புத் 67 இல. 32

மன்மத வருடம் ஆடி மாதம் 24 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 23

SUNDAY AUGUST 09 2015

 

 

மசுக்குட்டீ

மசுக்குட்டீ

இளம் வயதினருக்கு மசுக்குட்டியைத் தெரியவே தெரியாது. எழுபது வயதுக் காரர்களுக்கும், அதற்கும் கூடிய வயதினருக்குமே அவனைத் தெரிந்திருக்கும். நவாலி, சென். பீற்றர்ஸ் பாடசாலையில் நாங்கள் இரண்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த காலந்தான் அவனுடைய பிரசன்னம் நிகழ்ந்தது.

உருண்டு இரண்ட குண்டு உடற்கட்டு, கறிப்போ வெள்ளையோ என்று குறிப்பிட முடியாத பொது நிறம். ரோமங்கள் நரைத்து விட்டன. தலை மயிரை நன்றாக ஒட்ட வெட்டி இருப்பான். குருவானவர் வைத்துக் கொள்கின்ற நீண்ட தாடி.

இடையில் நாலு முளத்துண்டை முழங்காலுக்குச் சுற்றிக் கீழ்வரை தெரியக் கூடியதாகக் கட்டி இருப்பான். மேலுக்கு வெள்ளை அரைக்கை வைத்த பெனியன் போட்டுக் கொள்வான். அதுவும் இடை இடையேதான் பெரும்பாலும் வெற்றுயுடல் தெரிய உலாவுவான்.

வெள்ளை உடைக்கு நீண்ட நாட்களாக நீலம் போடா விட்டால் காணப்படும் பழுப்பு நிறமே அவனது நாலு முளமும், பெனியனும் நூலினால் திரிக்கப்பட்ட தடித்த ஒரு பாகக் கயிற்றை இடையில் கட்டிக் கொண்டிருப்பான். மேனி அடங்கியிலும், ரோமம் வயிற்காட்டுப் பயிர்களைப் போலவே சாய்ந்திருக்கும்.

அதனால் தானோ மசுக்குட்டி என்ற காரணப் பெயரும் சூட்டப்பட்டிருந்தது. அவனுக்குரிய உண்மைப் பெயர் எவருக்குமே தெரிந்திருக்கவில்லை. சாக்கொன்றை முனையால் கூட்டிக் கட்டிக் கொண்ட மூட்டை ஒன்றைக் காவித்திரிவான். கையில் பொல்லொன்றும் வைத்துக் கொள்வான்.

அந்த மூட்டைக்குள்ளே தான் அவனது வைப்புச் சொப்பெல்லாம். எந் நேரமும் துப் பரவாகவே இருப்பான் கட்டி இருக்கும் நாலு முளம் பெனியன், நூல் கயிறு, மூட்டை அடங்கிய சாக்கு எல்லாமே அழுக்கடையாமல் தோய்த்துக் காயப் போட்டுப் பேணிக் கொள்வான்.

தேசாந்திரியாக உலாவரும் அவனுக்கு அறுபது, எழுபதுக்கும் இடைப்பட்ட வயதை கணிக்கலாம். எவருடனும் கதைத்ததை நான் கண்டதில்லை. நவாலி, சென். பீற்றர்ஸ் தேவாயல வளாகத்துக்கு இடைஇடை வந்து தங்கிப் போவான்.

“மசுக்குட்டி வந்திட்டான்ரா... மசுக்குட்டி வந்திட்டான்ரா....” பாடசாலை இடைவேளையிலும், பாடசாலை முடிந்த நேரங்களிலும், மாணவர் அவனைச் சூழ்ந்து நின்று வேடிக்கை செய்வதை அவன் சட்டை செய்வதில்லை. தன்பாட்டில் அங்கும் இங்குமாகப் பார்த்து யோசனை செய்வதுபோன்று இருப்பான்.

தனிமையில் வாயசைத்து தன்னுள் எது எதுவோ பேசிக்கொள்வான். ஆலயக் கிணற்றில் குளித்து, ஆடைகளைக் கழுவிக் காயப்போட்டு ஆசறியாக மாமரம், மணிக்கூண்டு அமைவிடம், ஆலய வெளி விறாந்தைகளில் ஓய்வெடுத்துக் கொள்வான். அவ்விடங்கள் மாற்றம் அடைந்தும் பல வருடங்கள் ஓடி விட்டன.

