புத். 68 இல. 11

மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜமாதுல் ஆகிர் பிறை 03

SUNDAY MARCH 13, 2016

 

 
நாம் எமது கடமையை சரியாகச் செய்வோம் நடைபெறுவதை பொறுத்திருந்து பார்ப்போம்

நாம் எமது கடமையை சரியாகச் செய்வோம் நடைபெறுவதை பொறுத்திருந்து பார்ப்போம்

தமிழ் மக்கள் பேரவையில் நீங்களும் அங்கம் வகித்திருந்தீர்கள். அத்தரப்பினால் வெளிடப்பட்டுள்ள தீர்வுத் திட்டமுன்வரைபு தொடர்பான உங்களின் நிலைப்பாடு என்ன?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளடக்கிய விடயங்களை உள்வாங்கியதாகவே அத்தீர்வுத் திட்டமுன்வரைபு காணப்படுகின்றது. சர்வதேச மத்தியஸ்தத்துடன் அரசாங்கத்தோடு உடன்படிக்கையொன்றை எட்டுதல் என்ற விடயம் மட்டுமே சற்றுவேறுபட்டதாக காணப்படுகின்றது. ஏனைய விடயங்கள் அனைத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது வரையில் கூறும் விடயங்களே உள்வாங்கப்பட்டுள்ளன.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐக்கிய இலங்கைக்குள் இணைந்த வடகிழக்கில் சுயநிர்ணயத்துடனான அதியுச்ச சமஷ்டியே தீர்வாக முடியும் என்பதை ஆழமாக கூறிவருகின்றார். கிளிநொச்சியிலும் சரி, எடின் பிரோவிலும் சரி ஒரே விடயத்தையே கூறியுள்ளார். அந்த நிலைப்பாட்டில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. அவ்வாறிருக்கையில் அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டுமெனக் கோரும் தமிழர்கள் தரப்பில் சரியான தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படவில்லை. மக்கள் கருத்துக்கள் உள்வாங்கப்படவில்லை என்ற குறைபாடுகள் காணப்பட்டிருந்தன. அதன் பிரகாரமே மக்களின் பங்களிப்புடன் அரசியல் தீர்வுத் திட்டமொன்றை இறுதி செய்வதற்காக முன்வரைபொன்றுவெளியிடப்பட்டுள்ளது.

எமது அபிலாஷைகள் என்ன என்பதை நாம்வெளிப்படையாகக் கூற வேண்டும். அத​ைன வெளிப்படுத்தியிருக்கின்றோம். அதில் எந்தவிமான தவறுகளுமில்லை. அரசாங்கத்திடம் நேரடியாகவோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பனூடாகவே இவ்முன்வரைபின் இறுதி வடிவம் சமர்ப்பிக்கப்படும் போது அதனை அரசாங்கம் எவ்வாறுகையாளப் போகின்றது என்பதைபொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

பல தமிழ்த் தரப்புக்கள் காணப்படும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தீர்வுத் திட்டம் தொடர்பில் இறுதிமுடிவுசெய்யுமெனக் கூறப்படுகின்றதே?

தமிழ்மக்களின் அதிகளவு ஆணையைப்பெற்ற முக்கியத்துவமான தரப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காணப்படுகின்றது. அதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. அரசாங்கம், சர்வதேச தரப்புக்கள் ஆகியோர் கூட்டமைப்புடனேயே பேசுவார்கள்.

அவ்வாறிருக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏனைய தரப்புக்களால் கூறப்படுகின்ற விடயங்கள் அனைத்தையும் உள்வாங்க வேண்டும். அவற்றை எடுத்துரைக்க வேண்டிய பொறுப்புள்ளது. கூட்டமைப்பு தமிழ் தரப்பால் முன்வைக்கப்படும் முக்கியமான விடயங்களை நிச்சயமாக உள்வாங்க வேண்டும்.

அரசியலமைப்பு பேரவையில் இந்த விடயங்களை பிரேரணைகளாகவே முன்வைக்க முடியும். அதன் பின்னர் கலந்துரையாடல்கள் நடைபெறும். ஆகவே, எமது பிரேரணைகளை உள்வாங்கும் வரையில் அதற்குரிய அழுத்தங்களை வழங்கியவாறே இருக்க வேண்டும்.

தமிழ் மக்கள் பேரவையின் முன்வரைபானது திம்புக் கோட்பாடுகளை அடியொற்றியதாகவே உள்ளது. ஆகவே, திம்பு பேச்சுவார்த்தையில் பங்கெடுத்தவர் என்ற அடிப்படையில் அத்தகைய தீர்வானது சமகால சூழலில் நடைமுறைச் சாத்தியமாகுமெனக் கருதுகின்றீர்களா?

