கடுமையாகவெதிர்த்த போதும் அதைக் கனம்பண்ணாமில் கலாமுக்கு தனது வீட்டிலே அன்னமிட்ட ஆசான்.

முதல் ஆசீர்வாதம்:

கணித ஆசிரியர் இராமகிருஷ்ண ஐயர். ஒரு நாள் கலாம் ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த பொழுது தவறுதலாக வேறொரு வகுப்பில் நுழைந்ததால் கலாமை மயக்கமுறும் வரை அடித்து நொருக்கினார். மயங்கி வீழ்ந்தான் கலாம். ஆனால் அவனுடைய கனவுகள் மயங்கவில்லை. அடுத்த முறை நடந்த தேர்வில் நூறு புள்ளிகள் பெற்று ஐயரின் ஆசீர்வாதத்தையும் பெற்று அகமகிழ்ந்தான்.

பறவைக் கண்டான் விமானம் படைத்தான்

ஐந்தாம் வகுப்பில் அப்துல் கல்விச் சுற்றுலா சென்றான். அதன்போது அவன் பலவிதமான பறவைகள் சூரியோதயம், போர் விமானங்கள் என்பவற்றைப் பார்த்து மகிழ்ந்தான். பறவைகள் பல விதம் விதமாகப் பறப்பதைக் கூர்ந்து கவனித்தான்.

அந்தப் பறவைகள் தான் கலாமின் விமானக் கனவை விரியச் செய்தன. சுற்றுலா முடிந்து திரும்பியவன் ஆஷியம்மாவிடம் “அம்மா, நானும் ஓர் நாள் இந்தப் பறவைகளைப் போல் பறப்பேன்” என்றான்.

ஆனால் ஆஷியம்மாவோ அதைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.

மேல்நிலைப் பள்ளிக்குப் பறந்தது கிராமத்துக் குயில்:

கலாம் தனது ஆரம்பப் பள்ளிக் கூடத்தைத் தொடர்ந்து மேல் நிலைப்பள்ளிக்கூடம் செல்ல ஆயத்தமானான். கடற்கரை, படகுகள், நண்பர்கள், இராமேஸ்வரர் ஆலயம், உறவுகள், ஆசான்கள் எல்லாவற்றையும் பிரிந்து இராமேஸ்வரத்தின் தலைநகர் முகவையை நோக்கிக் கிராமத்துக் குயில் பறந்தது. தந்தையோ மகன் கலெக்டராக வேண்டுமென அல்லாஹ்வைப் பிரார்த்தித்தார். மகனோ தான் விமானியாக வேண்டுமென்று மசூதியின் மானசீகமாக மன்றாடினான். கனவுகளைச் சுமந்து பிரிவுகளை வேதனையாக்கி கிராமத்துக் குயில் முகவை பாயணமாகியது.

(அடுத்தவாரம் தொடரும்)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.