புத். 68 இல. 11

மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜமாதுல் ஆகிர் பிறை 03

SUNDAY MARCH 13, 2016

 

 
தமிழக தேர்தல் நாடக அரங்கேற்றம் ஆரம்பம்

தமிழக தேர்தல் நாடக அரங்கேற்றம் ஆரம்பம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு தேர்தல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கூட்டணி அமைப்பது தொடர்பில் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த முறை எப்படியாவது அதிமுகவை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றி விடவேண்டும் என்ற முனைப்பில் திமுக தேசிய காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துள்ளது. மறுபுறம்,நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவை வளைத்துப் போடும் நோக்கில் ஆளுங்கட்சியான பாஜக அக்கட்சியுடன் பேச்சுக்களை நடத்தி வருகின்றது.

இந்த நிலையில், இந்த முறையும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அதிமுக பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதற்கான துருப்புச் சீட்டுக்களைத் தயார்படுத்தி வருகின்றது.

அவ்வாறன துருப்புச் சீட்டுக்களுள் முதலிடத்தில் இருப்பது இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலைக் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினி, முருகன், சாந்தன்,பேரறிவாளன், ​ெராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரின் விடுதலை தொடர்பானதுதான்.

இவர்களின் விவகாரத்தைத் துருப்புச் சீட்டாகக் கொண்டு அதிமுக இன்று தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது. இவர்களை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு தீர்மானித்து அதற்கான அனுமதியைக் கோரி இந்திய மத்திய அரசுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

இது மிகவும் பலமான துருப்புச் சீட்டாக பார்க்கப்படுகின்றது. தமிழக அரசின் திட்டப்படி இவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் அது அதிமுகவுக்கு வெற்றிதான். அவ்வாறு விடுதலை செய்ய விடாமல் மத்திய அரசு தடுத்தாலும் அதிமுகவுக்கு வெற்றிதான். விடுதலை செய்யப்பட்டால் அதை வைத்து அதிமுக வாக்குக் கேட்கும்.விடுதலை செய்யப்படாவிட்டால் மத்திய அரசின் மீது பழியைப் போட்டு வாக்குக் கேட்கும்.

எது எப்படியோ, இந்த விவகாரம் ஏனைய கட்சிகளுக்குப் பெரும் தலையிடியாகவே உள்ளது. இதை ஆதரிக்கவும் முடியாது எதிர்க்கவும் முடியாது. ஆதரித்தால் அதிமுகவுக்கு அது சாதகமாகப் போகும். எதிர்த்தால் மக்கள் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டி வரும்.

ஆனால், உண்மையில், இந்தக் கைதிகள் மீது அக்கறை கொண்டுதான் மாநில அரசு இந்த முடிவை எடுத்ததா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது. இலங்கைத் தமிழர்கள் - புலிகள் தொடர்பில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஆரம்பத்தில் கொண்டிருந்த நிலைப்பாட்டையும் இப்போது கொண்டிருக்கும் நிலைப்பாட்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தக் கைதிகள் விடுதலை என்பது ஒரு நாடகம் என்பதை- தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஒரு துருப்புச் சீட்டு என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

ஜெயலலிதா 1991 முதல் 1996 ஆண்டு வரையான அவரது முதல் ஆட்சிக் காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். 1993 இல் சென்னையை அடுத்த மாமண்டூரில் விடுதலை புலிகள் இருவர் காவலில் இருந்து தப்பியபோது, இது தனது உயிருக்கு உலை வைக்கும் மத்திய அரசின் சதி என்று ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

இலங்கையின் யுத்தநிறுத்த காலத்தில், 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் திகதி புலிகளின் தலைவர் பிரபாகரன் செய்தியாளர் சந்திப்பை நடத்தியபோது அதில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்தும் சில ஊடகவியலாளர்கள் கிளிநொச்சிக்குச் சென்றனர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமரைக் கொலை செய்த ஒரு குற்றவாளி ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ளச் சென்ற இந்திய ஊடகவியலாளர்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன் என ஜெயலலிதா கூறினார்.

பிரபாகரனை பிடிப்பதற்கு இந்திய அரசு முயற்சி செய்ய வேண்டும். ஆயிரக்கணக்கானோரைக் கொலை செய்த ஒருவரை பெரிய ஹீரோவாக ஊடகங்கள் காட்டுவது முழு இந்தியாவுக்குமே அவமானமாகும். பிரபாகரன் செய்த குற்றங்களுக்கு அவர் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் என்றெல்லாம் அப்போது ஜெயலலிதா கூறி இருந்தார்.