உணவுக்கு என்ன செய்கிறானென்பது புதிராகவே இருந்தது. கடைகளில் தேனீர் மற்றும் பல காரம் சாப்பாடு வாங்கியதைப் பார்க்கக் கிடைக்கவில்லை. வீடு, வீடாகப்போய் இரப்பதாகவும் காணவில்லை. இரவுகளில் எங்கு தான் தங்குகிறான் என்பதும் என்னால் அறியப்படாமலே இருந்தது.

“மச்சான் சேகர்... அவன்ர சாக்குமூட்டேக்கை என்னடா வைச்சிருப்பான்..” ஆவல் மேலீட்டால் சேகரிடம் கேட்டான் முரளி.

“எனக்கென்னடா தெரியும் முரளி... எடுத்துப் பாத்தால் தெரியும்” எண்டான் சேகர்.

“ஒரு நாளைக்குவர் சாக்கு மூட்டையை வைச்சுப் போட்டுக் குளிக்கேக்கை அவிட்டுப் பாப்படா...” எண்டன் நான்.

எங்களுக்கு அப்ப ஆறு, ஏழு வயதுதான் இருக்கும். அதனால் பாடசாலையில் இருக்கும் வரைதான் மசுக்குட்டியின் நடமாட்டமும் தெரிந்திருந்தது. இரவுகளில் கோவிலுள் அவன் தங்கவும் கூடும். என்றாலும் ஓரிரு தினங்கள் மட்டும் தான் அவனைக் காணவும் முடியும்.

இவ்விதம் வெவ்வேறு இடங்களுக்கு செல்வதும் வழக்கம். திரும்பவும் சில மாதங்கள் போக மசுக்குட்டி வருவான். எல்லாக் காலங்களிலும் அவன் ஒரே மாதிரியே காணப்பட்டான். வெகுண்டெழுந்து குளப்பம் செய்யும் சுபாவம் அவனிடம் இருக்கவில்லை. அதனால் சிறுவர் அவனை வளைத்து நின்றே ஏதும் கதை கேட்டால் உதடுகளில் புன்னகை ஒன்றே வெளிவரும்.

எப்பொழுதுமே தன்னுடைய உடமைகளான சாக்கு மூட்டையில் கவனமாக இருக்கும் அவனது பொதியை அவிழ்த்துப் பார்த்த எங்களுக்கு அடியில் ஒரு பொக்கிசம் போன்று பல சுத்துகளில் கட்டிவைத்திருந்த தடித்த கொப்பி ஒன்று அகப்பட்டது. எடுத்துக் கொண்டு பொதியைக் கட்டிவைத்து விட்டோம்.

பொதியில் வைக்கப்பட்டிருந்த பொக்கிசம் இல்லாமல் போய் விட்டதை மசுக்குட்டி அறிந்து விட்டான். அங்கும் இங்கும் திரிந்து தேடிய மசுக்குட்டி சாக்கு மூட்டையை அவிழ்ப்பதும், கலங்குவதுமாய் அன்றைய நாள் முடிந்தமை மறைவாய் இருந்து கவனித்தோம்.

அன்றிரவே அப்பொக்கிசத்தை அவிழ்த்து வாசித்து விட்டு பழையபடி இருந்த மாதிரியே கட்டி மறுநாள் பாடசாலைக்குப் போகையில் மசுக்குட்டியின் பார்வையில் படும் விதமாக வைத்துவிட்டோம். அதற்குப் பின்பாக அவன் நவாலிக்கு வந்து போனதாக அறிய முடியவில்லை.

சில மாதங்களால் நானும் பிறந்த ஊரைத் துறந்து வெளியேறி விட்டேன். இப்பவும் எனக்கு மசுக்குட்டியின் கதை ஞாபகம் இருக்கிறது. அவ்வயதில் அவனது பொக்கிசத்தை வாசித்து அறிந்ததை விடவும் விரிவாக.

பதுளை, சுவாமிமலைத் தோட்டத்துக் கணக்குப்பிள்ளை ரெட்ணத்தின் ஒரேமகன் ஜேம்ஸ். அவனை நன்றாகப் படிப்பிக்க வேண்டுமென்ற அவரது விருப்பம் வீண் போகவில்லை. தோட்டத்துக் கணக்குகளுடன் பதுளை நகரில் இருந்த வர்த்தக நிலையங்களுக்கும் கணக்கெழுதி ஜேம்ஸைப் படிப்பித்தார்.

