புத். 68 இல. 11

மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜமாதுல் ஆகிர் பிறை 03

SUNDAY MARCH 13, 2016

 

 

இரத்தினபுரி நகரில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்த்தேசிய பாடசாலை உருவாக்கப்பட வேண்டும்

இரத்தினபுரி நகரில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்த்தேசிய பாடசாலை உருவாக்கப்பட வேண்டும்

இரத்தினபுரி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் அண்மையில் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், இரத்தினபுரி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஏ. விஜேதுங்க ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதானவும் கலந்துகொண்டார்.

இரத்தினபுரி நகரில் உள்ள தமிழ் பாடசாலை ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்டது. அதன் பின்பு இரத்தினபுரி மாவட்ட தமிழ் மாணவர்களுக்காக சகல வசதிகளுடன் கூடிய தமிழ் பாடசாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த சப்ரகமுவ மாகாண சபைக்கான தேர்தல் மேடைகளில் தொழிற்சங்கத் தலைவர்கள் வாக்குறுதிகளை வழங்கினர்.

அந்த மாகாண சபை தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி ஆசிய கட்சிகள் மலையக முக்கூட்டணி என்ற பெயரில் ஒரு கூட்டணியை அமைத்து போட்டியிட்டன. இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்கள் மாகாண சபை தேர்தலில் சப்ரகமுவ மாகாண சபையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்களில் கணபதி இராமச்சந்திரன் இரத்தினபுரி மாவட்டத்திற்கும் அண்ணாமலை பாஸ்கரன் கேகாலை மாவட்டத்திற்கும் தெரிவுசெய்யப்பட வழி வகுத்தார்கள். இது வரலாறு காணாத வெற்றியாகும். உண்மை இதுவாக இருந்தும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

2014, 2015ஆம் ஆண்டுகளில் தீபாவளி தினத்திற்கு மறுநாள் தமிழ் மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும் என சப்ரகமுவ மாகாணசபை உறுப்பினர் கணபதி இராமச்சந்திரன் விடுத்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. தமிழ் மாணவர்களின் கல்வியில் அக்கறையில்லாத இவர்கள் எதிர்கால சந்ததியினர் தோட்டத் தொழிலாளர்களாக இருந்தால்தானே மாதாந்த சந்தாவை வருமானமாக பெறமுடியும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஊடகவியலாளர் கருணாரத்ன பரணவிதான தேர்தல் பிரச்சாரத்தின்போது தேர்தலில் தான் வெற்றி பெற்றால் இரத்தினபுரியில் தமிழ் மாணவர்களுக்கென ஒரு தேசிய பாடசாலையை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். அவர் தேர்தலில் வெற்றிபெற்று தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் ஊடகத்துறை பிரதியமைச்சராக பதவி வகிக்கும் நிலையில் அந்த இரத்தினபுரி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இரத்தினபுரி புதிய நகரத்தில் தமிழ் தேசிய பாடசாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறிவித்தார். அவரின் இக்கூற்றை இரத்தினபுரி மாவட்ட பிரதம கல்வி பணிப்பாளர் உறுதிப்படுத்தும் விதத்தில் இரத்தினபுரி புதிய நகரில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் கல்வி கற்கக்கூடிய விதத்தில் தேசிய பாடசாலை அமைக்கப்படும் என கூறினார்.

ஆனால் அந்த பாடசாலை முழுக்க முழுக்க இரத்தினபுரி பகுதியில் கல்வி பயிலும் தமிழ் மாணவர்களுக்கான தேசிய பாடசாலையாக அமைய தேசிய சமத்துவ கலந்துரையாடல் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் அழுத்தம் கொடுக்க வேண்டும். இதன்மூலம் கருணாரத்ன பரணவிதானவின் வாக்குறுதி உரியவிதத்தில் நிறைவேற்றப்பட வழிபிறக்கும்.

சப்ரகமுவ மாகாண சபையின் இரத்தினபுரி மாவட்டத்திற்கான உறுப்பினர் கணபதி இராமச்சந்திரன் இரத்தினபுரி தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று பதவிக்கு வந்தவர். அவருக்கு ஒதுக்கப்படும் நிதியில் சிறு தொகையை எதிர்காலத்தில் தமிழ் பாடசாலைகளுக்காக ஒதுக்க வேண்டும்.

இவதன்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.