புத். 68 இல. 11

மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜமாதுல் ஆகிர் பிறை 03

SUNDAY MARCH 13, 2016

 

 

மலையகத்துக்கு விகிதாசார பிரதிநிதித்துவமே பொருத்தமானது!

மலையகத்துக்கு விகிதாசார பிரதிநிதித்துவமே பொருத்தமானது!

(சென்றவார தொடர்)

மாகாண சபை அமைப்பும் இந்திய வம்சாவளித் தமிழர்களும்

13ஆவது சீர்திருத்தம் அமுலுக்கு வந்து மாகாண சபை அமைக்கப்பட்டபோது அது மாகாணங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே உள்ள அதிகாரப் பகிர்வையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. மாகாணங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே எவ்வாறு அதிகாரப் பகிர்வு அமைய வேண்டும், எந்த அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பதையே குறிக்கோளாக கொண்டிருந்தது. ஆனால் மாகாணம் என்கின்ற ஓர் அமைப்புக்கு உரித்தாக இல்லாமல் பல்வேறு மாகாணங்களிலே அதுவும் சில மாவட்டங்களில் செறிவாகவும், மற்றும் சில மாவட்டங்களில் செறிவு குறைவாகவும் வாழ்கின்ற இந்திய வம்சாவளித் தமிழருக்கு இந்த அதிகார பகிர்வானது தூரத்துப் பச்சையாகவே உள்ளது.

பெல்ஜியம் போன்ற நாடுகளைப் போல் பிரதேசம் சார்ந்த அதிகாரப் பகிர்வோடு நின்றுவிடாமல் சமூகம் சார்ந்த அடிப்படை அதிகாரப் பகிர்வு இடம்பெற்றால் மட்டுமே நமது நாடு ஒரு பல்லின நாடு என்று கூறுவதற்கு அர்த்தம் இருக்கும். இப்பிரச்சினைதான் சிக்கலின் உயிர்க்கூறு எனலாம். இதற்கு தகுந்த நிறுவன அமைப்புகள் (Institutional Mechanisms) மூலம் விடை காண வேண்டியது அவசியமாகும்.

தற்பொழுது மத்திய, ஊவா மாகாணங்களில் முறையே ஒரு இந்திய வம்சாவளித் தமிழர்கள் அமைச்சராக உள்ளனர். இவ்வாறு அமைச்சரவையில் அங்கத்துவம் வகிக்கும் போது அவர்களுக்கு மாகாண அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய கருத்துக்களைத் தெரிவிப்பதற்கும், முடிவுகளை எடுப்பதற்கும் உரிமை உள்ளது. ஆனால் அனுபவ ரீதியில் பார்த்தால் இந்திய வம்சாவளித் தமிழ் அமைச்சர்களுக்கு அதிகாரப் பகிர்வுகள் சரிவர வழங்கப்படவில்லை. இதேபோன்ற நிலைதான் ஊவா மாகாணத்திற்கும் இருக்கின்றது.

மத்திய மாகாண சபை

1வது சபை 1988 முதல் 1993 வரை சிங்கள பாடசாலைகள் உட்பட முழுமையான பாடசாலைத்துறை இந்த அமைச்சின் கீழ் இருந்தது. 2ஆவது சபை 1993இல் இருந்து 1998 வரை கல்வி மீண்டும் இந்த அமைச்சின் கீழே வருகிறது. 3ஆவது சபை 1999 இலிருந்து 2004 வரை சிங்கள பாடசாலைகள் உட்பட 1999 – 2000 க்கும் இடையில் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அதற்கு பின் தமிழ்க் கல்வி மாத்திரம் தான் பொறுப்பளிக்கப்பட்டது. 4ஆவது சபை 2005 தொடக்கம் 2008 வரை தமிழ்த்துறை கல்வி நீக்கப்பட்டது. தமிழ் கல்வித்துறையில் மேற்பார்வை பொறுப்பு மாத்திரம் அளிக்கப்பட்டது. 5ஆவது சபை 2009 இலிருந்து 2013 வரை தமிழ்க் கல்வித்துறை முழுவதுமாக கொடுக்கப்பட்டது. 6ஆவது சபை 2013 தொடக்கம் 2015 வரை தமிழ் கல்வித்துறையில் மேற்பார்வை பொறுப்பு மாத்திரம் அளிக்கப்பட்டுள்ளது. கலாசார பாதுகாப்புக்கும் மேம்பாட்டுக்குமென போதுமானளவு நிதி ஒதுக்கப்படுவதில்லை. மேலும் வேறு துறைகளில் எவ்வாறு நிதி ஒதுக்கப்படுகிறது என்பதை கண்காணித்து விகிதாசாரத்திற்கேற்ப அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு எந்த அளவுக்கு இந்த இரு மாகாண தமிழ் அமைச்சர்களுக்கும் அதிகாரம் உள்ளதென்பது ஒரு கேள்விக்குறியாகும்.