அது மாத்திரமன்றி, புலிகளின் மதியுரைஞர் அன்டன் பாலசிங்கம் சிகிச்சை ஒன்றுக்காக தமிழ் நாட்டுச் செல்வதற்கு விரும்பியபோது ஜெயலலிதா அதை எதிர்த்தார். இவ்வாறு ஜெயலலிதா ஆரம்ப காலத்தில் இருந்து புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தார். அது மாத்திரமன்றி, அப்போது இலங்கை தமிழர் விவகாரத்திலும் அவர் அக்கறை எடுத்திருக்கவில்லை.

இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம் தமிழகத்தில் எதிரொலித்த போது, 'போர் என்றால் எல்லோரும் சாகத்தானே செய்வார்கள்' என மிகவும் அலட்சியமாக ஜெயலலிதா கூறினார். ஆனால், சில மாதங்களில் அந்தக் கூற்றில் இருந்து பல்டி அடித்துவிட்டார்.

இவ்வாறு புலிகள் தொடர்பிலும் ஈழத் தமிழர்கள் தொடர்பிலும் எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த ஜெயலலிதா பின்பு அரசியல் இலாபம் கருதி அந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். இலங்கை அரசுக்கு எதிராக - தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்படத் தொடங்கினார்.

தமிழகத்தில் இருக்கின்ற சிறிய கட்சிகள் முதல் பெரிய கட்சிகள் வரை இலங்கை தமிழரின் விவாரத்தை அரசியல் துருப்புச்சீட்டாகக் கையில் எடுக்கத் தொடங்கியமைதான் ஜெயலலிதா தனது நிலைப்பாட்டை இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக மாற்றிக் கொண்டமைக்குக் காரணம் என்று சொல்லலாம்.

அஇஅதிமுக ஆதரவு பெற்ற அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்தால் இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி தனி ஈழத்தை அமைத்து தருவேன் என்று 2009 இல் இடம்பெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்களின்போது ஜெயலலிதா கூறி இருந்தார்.

2011 இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இலங்கை தமிழர் விவகாரத்தில் அவர் கடும் அக்கறை காட்டத் தொடங்கினார். இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையைக் கோரி இரண்டு தடவைகள் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.

இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவில் எந்த மூலையில் பயிற்சி கொடுத்தாலும் அதனை கடுமையாக எதிர்த்தார். சென்னையிலும், ஊட்டியிலும் பயிற்சிக்குச் சென்ற இலங்கை இராணுவத்தினர் பாதியிலேயே திரும்பி வருவதற்கு ஜெயலலிதா காரணமாக இருந்தார்.

கிரிக்கெட் போட்டியில் கலந்து கொல்வதற்காக தமிழகத்துக்குச் சென்ற 14 வயதுக்குட்பட்ட இலங்கை சிறுவர் அணி அவரது எதிர்ப்பால் திருப்பி அனுப்பபட்டது. இவ்வாறு இலங்கை தமிழருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கத் தொடங்கிய ஜெயலலிதா, ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகளின் விவகாரத்தையும் அவருக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கினார்.

2011 இல் அந்தக் குற்றவாளிகளான பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரைத் தூக்கில் போட அப்போதைய மத்திய அரசு முயற்சித்தபோது அதற்கு எதிராக- அவர்களது விடுதலையைக் கோரி ஜெயலலிதா சட்டமன்றத்தில் ஒரு மனதாக ஒரு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார்.

1999 ஆம் ஆண்டு நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனையும் ஏனைய மூவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்ட பின், 2014 ஆம் ஆண்டு நால்வருக்குமான மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. தமிழக அரசு விரும்பினால் அவர்களை விடுதலை செய்ய முடியும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதற்கு ஏற்ப இவர்களை விடுதலை செய்யப் போவதாக ஜெயலலிதா அரசு மத்திய அரசுக்கு அறிவித்தது. ஆனால், மத்திய அரசு உயர்நீதிமன்றத்தை நாடி தமிழக அரசின் தீர்மானத்துக்கு முட்டுக் கட்டை போட்டது.இப்போது இந்த விவகாரத்தை தமிழக அரசு மீண்டும் கையில் எடுத்துள்ளது. அவர்களை விடுதலை செய்யப் போவதாக மத்திய அரசுக்கு எழுத்து மூலம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஜெயலிதாவின் கடந்த கால செயற்பாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது தெளிவான அரசியல் நோக்கம் கொண்டது என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

2014 ஆம் ஆண்டு அவர்களை விடுதலை செய்வதற்கு ஜெயலலிதா முற்பட்டது கூட நாடாளுமன்றத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டுதான். அப்போது அவர் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே அந்த ஏழுபேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தமை கவனிக்கத்தக்கது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.