புத் 67 இல. 38

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06

SUNDAY SEPTEMBER 20 2015

 

ஆரம்பமானது 8வது உலகக் கிண்ண ரக்பி தொடர்

ஆரம்பமானது 8வது உலகக் கிண்ண ரக்பி தொடர்

லகம் பூராவும் பரந்துபட்ட ரசிகர்களின் அபிமானத்துக்குரிய விளையாட்டாக ரக்பி விளையாட்டு பிரபல்யம் பெற்றுள்ளது. கால்பந்துக்கு அடுத் தபடியாக இளைஞர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்று விளங்குவது ரக்பியாகும். அண்மைக்காலமாக இலங்கையிலும் ரக்பி விளையாட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபல்ய மடைந்து வருகின்றது.

செப்டெம்பர் மாதம் ரக்பி விளையாட்டுக்கு முக்கியமான மாதமாகும். அதற்குக் காரணம் ரக்பி உலகக் கிண்ணத் தொடர்கள் அநேகமாக செப்டெம்பர் மாதமே நடைபெறுகின்றது.

ஆரம்பத்தில் ரக்பி கால்பந்து என்றே அழைக்கப்பட்டது. காரணம் அவ்விளையாட்டு கால்பந்துடன் கூடிய தொடர்புடையதேயாகும். 19ஆம் நூற்றாண்டு ஆரம்பம் வரை இவ்விளையாட்டுக்காக தனியான கட்டுப்பாடுகள், வரைமுறைகள் இருக்கவில்லை. ரக்பி வரலாற்றைப் பார்க்கும் போது 1871ஆம் ஆண்டே முதல் ரக்பி போட்டி நடைபெற்றுள்ளது. அது ஸ்கொட்லாந்தில் எடின்பர்க் நகரில் இங்கிலாந்து- ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையேயாகும். இம்முதல் போட்டியில் ஸ்கொட்லாந்து வெற்றி பெற்றது. ஆரம்பத்தில் ரக்பி கால்பந்து என்று அழைக்கப்பட்டு வந்தது. காலப்போக்கில் இவ்விளையாட்டு ரக்பி லீக், ரக்பி யூனியன் என அறிமுகப்படுத்தப்பட்டு, வீரர்கள் விளையாட வேண்டிய இடம், நேரம், மைதானத்தின் அளவு நடுவர்கள் என இவ்விளையாட்டுக்கும் கட்டுப்பாடுகள். நடைமுறைகள் வந்த பிறகு ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒருமுறையும் நடைபெறும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடர், கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர், ஓலிம்பிக் விளையாட்டுப் போட்டி போன்ற ஜனரஞ்சகமான தொடர்களைப் போன்று ரக்பி தொடரும் நான்கு வருடங்களுக்கொரு முறை நடைபெற்று வருகின்றது.

இவ்வாண்டும் கடந்த வெள்ளிக்கிழமை இங்கிலாந்தில் 8வது ரக்பி உலகக் கிண்ணத்துக்கான தொடர் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை 18ஆம் திகதி இங்கிலாந்து - பீஜி தீவுகளுக் கிடையில் லண்டன் ட்விகென்ஹாம் மைதானத்தில் நடைபெறும் போட்டியுடன் ஆரம்பமாகும் இத் தொடர் அக்டோபர் மாதம் 31ம் திகதி இதே மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியுடன் முடிவடைகின்றது. முதல் சுற்றில் 40 போட்டிகளும், கால் இறுதி, அரை இறுதி, இறுதி என மொத்தம் 47 போட்டிகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளன.

இப்போட்டித் தொடரானது கடந்த காலங்களில் ஒவ்வொரு பிராந்தியத்திலும் நடைபெற்ற தெரிவுப் போட்டிகளின் அடிப்படையில் கடைசிச் சுற்றுக்கு 20 அணிகள் தெரிவாகியுள்ளன. இந்த 20 அணிகளையும் ஏ. பி. சி. டி. என நான்கு குழுக்களாக பிரிக்கப்படுகின்றது. ஒவ்வொரு பிரிவிலும் 5 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஒவ்வொரு பிரிவிலுமுள்ள அணிகள் தன் பிரிவிலுள்ள மற்றைய அணிகளுடன் ஒவ்வொரு முறை மோத வேண்டும். அந்த அடிப்படையில் ஒவ்வொரு அணியும் முதல் சுற்றில் நான்கு போட்டிகளில் மோதுகின்றன.