மத்திய, ஊவா மாகாணங்கள் தவிர்ந்த சபரகமுவ, மேல், தென், வடமேல், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் இந்திய வம்சாவழித் தமிழர்கள் வாழ்கின்றனர். இவற்றுள் சபரகமுவ, மேல் மாகாணங்களைக் குறிப்பிடலாம். இவ்விரு மாகாணங்களில் அமைச்சர் குழுவில் இந்திய வம்சாவளித் தமிழர் இடம்பெறவில்லை. இந்திய வம்சாவளித் தமிழர் பற்றிய அபிவிருத்தி திட்டங்களில் இந்திய வம்சாவளித் தமிழர் பிரதிநிதிகளுக்குத் தகுந்த பங்களிப்பு கிடைப்பதில்லை. இவ்விரண்டு அமைச்சரவைகளிலும் இந்திய வம்சாவளித் தமிழர்களின் பங்களிப்பு இடம்பெற வேண்டும். விசேட குழுக்கள் இதர மாகாணங்களில் இந்திய வம்சாவளி பிரிவினரின் நலன்களை கவனிப்பதற்காக குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

04 மொழி உரிமை

இப்பொழுதுள்ள சட்டத்தின் பிரகாரம் சிங்களமும், தமிழும் முழு இலங்கையிலும் உத்தியோகபூர்வ மொழிகளாக விளங்குகின்றன. சிங்கள மொழி சகல மாகாணங்களிலும் நிர்வாக மொழியாகவும் பொது ஆவண மொழியாகவும் இருக்கின்றது. அதேவேளை மொழிச்சட்டத்தின்படி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டும் தமிழ்மொழி பொது ஆவணத்திற்காகவும், நிர்வாகத்திற்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் ஏதாவது ஒரு பிரதேச செயலகப் பிரிவில் சிங்களம் அல்லது தமிழ் பேசும் கணிசமான ஒரு பிரிவினர் வாழ்ந்தார்கள் என்றால் அப்பிரதேச செயலகப் பிரிவிலும் இரு மொழிகளையும், நிர்வாகத்திற்கும் ஆவணத்திற்குமாக பயன்படுத்தலாம் என்று சட்டம் கூறுகிறது.

இதுவரை பல பிரதேச செயலகப் பிரிவுகள் இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும், இது நடைமுறையில் இல்லை. 12.5 வீதத்திற்கும் அதிகமான மக்கள் பிரதேச செயலகத்தில் வாழ்ந்தால் அந்த பிரதேச செயலகம் இருமொழி பிரதேச செயலகமாக பிரகடனப்படுத்த வேண்டும் என்பதே நியதி. ஆனால், பல பிரதேச செயலக பிரிவுகள் இவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்டிருந்தாலும் இது நடைமுறையில் இல்லை.