திம்பு கோட்பாடுகள், சுயநிர்ணயம், தாயகக் கோட்பாடு போன்ற விடயங்களை நேரடியாகவே கூறியிருக்கின்றது. தற்போதும் தாயகக் கோட்பாடு என்பதைக் காட்டிலும் வடகிழக்கு இணைப்பை பற்றி பேசுகின்றோம். இணைந்த வடகிழக்கு ஒரு மாநிலம், அது தமிழர்கள் பெரும்பான்மையாக பூர்வீகமாக வாழும் பிரதேசம் எனக் கூறப்பட்டிருக்கின்றது. இதுவே தாயகக்கோட்பாடு.

நாம் எமது அதியுச்சமான கோரிக்கையை முன்வைக்க வேண்டும். அதனடிப்படையிலேயே பேரவையின் தற்போதைய முன்வரைபு வைக்கப்பட்டிருக்கின்றது. அரசியலமைப்பு பேரவையில் அது தொடர்பிலான கலந்துரையாடல்களின்போது எவ்வாறான முடிவுகள் எட்டப்படுகின்றன. 1972, 1978 ஆம் ஆண்டுகளைப் போன்று தமிழர்களின் பிரதிநிதித்துவமின்றி அரசியலமைப்புச் சபை அமையப் போகின்றதா என்பதையெல்லாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

தென்னிலங்கையைப் பொறுத்த வரையில் ஒற்றையாட்சி என்பதை கைவிடுவதற்கு தயாராகவில்லை என்பதை பகிரங்கமாகவே அறிவித்துள்ளதே?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும். ஆயுதப் போராட்டமற்ற தற்போதைய சூழலில் அதற்கு மேல் எதுவுமே செய்ய முடியாது. அதனை அவர்கள் நிராகரிப்பார்களாயின் சாத்வீக ரீதியான, ஜனநாயக ரீதியான எதிர்ப்புக்களை காட்டுவதற்கு முயல்வோம்.

ஆட்சி மாற்றத்தின் பங்காளிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணப்படுகின்றநிலையில் ஐ.நா. தீர்மானம், வடக்கில் இராணுவ பிரசன்னம், அரசியல் தீர்வு போன்ற விடயங்களில் மாறாத கடுமையான நிலைப்பாடுகளையே புதிய ஆட்சியாளர்களும் கொண்டிருக்கின்றார்களே?

என்னைப் பொறுத்த மட்டில் இத்தகைய விடயங்கள் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டவையே. ஏனென்றால் யுத்தத்தை வெற்றி கொண்டதாக கூறும் முன்னாள் ஜனாதிபதிக்கு பெரும்பான்மையினத்தினுள் காணப்படும் ஆதரவு, தெற்கு நிலைமைகள் ஆகியவற்றை புதிய அரசாங்கமும் கவனத்தில் எடுத்தே தனது செயற்பாடுகளை கருத்துகளை முன்வைக்கும் என்பதை ஆரம்பத்திலிருந்தே சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

எமது அழுத்தங்கள் குறிப்பிட்டதொரு எல்லை வரையே செல்லும். அது கடந்தகால உண்மை. யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறிருக்கையில் எமக்குள்ள வலிமையின் பிரகாரம் பாதிக்கப்பட்ட தரப்புக்களுக்கான நியாயங்கள், சர்வதேச விசாரணை, அரசியல் தீர்வு தொடர்பான கோரிக்கைகள் ஆகியவற்றில் துளியளவேனும் விட்டுக் கொடுப்புக்களை மேற்கொள்ளாது செயற்பட்டு அதிகூடிய அழுத்தங்களை வழங்க வேண்டும்.

புலம்பெயர்ந்தவர்கள் தமது நாடுகள் அரசாங்கங்களுக்கு வழங்கும் அழுத்தங்கள் உட்பட அனைத்தும் ஒன்றிணைந்தே அச்செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நாம் எமது கடமையை சரியாகச் செய்வோம். அடுத்து நடைபெறுவதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவதற்குரிய அழுத்தங்களை இற்றை வரையில் இந்தியாவால் வழங்க முடியாது போயுள்ளதே?

இந்தியா இலங்கையை முழுமையாக பகைக்காமலிருப்பதிலேயே கவனமாக இருக்கும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு வாக்குறுதிகளை வழங்கி அதனை நடைமுறைப்படுத்தியிருந்த போதும் இலங்கையை பகைக்க வேண்டுமெனக் கருதவில்லை. பின்னர் ஆட்சியில் இருந்து அகற்றியது வேறு விடயமாக இருக்கின்றது. இருந்தபோதிலும் நேரடியாக பகைப்பதை விரும்ப மாட்டார்கள்.

80 களில் இந்தியா சில விடயங்களில் நேரடியாக தலையீடு செய்தது. அவ்வாறான நிலைமைகள் தற்போதில்லை. எந்தவொரு நாடும் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை எதிர்ப்பதை இறுதி சந்தர்ப்பமாக வேவைத்திருக்கும். தற்போதைய நிலையில் இந்தியா பொருளதார பலத்தை வலுப்படுத்தி அதனூடாக நாடுகளை கட்டுப்படுத்துவதற்கு முனைகின்றதே தவிர இராணுவ ரீதியாக கட்டுப்படுத்துவதற்கு விரும்பவில்லை.