ஒவ்வொரு குழுவிலும் புள்ளிகள் அடிப்ப டையில் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் காலிறுதிக்குத் தெரிவாகின்றன. காலிறுதியில் பி-1 ஏ-2 முதல் காலிறுதியிலும், சி-1 டி-2 இரண்டவது காலிறுதியிலும், டி-1 சி-2 மூன்றாவது காலிறுதியிலும், ஏ-1 பி-2 நான்காவது காலிறுதியிலும் மோதுகின்றன. 1வது காலிறுதிப் போட்டியிலும் 2வது காலிறுதிப் போட்டியிலும் வெற்றிபெறும் அணிகள் அக்டோபர் 24ம் திகதி நடைபெறும் முதல் அரை இறுதியிலும், 3வது காலிறுதியிலும் 4வது காலிறுதியிலும் வெற்றி பெறும் அணிகள் அக்டோபர் 25ம் திகதி இரண்டாவது அரையிறுதியிலும் மோதுகின்றன. இறுதிப் போட்டி அக்டோபர் 31ம் திகதி சனிக்கிழமை லண்டன் நகரில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதலாவதாக ரக்பி உலகக் கிண்ணப் தொடர் 1987 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இதுவரை 7 தொடர்கள் நடைபெற்றுள்ளது. இதில் நியூசிலாந்து அணி இரு முறையும் (1987, 2011), அவுஸ்திரேலிய அணி இரு முறையும் (1991, 1999), தென்னாபிரிக்கா இரு முறையும் (1995, 2007) இங்கிலாந்து அணி ஒருமுறையும் (2003) கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளன.

ஒரு தொடரில் கூடிய ட்றை பெற்றவர்கள் வரிசையில் நியுசிலாந்தின் ஜே. லொமோ (1999), தென்னாபிரிக்காவின் பி. ஹப்பானா (2007) இருவரும் பெற்ற தலா 8 ட்றைகளே ஒரு தொடரின் சாதனையாக உள்ளது.

புள்ளிகள் வழங்கும் முறை:- ட்றை:- 5 புள்ளிகள். பெனால்டி ட்றை :- 5 புள்ளிகள், கொன்வர்சன் கோல்:- 2 புள்ளிகள், பெனால்டி கோல்:- 3 புள்ளிகள், தவறிய கோல்:- 3 புள்ளிகள்.

பங்குபற்றும் அணிகள்

நியூசிலாந்து :- உலகின் சிறந்த ரக்பி அணி யாக நியூசிலாந்து அணி கணிக்கப்பட்டுள்ளது. அவ்வணி வீரர்கள் ஒவ்வொருவரும் திறமை யான வீரர்களாவர். அவ்வணியினர் இப்பருவ காலத்தில் விளையாடிய 42 போட்டிகளில் 2 இல் மாத்திரமே தோல்வியுற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு வருட சம்பியனான அவர்கள் சர்வதேச தரவரிசையில் முதலாமிடத் திலுள்ளனர். ஏற்கனவே இருமுறை (1979, 2011) கிண்ணகத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

தென்னாபிரிக்கா:- திறமையான முன்வரிசை வீரர்களைக் கொண்ட தென்னாபிரிக்க அணி தமது உடல சக்தியை முழுமையாகப் பயன் படுத்தி விளையாடும் அணியாகும். இரு முறை உலகக் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது. தர வரிசையில் மூன்றாமிடத்திலுள்ள அவ்வணி கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் காலிறுதியுடன் வெளியேறியது.

அவுஸ்திரேலியா :- நியூசிலாந்து அணியைத் தவிர வேகமாக விளையாடும் வீரர்களைக் கொண்ட அணி அவுஸ்திரேலியாவாகும். இவ்வணியினரும் இரு முறை கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளனர். ரக்பி சர்வதேச தரவரிசையில் இரண்டாமிடத் திலுள்ள அவ்வணி கடைசியாக நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் மூன்றாமிடத்தைப் பெற்றிருந்தது.

இங்கிலாந்து :- போட்டித் தொடரை நடத்தும் நாடு என்ற வகையில் அவ்வணியினர் நியுசிலாந்து, தென்னாபிரிக்க அணிகளுக்கு அடுத்தபடியாக திறமைகாட்டி வரும் நாடாகும். 2003ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய அவ்வணியினர் தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது. கடந்த உலகக் கிண்ணத் தொடரில் காலிறுதிவரை முன் னேறியது.

அயர்லாந்து:- ரக்பி உலகின் சிறந்த அணி களாக விளங்கும் நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு அண்மைக்காலமாக சவால் விடுக்கும் அணியாக அயர்லாந்து அணி விளங்குகின்றது. இவ்வருடம் அவ்வணி “யுரோப் சிக்ஸ் நேஷன்” ரக்பி கிண்ணத்தை சுவீகரித்துள்ளது. அவ்வணி கடந்த ஐந்து உலகக் கிண்ணத் தொடர்களிலும் காலிறுதி வரை முன்னேறியது இது அயர்லாந்து அணியின் அதிகபட்ச ரக்பி உலகக் கிண்ண திறமையாகும்.