ஜேம்ஸை அவனுக்குப் பிடித்தமான துறையைத் தெரிவு செய்து படிக்கவும் துணை நின்று உதவினார். கல்வித் தராதரப் பத்திர சாதாரண வகுப்பில் படித்துக் கொண்டிருந்த ஜேம்ஸ் இளமைத் தோற்றம் வளர வளர நல்ல ஆண் அழகனாகவே தோற்றமளிக்கத் தொடங்கினான்.

ஞாயிறு கடன் திருநாள் பூசை காண சுவாமலைத் தோட்டத்தில் இருந்து பதுளை நகர்த் தேவதாயார் தேவாலயம் வந்து செல்வதும் வழக்கம். கற்பதற்கும் பதுளை நகருக்கே தினமும் வந்தும் போவான்.

ஆராதனைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்ப எத்தனித்தவன் பார்வை. ஓரிடத்தில் நிலை குத்தி நின்றது. அங்கே நின்ற அழகுச் செளந்தரியம் அவனையே இமை வெட்டாமல் பார்த்து நின்றது. இவனும் நோக்கினான், அவளும் நோக்கினாள்.

நிலைமையைச் சுதாகரித்துக் கொண்ட ஜேம்ஸ் வீடு போய்ச் சேர்ந்தும், அவ்வழகுச் செளந்தரியத்தின் தரிசனம் அவனை இனம் புரியாத உலகில் சஞ்சரிக்கச் செய்தது. ஒவ்வொரு ஞாயிறுகளிலும் அந்தச் செளந்தரியத்தின் பார்வைகளும், அபிநயங்களும் ஜேம்ஸ¤க்கு இவ்வுலகையே மறக்க வைத்தன.

“உந்தப பொண்ணு யாரு மச்சான்” தேவாலயச் சிநேகிதன் பீற்றரிடம் ஜேம்ஸ் வினவினான்.

“அது பர்ணாந்து முதலாளிட ஒரே மகள்... சிசிலியா மச்சான் தெரியாதே...”

பீற்றர் கூறியதும் பர்ணாந்து முதலாளி பற்றி, அவனுக்கு ஏற்கனவே தெரிந்தனவை நினைவில் ஓடின. பதுளை நகரில் பெரிய தொழிலதிபர் பர்ணாந்துப் பிள்ளே முதலாளி பிடவை, அழகு சாதன, மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் ஐந்துக்கும் மேற்பட இருந்தன.

திரைப்பட மாளிகை, குடிவகை நிலையம், லோவர் வீதியில் மூன்றடுக்கு மாளிகை வீடு. அவற்றை விடவும் இன்னமும் வெவ்வேறு பிரதேசங்களில் இன்னும் பல மாளிகைகள், வாகனங்கள், இத்தியாதி... இத்தியாதி...

அத்தனை சொத்துகளுக்கும் சிசிலியா என்ற அழகுச் செளந்தரியமே ஏக உரிமைக்காரி. ஜேம்ஸ¤க்கும், சிசிலியாவுக்கும் இமாலய வேறுபாடு. அவன் வீதியால் நடந்து செல்கையில் பென்ஹர் வாகனத்தின் பின்பக்கம் அமர்ந்திருக்கும் சிசிலீயா இவனைக் கண்டு கொண்டால் பின் கண்ணடி ஊடாகத்திரும்பிப்பார்ப்பாள்.

லோவர் வீதியில் அவளது மாளிகை வீட்டுக்கு முன்பாக நடந்து போகையில் தற்யெலாகத் திரும்பிப் பார்த்த இவன் பார்வையில் மாடியில் நின்று அவள் பார்ப்பது தென்றலாய் வீசும் ஞாயிறுகளில் கடன் திருநாள் பூசைகளுக்குப் போய் வந்த சமயங்களில் இன்னுமின்னும் எத்தனை... எத்தனை ஜாடைகள்.

ஜேம்ஸ¤க்கு தன் நிலைமையிலும் அவள் எட்டாக்கனி என்பதை உணர்ந்து எட்டிஎட்டியே போனான். சிசிலியா அவனை நெருங்கி நெருங்கியே வந்து கொண்டிருந்தாள். அழகுச் செளந்திரியத்தின் காதல் இன்பியல், ஜேம்ஸ் மனதில் அவளின் உயர்நிலை பீதியை ஊட்டிய தால் துன்பியலாக இருக்கும்.

“உங்களை என்மனதார நேசிக்கின்றேன்.. என்ன இடர்பாடு வந்தாலும் உங்களையே எனது வாழ்க்கைத் துணையாக வரிந்து விட்டேன்...”