அரசியலமைப்பில் சமஷ்டி என்ற சொற்பதத்தை நேரடியாக பயன்படுத்துவதா இல்லையா என்றதொரு சர்ச்சை காணப்படுகின்ற நிலையில் உங்களது நிலைப்பாடு என்னவாகவுள்ளது?

ஒற்றையாட்சியின் கீழ் அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கத்தைச் செய்யமுடியாது. அவ்வாறு செய்யப்படுமாக விருந்தால் அந்த அதிகாரங்கள் மீது மத்திய அரசாங்கம் தலையீடு செய்வதற்கான நிலைமைகள் காணப்படும். 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாண சபைச் சட்டங்களில் அந்த நிலைமைகளை உணர்ந்திருக்கின்றோம்.

ஆகவே, சமஷ்டி அமைப்பு எனக் கூறுவதற்கும் சமஷ்டி அமைப்பின் தன்மை இருப்பதெனக் கூறுவதற்கும் பாரிய வேறுபாடு இருக்கின்றது. ஆகவேதான் சொற்பதங்களை நேரடியாக பிரயோகிக்க வேண்டுமென்பதில் தீவிரமாக இருக்கின்றோம். தற்போதைய நிலையில் தமிழ்த் தரப்பின் கோரிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள முடியாதுள்ளது.

கடும்போக்காளர்களின் அல்லது முன்னைய ஆட்சியாளர்களின் ஆதிக்கம் மேலெழுந்துவிடுமென புதிய ஆட்சியாளர்கள் காரணம் கூற ஆரம்பித்துள்ளார்களே?

தற்போதல்ல பண்டா -– செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது முதல் அதற்கடுத்த நடவடிக்கைகளுக்கும் இவ்வாறே காரணம் கூறப்பட்டது. ஆகவே, இவ்வாறு காரணம் கூறிக் கொண்டிருப்பார்களாயின் இந்த நாட்டில் நியாயமான விடயமொன்றை செய்ய முடியாது போய்விடும். தமிழர்களின் விடயத்திலேயே இவ்வாறான காரணத்தை கூறுகின்றார்கள். ஏனைய தமக்கு தேவையான விடயங்களில் அவ்வாறு காரணங்களை ஒரு போதும் அவர்கள் கூறுவது கிடையாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கட்டமைப்பாக இல்லாத நிலைமையே காணப்படுகின்றது.

குறிப்பாக தமிழரசுக் கட்சி ஒரு தரப்பாகவும் இரண்டு பங்காளிக் கட்சிகள் வெவ்வேறு தரப்பாகவும் செயற்படும் நிலைமைகளை அண்மைக் காலங்களில் அவதானிக்க முடிக்கின்றது.

உட்பூசல்கள், மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்ற நிலையில் உங்களது நிலைப்பாடு என்னவாகவுள்ளது?

அடிப்படை அரசியல் கோரிக்கைகளில் அவ்வாறான வேறுபாடுகள் எதுமில்லை.

செயற்பாடுகளில் பிரச்சினைகள் இருப்பதை ஏற்றுக் கொள்கின்றேன். சில பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியினூடாக ஆசனத்தைப் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் ஆரோக்கியமான கூட்டமைப்பிற்கு ஏற்ற விடயமல்ல. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே பரஸ்பர அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது. அவ்வாறான நம்பிக்கைக்கு இடமளிக்ககூடாது. கருத்து வேறுபாடுகள் காணப்படுவது வேறு. ஆனால் தீர்வு என்ற விடயத்திற்குச் செல்லும் போது அடிப்படையில் ஒன்றுபட்ட பூரணமாக நிலைப்பாட்டுடன் செயற்பட வேண்டும்.

தமிழ் மக்களின் நீண்ட உரிமைப் போராட்ட வரலாற்றுடன் தொடர்பினைக் கொண்டிருக்காதவர்கள் அமைதியான சூழலில் அரசியலுக்கு வந்துள்ளார்கள். புதியவர்கள் அரசியலுக்கு பிரவேசிப்பதை நாம் வரவேற்கின்றோம். அவ்வாறானவர்கள் தனி நலன் சார்ந்த தீர்மானங்களை எடுக்கும் நிலைமைகள் காணப்படுகின்றது. அவ்வாறான தீர்மானங்கள் கட்சி விட்டுக் கட்சிமாறும் நிலைக்கும் வித்திடுகின்றன. கட்சி விட்டுக் கட்சி மாறுவதைத் தடுக்கும் பொறுப்பு அந்ததந்த கட்சிகளும் தலைமைகளுக்கும் உள்ளது. அதேநேரம் கூட்டமைப்பாக இருக்கும் போது பங்காளிக்கட்சிகளிடையே இவ்வாறான நிலைமைஃகள் ஏற்படுவதானது கூட்டமைப்பின் ஒற்றுமையை கேள்விக்குள்ளாக்கிவிடும் ஆபத்துமுள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.