வேல்ஸ் :- இம்முறை வேல்ஸ் அணியும் திறமையாக விளையாடும் என எதிர்பார்க் கப்படும் ஒரு அணியாகும். அவ்வணி உலக தர வரிசையில் 5வது இடத்தில் உள்ளது. வேல்ஸ் அணி கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் அரையிறுதிக்குத் தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது. 1987ஆம் ஆண்டு நடைபெற்ற ரக்பி உலகக் கிண்ணத் தொடரில் மூன்றாமிடம் பெற்றதே அவ்வணியின் உலகக் கிண்ண சிறந்த பெறுபேறாகும்.

பிரான்ஸ் :- எவ்வேளையிலும் எவ்வணிக் கெதிராகவும் கடுமையான போட்டி மனப்பான் மையுடன் விளையாடும் அணியாக பிரான்ஸ் அணி விளங்குகின்றது. கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் இறுதிப் போட்டி வரை முன் னேறிய பிரான்ஸ் அணி அன்றைய இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு கடும் சவாலாக விளங்கியது. ரக்பி சர்வதேச தரவரிசையில் 8 இடத்தில் இருக்கும் பிரான்ஸ் அணி இதுவரை நடைபெற்ற பயிற்சிப் போட்டிகளிலும் திறமையாக விளையாடி வருகின்றது. அண்மையில் இங்கிலாந்து அணியை பயிற்சிப் போட்டியின் போது இலகுவாக வென்றுள்ளது. பிரான்ஸ் அணி இருமுறை (1987, 2011) இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளதே உலகக் கிண்ணத் தொடர்களின் சிறந்த பெறுபேறாகும்.

செமோவா :- அவுஸ்திரேலியக் கண்டத்தில் உள்ள சிறிய நாடான செமோவா ரக்பி விளையாட்டில் உச்சத்தில் உள்ள ஒரு நாடாகும். சர்வதேச தரவரிசையில் 12வது இடத்திலுள்ள சாமோவா இதுவரை இரு முறை (1991, 1995) காலிறுதிக்குத் தெரிவானதே உலகக் கிண்ணத் தொடரின் சிறந்த பெறுபேறாகும்.

பிஜீ :- ஏழு பேர் கொண்ட ரக்பி விளை யாட்டில் உச்சத்தில் இருக்கும் அணி பிஜீ அணியாகும். முழுமையான அணி என்று வரும் போது அவ்வளவாக திறமைகாட்டாவிட்டாலும் தற்போதைய தரவரிசையில் 9வது இடத்தில் இருக்கும் அவ்வணியினர் உலகக் கிண்ணத் தொடர்களின் போது இரு முறை காலிறுதி வரை முன்னேறியதே உச்ச திறமையாகும்.

ஜப்பான் :- ரக்பி உலகக் கிண்ணத் தொடரில் ஆசிய வலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே நாடு ஜப்பானாகும். இவ்வலயத்தில் பிரபலமான ரக்பி அணியாக விளங்கும் அவ்வணி 2008 ஆரம்பமான ஆசிய ரக்பித் தொடரில் 2015ம் ஆண்டு வரை தொடர்ந்து சம்பியனாகத் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத் தக்கது. என்றாலும் இதுவரை உலகக் கிண்ணப் போட்டிகளில் சொல்லும்படியான திறமைகாட்டாத அணியாகும். சர்வதேச ரக்பி தரவரிசையில் 13வது இடத்திலுள்ளது ஜப்பான் அணி.

டொன்கா :- உலக சர்வதேச தரவரிசையில் 11வது இடத்தில் இருக்கும் டொன்கா உலகக் கிண்ணப் போட்டியில் சிறந்த பெறுபேறுகளைப் பெறாத அணியாகும். என்றாலும் 2011ம் ஆண்டு இரண்டாமிடத்தைப் பெற்ற பிரான்ஸ் அணியை ஆரம்பச் சுற்றில் தோற்கடித்ததே அவ்வணியினரின் உலகக் கிண்ணப் போட்டிகளில் உச்ச திறமையாகும்.