மத்திய, ஊவா மாகாணங்களை எடுத்துக்கொண்டால் அநேகமாக எல்லா பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 12.5 வீதத்திற்கும் அதிகமான தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்றார்கள். பெரும்பாலான பிரதேச செயலகப் பிரிவுகளில் இது 30 வீதத்திற்கு அதிகமாகவே உள்ளது. இவ்விரு மாகாணங்களையும் இருமொழி மாகாணங்களாகப் பிரகடனப்படுத்தி மாவட்ட செயலக மட்டத்தில் நிர்வாகத்தை ஏற்படுத்தி தமிழ் மொழியை அமுலாக்குவது அர்த்தமுடையதாக இருக்க முடியும். எனவே இந்த இரண்டு மாகாணங்களையும் இருமொழி (Bilingual) மாகாணங்களாக பிரகடனப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாகும். நுவரெலியா மாவட்டத்தில் இந்திய வம்சாவளித் தமிழர் செறிவாக வாழ்வதால் அம்மாவட்டத்தில் கல்வி கலாசார வளர்ச்சிக்கு நுவரெலியா மாவட்டத்தை ஒரு மையப் பிரதேசமாக பிரகடனப்படுத்த வேண்டும். இப்பிரதேசத்தில் சிறந்த பாடசாலைகள், பல்கலைக்கழகம், கலாசார நிறுவனங்கள், ஆய்வு நிலையங்கள் போன்றவற்றை இந்திய வம்சவளியினர் பயன்படுத்தக்கூடிய வகையில் அமைக்க வேண்டும்.

தாங்கள் கொடுத்திருக்கும் தலைப்புகளில் அரசின் தன்மை என்பது முதல் தலைப்பாக உள்ளது. இது சமஷ்டி அமைப்பாக இருக்க வேண்டுமா அல்லது ஒற்றை ஆட்சியாக இருக்க வேண்டுமா என்ற விவாதத்திற்கு நாங்கள் செல்லவில்லை. ஆனால் சர்வகட்சி மாநாட்டு அறிக்கையில் முக்கியத்துவம் கொடுத்திருப்பது போல் அரசியல் யாப்பிலே இலங்கை மக்கள் சிங்களவர், இலங்கைத் தமிழர், முஸ்லிம்கள், இந்தியத் தமிழர் மற்றும் பிற கூறுகளும் அடங்கியுள்ளன. ஒவ்வொரு பிரிவினருக்கும் தங்கள் மொழியை பேணவும், அவர்களது கலாசாரத்தைப் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்லவும் அரச அதிகாரத்தில் தகுந்த பங்கை பெறவும் சகல அரச நிறுவனங்களிலும் உரிய பிரதிநிதித்துவத்தை பெறவும் உரிமையுடையவர்களாவர். அதேவேளை அவர்கள் இலங்கையர் என்ற அடையாளத்திற்குள் இருப்பார்கள் என்ற வாசகத்தை புதிய அரசியல் யாப்பில் இடம்பெறச் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

05. உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகாரப் பகிர்வு

உள்ளூராட்சி ஜனநாயகத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். சில இடங்களில் செறிவாகவும், பல இடங்களில் செறிவு குறைவாகவும் வாழும் இந்திய வம்சாவளி தமிழர் பிரிவினருக்கு உள்ளூராட்சி மன்றங்கள் மூலம் தாங்களே தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு வசதி உள்ளது. எனவே தற்பொழுது மாகாண சபைகள் அனுபவிக்கும் சில அதிகாரங்களை உள்ளூராட்சி மன்றங்களுக்குப் பரவலாக்கம் (Devolution ) செய்ய வேண்டும் என்பது எங்களுடைய மற்றுமொரு கோரிக்கையாகும்.

06. அரசியலமைப்பு மற்றும் சுதந்திர

ஆணைக்குழுக்கள்

இந்திய வம்சாவளித் தமிழர் நாட்டின் கணிசமான ஒரு பிரிவினராக அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும் இந்த சபைகளிலே உதாசீனப்படுத்தப்பட்டிருப்பது வருந்தத்தக்கதாகும். இதை ஒரு பாரபட்சமாக இந்திய வம்சாவளித் தமிழர்கள் கருதுகின்றார்கள்.

(தொடரும்...)

இதற்கு ஒரு மாற்றம் வேண்டும். இத்தகைய சபைகளிலே இந்திய வம்சாவளித் தமிழர் ஒருவர் கட்டாயமாக நியமிக்கப்பட வேண்டும்.