சிறு துண்டொன்றில் எழுதி சிசிலியா, அவன் மடியில் போட்டுச் சென்றதை வாசித்ததும், அவனால் அதனைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இருண்ட உலகில் அவன் தனியாய் அகப்பட்டு தத்தளிப்பது போலாகிவிட்டது.

“சிசிலியா... உன்ர வாழ்க்கை வள மென்ன... ஒரு பிச்சைக்காரப் பயலைக் காதலிகிறாயா... அதையெல்லாம் மறந்து விடு... உனக்கும் மேசேஸ் முதலாளி மகன் டேவிட்டுக்கும் கல்யாணம் செய்து வைக்க இருக்கும் என்னாசையில் மணண்ள்ளிப் போட்டு விடாதே...”

பர்ணாந்துப் புள்ளே முதலாளி மகளிடம் கூறும் அவளுக்கு சிசிலியாவின் காதல் தீவிரம் அடைந்தபோது, ஜேமிஸின் தகப்பனார் ரெட்ணம் அழைக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டது. பதுளையில் ஜேம்ஸ் கல்வியைத் தொடர்ந்தால் அவனுக்கும் உயிர் ஆபத்து வருமென எண்ணி கண்டி, திரித்துவக் கல்லூரி விடுதியில் அவன் தங்கிப்படிக்க வைத்தார் ரெட்ணம்.

“ஜேம்ஸை கணவனாய் ஏற்றுக் கொண்ட என்னுடைய இதயத்தில் இன்னொருவரை வைத்துப் பாக்க முடியாதப்பா... என்னை என்னுடைய வழியிலேயே செல்ல விடுங்கள்... உங்களின் சொத்துகள்... சுகமொண்டுமே வேண்டாம்...”

சிசிலியா தகப்பனுடன் போராடிப் பசிக்கக் கிடந்தும் அவரின் செல்வச் செருக்கால் இரும்பான இதயத்தில் இரக்கம் சுரக்கவில்லை. சிசிலியாவின் சிந்தனை தெளிவான ஒரு முடிவைத் தேர்ந்தும் கொண்டது.

உண்ணாமல், உறங்காமல் கிடந்து சீரழியவோ, தற்கொலை என்னும் கோழை தனமான முடிவைத் தேடவோ இல்லை. தன்னுடைய வாழ்ந்¡ள் முழுவதும் வாழ்ந்து முடிக்கும் இறைவன் நீதியையும், மீறாதவளாய் கன்னியாஸ்த்திரி கூட்டத்தில் தன்னையும் இணைத்து, மனித வாழ்க்கையின் மகத்துவத்தை உணர்த்தது துணிவுகொண்டாள்.

ஜேம்ஸ் கண்டி திரித்து வக்கல்லூரியில் உயர்தரப்படிப்பு முடித்து சுவாமிமலைத் தோட்டம் வந்து சேர்ந்தான் கணக்கப்பிள்ளை ரெட்ணம் மகன் பரீட்சையில் போதிய புள்ளிகளைப் பெற்றால் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி அவனை பட்டதாரி ஆக்கிப் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டவராக இருந்தார்.

இப்பொழுதெல்லாம் ஞாயிற்றுக்கிழமை கடன் திருநாள் பூசை காண ஜேம்ஸ் பதுளை நகரத் தேவதாயார் தேவாலயம் செல்வதில்லை. தோட்டத்து சிறிய கோவிலுக்கே செல்வான். பதுளைத் தேவாலயம் போனால் பழைய நினைவுகள் தோன்றி வாட்டி விடுமென்றே பயந்தான்.

பதுளை நகரால் வேலை முடிந்து வந்த தகப்பன் ரெட்ணம், பரீட்சை முடிவுகள் வெளிவந்த பத்திரிகையை வாங்கிப் பார்த்து மகன் 4.எ. 3.பி பெற்றுள்ள தகவலையும் அறிந்து வந்திருந்தார்.

“மச்சான் ஜேம்ஸ்... உனக்கு விசயம் தெரியுமா... உன்னை விரும்பிய பர்ணாந்து முதலாளி மகள் சிசிலியா... கன்னியாஸ்திரியாக மடத்தில் சேர்ந்திட்டுதாமே....”

தகவல் அறிந்து கொண்ட ஜேம்ஸ், எவ்விதப் பாவனைகளையும் காட்டிக் கொள்ளவில்லை. வீடு வந்ததும் தகப்பனார் பரீட்சை முடிவுகள் வந்திருந்த பத்திரிகையை அவனிடம் கொடுத்து முடிவையும் கூறினார்.