ஸ்கொட்லாந்து :- ரக்பி விளையாடும் ஐரோப்பிய நாடுகளில் உச்சத்தில் இருக்கும் ஒரு நாடாக ஸ்கொட்லாந்து விளங்குகிறது. ரக்பி ஆரம்ப காலத்தில் திறமையின் உச்சத்தில் இருந்த அவ்வணியினர் கடந்த சில வருடங்களாக வீரர்களின் அசமந்தப் போக்குக் காரணமாக பின்னடைவைச் சந்தித்துள்ளது. என்றாலும் இம்முறை நடைபெற்று வரும் பயிற்சி ஆட்டங்களில் மற்றைய அணிகளை விட திறமைகாட்டிவருகின்றது. சர்வதேச தரவரிசையில் 10வது இடத்தில் இருக்கும் அவ்வணி 1991ஆம் ஆண்டு அரையிறுதிவரை முன்னேறியதே உலகக் கிண்ணத் தொடரில் உச்ச திறமையாகும்.

இத்தாலி :- சர்வதேச ரக்பி தர வரிசையில் 15வது இடத்தில் உள்ள இத்தாலி ஐரோப்பிய பிராந்தியத்தில் சிறந்த அணியாகும். ஆனால் கடந்த எல்லா உலகக் கிண்ணத் தொடர்களிலும் பங்குபற்றியுள்ள இவ்வணி முதல் சுற்றுடனே வெளியேறியுள்ளது. என்றாலும் இவ்வருடம் நடைபெற்ற “சிக்ஸ் நேஷன் ரக்பி” தொடரில் திறமை காட்டிய அணியாகும்.

அமெரிக்கா:- தரவரிசையில் 16வது இடத்தில் இருக்கும் அமெரிக்கா அணி இவ்வணியும் இதுவரை நடைபெற்ற எல்லா உலகக் கிண்ணத் தொடர்களிலும் பங்குபற் றினாலும் காலிதிறுயுடன் நாடு திரும்பியுள்ளது. வட அமெரிக்க பிராந்தியத்தில் தரவரிசையில் இரண்டாவது இடத்திலுள்ளது.

ஜோர்ஜியா :- இம்முறை ஐரோப்பிய பிராந்தியத்தில் அதிகமான நாடுகள் இத்தொடரில் பங்குபற்றுகின்றது. அந்தவகையில் ஜோர்ஜ் ஜியாவும் 4வது முறையாக உலகக் கிண்ணத் தொடரில் பற்குபற்றுகின்றது. தர வரிசையில் 13வது இடத்திலுள்ளது.

ரூமேனியா :- தரவரிசையில் 19வது இடத் திலுள்ள ரூமேனிய அணி இதுவரை நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடர்களிலும் பங்குபற் றியுள்ள இவ்வணி முதல் சுற்றுடன் வெளி யேறியுள்ளது.

ஆர்ஜென்டீனா :- லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கிடையில் மிகவும் பிரபல்யமான அணி ஆஜென்டினா ஆணியாகும். சர்வதேச தரவரிசையில் 8வது இடத்திலுள்ள அவ்வணி இதுவரை நடைபெற்ற எல்லா உலகக் கிண்ணத் தொடர்களிலும் பங்குபற்றியுள்ளது. 2007ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் 3ம் இடம் பெற்றதே ஆஜென்டீனா அணியின் உலகக் கிண்ணத் தொடரின் உச்ச திறமையாகும்.

உருகுவே :- இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் பங்குபற்றும் உருகுவே சர்வதேச தரவரிசையில் 10வது இடத்திலுள்ள அணி யாகும். 4வது முறையாக உலகக் கிண்ணத் தொடரில் பங்குபற்றும் அவ்வணி உலகக் கிண்ணப் போட்டிகளில் முதல் சுற்றுடன் வெளியேறிய அணியாகும்.

நமீபியா :- இம்முறை உலகக் கிண்ண ரக்பித் தொடருக்கு தெரிவாகும் கத்துக்குட்டி நாடான நமீபியா உலக தரவரிசையில் 20வது இடத்திலுள்ளது. ஆபிரிக்கக் கண்ட ரக்பி தர வரிசையில் தென்னாபிரிக்காவுக்கு அடுத்த சிறந்த அணியாகக் கருதப்படும் நமீபியா இம் முறை 4வது தடவையாகவும் உலகக்கிண்ணத் தொடருக்கு தெரிவாகியுள்ள அணியாகும்.

கனடா :- வட அமெரிக்கா நாடான கடனா அப்பிராந்தியத்தில் சிறந்த ரக்பி விளையாடும் நாடாகக் கருதப்பட்டாலும் உலகத் தரவரி சையில் அவ்வணிக்கு 18 இடமே கிடைத் துள்ளது. இதுவரை நடைபெற்ற எல்லா உலகக் கிண்ணத் தொடருக்கும் தெரிவாகியுள்ள கடனா அணி 1991ம் ஆண்டு காலிறுதிக்கு முன்னேறியதே உலகக் கிண்ணத் தொடர் போட்டிகளின் சிறந்த பெறுபேறாகும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.