07. மேல்சபை

மேல்சபை ஒன்று அவசியம் என்று பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். சோல்பரி அரசியல் யாப்பில் இருந்ததைப்போல மேல் சபை அல்லது செனட் சபை இருப்பது சாலச்சிறந்தது. ஒரு மேல் சபை இருந்தால் பல இனங்களுடைய பிரச்சினைகளை அணுகுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அது மட்டுமல்ல வேறு வகைகளிலேயும் மேல் சபையில் சிறந்த அறிஞர்களை பங்குகொள்ளச் செய்து பயன்பெற முடியும். ஒரு மேல் சபை இருப்பதை நாங்கள் ஆதரிக்கின்றோம்.

08. பெண்கள் பிரதிநிதித்துவம்

பாராளுமன்றத்திலும் மாகாண சபை போன்ற இதர பிரதிநிதித்துவ சபைகளிலும் பெண்களின் பிரதிநித்துவம் மிகக்குறைவாக இருக்கிறது. குறைந்த பட்சம் 25 வீதமாவது இந்தச் சபைகளிலே பெண்கள் பிரதிநிதித்துவத்தை ஊர்ஜிதம் செய்யவேண்டும் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்திருப்பதை நாங்கள் முழு மனதுடன் ஆதரிக்கிறோம்.

09. நிறுவன அமைப்புகள் (Institutional mechanisms)

பல்லின தன்மை வாய்ந்த ஒரு நாட்டில் அரசியல் யாப்பு சட்டம் அல்லது பாராளுமன்ற சட்டங்கள் என்பதோடு மட்டும் நின்று விடாமல் நிறுவன அமைப்புகளை (Institutional mechanisms) ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகும். இந்தியாவில் உள்ள நிறுவன அமைப்புகளையும், வேறு நாடுகளில் உள்ள நிறுவன அமைப்புகளையும் முன்னுதாரணமாக கொண்டு செயற்பட முடியும்.

10. தேர்தல் சீர்திருத்தம்

தொகுதி முறையை மாற்றி விகிதாசார முறைத் தேர்தல் அறிமுகம் செய்யப்பட்ட போது சில முன்னேற்றங்கள் நிகழ்ந்தன. அதாவது இந்திய வம்சாவளித் தமிழர் போன்ற பல மாகாணங்களிலுள்ள இனப் பிரிவினருக்கு பிரதிநிதித்துவம் அதிகரித்தது. ஆனால் அது போதுமானவையாக இல்லாத அதேவேளை விகிதாசாரத்திற்கு ஏற்பவும் அமையவில்லை. சில மாகாணங்களில் கணிசமான இந்திய வம்சாவளித் தமிழர் வாழ்ந்தாலும் முறையான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. இப்பொழுது கலப்பு தேர்தல் முறை அறிமுகமாகவுள்ளது. கலப்பு தேர்தல் முறையிலே இந்திய வம்சாவளித் தமிழர் தங்கள் பிரதிநிதித்துவத்தை இப்பொழுது இருப்பதை விட குறைவாகவே பெற முடியும் என்கின்ற அச்சம் அவர்கள் மத்தியில் உள்ளது. இந்த அச்சம் நீக்கப்பட வேண்டும். அதாவது புதிய தேர்தல் முறையில் நாட்டின் விகிதாசாரத்திற்கு ஏற்ப அவர்களுக்கு 14 முதல் 16 பாராளுமன்ற பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படும் வாய்ப்பை அளிக்க வேண்டும். இது மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபை பிரதிநிதித்துவத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.

தேர்தல் சீர்திருத்தம் பற்றி சில ஆலோசனைகளை முன்வைத்துள்ளோம். இதை தங்கள் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்கு விதிக்கப்பட்ட கட்டளைகளில் சிறுபான்மை மக்களுக்கும் நியாயமான பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தை உள்ளடக்கிய போதிலும் அது நிறைவேற்றப்படவில்லை என்பதே உண்மை. ஆகவே இந்த பிரச்சினையை மேலும் ஆழமாக ஆராய்ந்து சரியான விடையை காணவேண்டும்.