அவனுக்குப் பரீட்சையில் தேர்வாவேன் என்னும் திடமிருந்தது. பொருளாதாரம் தராசில் தாழ்ந்து இருக்கும் தனது வாழ்வு கல்வி முன்னோற்றத்தால் சீராக முயற்சி எடுத்துப் படித்துப் பரீட்சையையும் எழுதி இருந்தான்.

“மகன்... இனி என்ன படிக்க வேணுமென எண்ணுறியோ சொல்லு... உன்னை அந்த ஏணியில் ஏத்தி விடுவதுதான் எனது இலட்சியம்....”

தகப்பன் கேட்டபோது சிந்திக்கத் தொடங்கினான். சிசிலியா கன்னியாஸ்திரி உரையுடன் மனக்கண்களில் தோன்றி மறைந்தாள். அவனுக்கும் சிசிலியா இல்லா இவ்வுலகில் வாழப் பிடிக்கவில்லை. தானும் துறவறம் பூண்டு கிறிஸ்தவக் குருவாக உயரும் சிந்தனை வலுப்பெற்றது.

“அப்பா... நானொரு குருவாக ஆசைப்படுறேன்...”

ஜேம்ஸ் கூறிய வார்த்தைகள் இடியென ரட்ணம், மனைவி மேரி இருவரது காதுகளிலும் வீழ்ந்தது. அவனொருவனே மகனாகப் பிறந்ததால், தங்களின் வாரிசை இழக்கும் தற்குறியே அவர்களின் மனதைப் பெரிதும் வாட்டியது.

இருவருக்கும் இன்னொரு வகையில் அவனது முடிவு நியாயமாகவும் பட்டது. இதுவரை சிசிலியா கன்னியாஸ்திரியான தகவல்களை அறியாமல் இருப்பதற்கு இருவரும் கிணற்றுத் தவளைகளா இல்லை.

கொழும்பு இறையியல் கல்லூரியில் தன்னுடைய குருத்துவப் பட்டத்துக்கான கற்கையில் ஜேம்ஸ் ரெட்ணம் நுழைந்தான். மூன்றாண்டுகள் முடிவில் ஆங்கில மொழியில் அவனுக்குப் போதிய நுட்ப அறிவு போதாமை காரணமாய் நீக்கப்பட்டான்.

தாய், தகப்பன் மறைவு, தன் வாழ்க்கை லட்சியச் சிதைவு எல்லாம் சேர்ந்து அவனது அறிவை மாதங்கள், வருடங்களாச் சிதைத்து அழிக்கத் தொடங்கின. சிசிலியாவின் காதல் தோல்வி, குருத்துவ வாழ்வுக்கான முயற்சி தோல்வி இரண்டும் அவனை இன்னொரு தோல்விக்கு இட்டுச்செல்வதை அவன் தேர்ந்து கொள்ள விரும்பவில்லை.

ஊரூராக நாலு முளத்துண்டு, தோளில் சாக்கு மூட்டை, கையிலொரு பொல்லு இதுதான் ‘மசுசுக்குட்டி’ என்று வழங்கப்படுகின்ற ஜேம்ஸ் ரட்ணத்தின் கதை. பருவத்துக்குப் பருவம் இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் இருந்து வந்து போகும் பறவைகளைப் போல வந்து போய்க் கொண்டிருந்த மசுக்குட்டியின் மறுபக்கத்தைப் பார்க்க ஆசைப்பட்ட எனக்கு அவனுடைய வரைவுகள் அந்த உண்மையைக் கூறியுள்ளன. அவன் எடுத்துக் கொண்ட பாத்திரம் இதுதான்.

மசுக்குட்டியின் காதல் நூறு ஆண்டுகள் முன்பாக நடந்தேறியது. சாதி, வர்க்க ஏற்றத் தாழ்வுகளால் தெய்வீகக் காதலர்கள் பிரிக்கப்பட்டனர்.

காதலை விடவும் மேலானதாம் இழப்புகள் பின்நாளில் நடந்து முடிந்தும் போயின். ஆயினும் காதல் காலம் காலமாக வளர்ந்து, வாழ்ந்து கொண்டே உள்ளது; ஒன்றும் விந்தையாக உலகுக்குத் தெரியவில்லை.

தோல்விகள் வெல்லப் பட இவ்வுலகில் முற்று முழுதான மாற்றம், வேண்டி நிற்பதை மசுக்குட்டியின் வாழ்வும் சுட்டி நிற்கிற தல்லவா?

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.