1947ஆம் ஆண்டு சோல்பரி அரசியல் யாப்பு அமுலுக்கு வந்த போது தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஒரு கட்டளையை பிறப்பித்திருந்தது. அக்கட்டளையில் சோல்பரி யாப்பு - “தேர்தல் தொகுதிகளை நிர்ணயிக்கும் போது சமமான மக்கள் தொகையுடைய தொகுதிகள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றிருந்தாலும், எங்காவது ஒரு மாகாணத்தில் குறிப்பிட்ட இனத்துவ, சமய மற்றும் வேறு வகைகளில் வேறுபட்ட ஒரு பிரிவினர் இருந்தார்கள் என்றால் அந்த இடங்களில் விகிதாசாரத் தொகையை மாற்றலாம். ஆனால் இது மிகக்குறைந்த அளவிலேயே இருக்க வேண்டும்.” 1972ஆம் ஆண்டு முதல் குடியரசு யாப்பு அறிமுகப்படுத்தப்பட்ட போது இதே விதிதான் உள்ளடக்கப்பட்டது. ஆனால் இந்த விதி வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவே இருந்தது.

1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பில் விதி 99A இவ்வாறு உள்ளது.

98ஆம் விதியின்படி தேர்தல் நடந்த பின்னர் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்ட கட்சி செயலாளருடனோ அல்லது குழுத் தலைவருடனோ தொடர்பு கொண்டு தேசிய இனத்துவ விகிதாசாரப்படி தேர்தலுக்கான வேட்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் செயல்முறைக்குகந்த வகையில் அவர்கள் நியமனம் பெற்றிருந்தார்களா என்பதை கண்காணிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த தேர்தல் முறை சீர்திருத்த அறிக்கையில் கீழ்கண்ட ஆலோசனையை கூறியிருக்கிறார். “தேர்தல் ஆணைக்குழு தவிர்க்க முடியாத கட்டாயமாக (Mandatory) சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை நிர்ணயப்படுத்த வேண்டும் என்கிறார்.”

சோல்பரி அரசியல் யாப்பின் விதியோ அல்லது 99A மற்றும் தினேஷ் குணவர்த்தன கூற்றையோ நடைமுறைக்குகந்ததாக கருதமுடியவில்லை. இது வெறும் ஏட்டளவில் மாத்திரமே இருக்கின்றது. (எனவே இதற்கு யதார்த்த பூர்வமாக விடைகாண வேண்டியுள்ளது.)

ஆரம்ப காலம் தொட்டு, சிங்களவர், இலங்கை தமிழர், இந்திய தமிழர், முஸ்லிம்கள் மட்டும்தான் பிரதிநித்ததுவம் பெற்றிருக்கின்றனர். எனவே, வெகு தெளிவாக இந்த பிரிவினரையும் குறிப்பிட்டு அவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டியதே முறையான வழியாகும்.

மக்கள் தொகையில் ஒரு சதவிகிதத்திற்கு குறைவாக இருக்கும் பல பிரிவினரை வேறு வகைகளில் ஜனநாயக அடிப்படையிலான ஏற்பாடுகளை செய்வதன் மூலம் அரசியலில் பங்குபற்ற வாய்ப்பளிக்க முடியும்.

ஒரு மாவட்டத்தில் வாழுகின்ற பல இன பிரிவினரை பிரதிநிதித்துவப்படுத்த பல்வேறு நடைமுறைகளை கையாள முடியும். மாவட்ட பட்டியல் மூலமோ அல்லது பல அங்கத்தவர் தொகுதி மூலமோ, சிறு தொகுதிகளை ஏற்படுத்தியோ இதை நடைமுறைக்கு கொண்டுவர முடியும். மேலும், மிகக் குறைவாக இந்திய வம்சாவளி மக்களைக் கொண்ட சில மாகாணங்களைக் கவனிப்பதற்காக தேசியப் பட்டியல் மூலம் ஒருவரையோ அல்லது இருவரையோ நியமிக்க முடியும்.

பாராளுமன்றத்திலும் இதர மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபை ஆகிய பிரதிநிதித்துவ சபைகளிலும் இந்த நான்கு இனப் பிரிவினரும் விகிதாசாரத்திற்கு ஏற்ப பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்பதே அடிப்படையாகும். தேர்தல் முறைமைக்கு பங்கம் ஏற்படாத வகையில் இந்திய வம்சாவளி மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய முடியும். இதற்காக தனியாக ஆலோசனை நடத்தும்படி தங்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.