புத் 67 இல. 38

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06

SUNDAY SEPTEMBER 20 2015

 

 
ஐ.நா.அறிக்கைக்கு வரவேற்பு

புத்திஜீவிகள், இராஜதந்திரிகள், அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள்

ஐ.நா.அறிக்கைக்கு வரவேற்பு

கடும்போக்காளர்கள் கலப்பு நீதிமன்றத்திற்கு எதிர்ப்பு; நிராகரிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கைக்குச் சார்பாகவும் ஆதரவாகவும் பல்வேறு தரப்பினரும் கருத்துக்களைத் தெரி வித்துள்ளனர்.

குறித்த அறிக்கையை நிராகரிக்க வேண்டும் எனச் சிலரும், இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவாறு விடயங்களை நடைமுறைப்படுத்துவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்று ஒரு சாராரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுவதால் இலங்கையின் நீதிக்கட்டமைப்பில் தாக் கம் ஏற்படும் எனச்சிலரும் இந்த நீதிமன்றத்தின் விசாரணையால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்த உண் மைகள் வெளிவரச் சாத்தியமில்லை எனச் சிலரும் தங்கள் கருத்துக்களை ஏட்டிக்குப் போட்டியாகத் தெரிவித்துள்ளனர். அதேநேரம் சில கடும் போக்காளர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்து அறிக்கையை நிராகரிப்பதாகவும் கோரியுள்ளனர்.

ஐ. நா. போர்க்குற்ற அறிக்கையை இலங்கை அரசாங்கமும் மக்களும் ஆராயும் நேரம் என்று ஐ. நா. மனித உரிமைகள் ஆணையகப் பேச்சாளர் ரவீனா சம்டாசனி தெரிவித்துள்ளார். இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் நேற்று வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் எவர் மீதும் தனிப்பட்ட ரீதியில் குற்றச் சாட்டுகள் முன் வைக்கப்பட வில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனினும் இதுவொரு குற்றவிசாரணை அறிக்கையல்ல என்ற அடிப்படையிலேயே குற்றம் செய்ததாகக் கருதப்படும் எவரின் பெயர்களும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் அடுத்த கட்ட நகர்வு தற்போது இலங்கை யின் கைகளிலேயே உள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் பேச்சாளர் ரவீனா சம்டாசனி தெரிவித்துள்ளார். தற்போது இலங்கையில் தங்கியுள்ள அவர் இது இலங் கைக்கான நேரம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐ. நா. அறிக்கை குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம்

வெளிவிவகார அமைச்சர் அறிக்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துவதாக இலங்கை அரசாங்கம் உத்தரவாதமளித்துள்ளது. இலங்கை தொடர்பான ஐ. நா. விசாரணை அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக அறிக்கையில் வெளிவிவகார அமைச்சு இந்த உத்தர வாதத்தை வழங்கியுள்ளது.

ஐ. நா. மனித உரிமைகள் ஆணை யாளரின் பரிந்துரைகளைக் குறித்துக் கொண்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் வெளிவிவகார அமைச்சு, கடந்த ஜனவரி மாதம் 8ஆம்திகதி ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்னர் பதவியேற்ற புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறிப்பாக, மனித உரிமை, சட்டத்தின் ஆட்சி, நீதித்துறை, நல்லிணக்கம், நிறுவன மற்றும் சட்டமறுசீரமைப்பு உள்ளிட்ட விடயங்களில் புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆணையாளர் வழங்கியிருக்கும் அங்கீகாரம் மகிழ்ச்சியளிப்பதுடன் ஊக்குவிப்பாக அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.

இறுதி அறிக்கை வெளியிடப்படும் வரை எதனையும் உறுதியாகக் கூறமுடியாது

அமைச்சர் ராஜித சேனாரட்ன

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் இறுதி அறிக்கை வெளியிடப்படும் வரை அது குறித்து எதுவும் கூற முடியாது என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பின் அறிக்கையில் யார் மீதும் குறிப்பாக குற்றம் சாட்டப்படவில்லை. அத்துடன் யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பும் போர்க்குற்ற விதிகளை மீறியதாகக் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஜெனீவா பரிந்துரைகளை அரசு நிராகரிக்க வேண்டும்:

தயான் ஜயதிலக்க

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணை அறிக்கை பரிந்து ரைகளை இலங்கை அரசாங்கம் நிராக ரிக்க வேண்டுமென முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரி கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நீதவான்களைக் கொண்ட நீதிமன்றம் ஒன்றின் ஊடாக விசாரணை நடத்துவது நாட்டின் ஜனநாயகத்தை பாரியளவில் மீறும் செயலாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கை வித்தியாசமானது எனவும், உலகில் வேறு எந்த நாட்டுக்கும் செய்யப்படாத பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கு அடிபணிய வேண்டியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கலப்பு நீதிமன்றத்திற்கு எதிராக ஜே. வி. பி. போர்க்கொடி

நாட்டில் கலப்பு நீதிமன்றம் அமைக்க எந்தச் சந்தர்ப்பத்திலும் இடமளிக்கக் கூடாது என ஜே. வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் இலங்கை குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கலப்பு நீதிமன்றத்தை அமைப்பது குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான நீதிமன்றம் அமைப்பது நாட்டின் அரசியல் அமைப்பிற்கு புறம் பானது. ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கும் இலங்கைக்கும் இடையிலான பிரகட னங்களின் அடிப்படையிலும் இவ்வாறு கலப்பு நீதிமன்றம் அமைக்க முடியாது.

ஜனாதிபதியும், பிரதமரும் முழு நாடாளுமன்றமும் நாட்டின் அரசியல் அமைப்பை பாதுகாப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர். எனவே எவராலும் அரசியல் அமைப்பினை மீறிச் செயற்பட அனுமதிக்கப்படமாட்டாது.

ஐ. நா. வின் அறிக்கை ஒரு பக்கச்சார்பானது

விமல் வீரவன்ச

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினால் வெளியிடப் பட்டுள்ள அறிக்கையானது ஒரு பக்கம் சார்பானதாக இருக்கின்றது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார்.

இவ்வறிக்கையானது இலங்கை அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சார்பானது. ஆனால் விடுத லைப் புலிகள் பலர் இன்று உயிருடன் இல்லை. ஆகவே இவ்வறிக்கையானது ஒரு பக்கம் சார்பாகவே காணப்படுகின்றது என குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த காலத்தை மறப்போம் மன்னிப்போம்

சர்வதேச விசாரணைகள் குறித்து வாசுதேவ

கடந்த காலத்தை மறப்போம், மன்னிப்போம் என்று தெரிவித்துள்ள ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, எதிர்காலத்தில் தேசிய நல்லிணக்கத்துடன் செயற்படுவோம் என்றும் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையகத்தினால் சர்வதேச விசாரணையை பரிந்துரைத்து விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலை யில் அது குறித்து வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சர்வதேச விசாரணைக்கு எதிராக கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்து தமிழ் மிதவாத தலைவர்களை வெற்றிபெறச் செய்திருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.

இலங்கையில் கலப்பு நீதிமன்றமா

ஐ. நா. அறிக்கைக்கு நாமல் கண்டனம்

இலங்கையில் இடம் பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பில் விசேட கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணை யாளர் வலியுறுத்தியிருப்பதை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கண்டித் துள்ளார்.

ஐ. நா. அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு அவர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

உண்மையைக் கண்டறிவதில் உறுதியாக இருக்க வேண்டும். சுமந்திரன்

ஐ.நா. கூறியதை இலங்கை நடைமுறைப்படுத்துமா

சி. சிறீதரன் கேள்வி

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரினால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பி னர்களான எம். ஏ. சுமந்திரன் மற்றும் சி. சிaதரன் ஆகியோர் கருத்து வெளி யிட்டுள்ளனர்.

குறித்த விசாரணை அறிக்கையானது எமது தமிழ் சமூகமும் உள்நோக்கி பார்வையொன்றை செலுத்துவதற்கு உபயோகமானதாக இருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் நாங்கள் உண்மைத்துவத்துடன் வருங்காலத்தில் செயற்பட வேண்டும் எனவும் உண்மையைக் கண்டறிவதில் உறுதியாக இருக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இலங்கையில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையின் பின்னர் உண்மையான கட்டமைப்பை இலங்கை அரசு ஏற்று அதை நடைமுறைப்படுத்துமா என்னும் ஐயம் அனைவருக்கும் இருக் கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சி. சிaதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கலப்பு விசாரணையா

ஏற்க முடியாது என்கிறார் த. தே. கூ. சுரேஷ்

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பான ஐ. நா. விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனும் தெரிவித் துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் நடத்தப் படும் கலப்பு விசாரணையை ஏற்க முடியாது என்று, கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் வெளியானது குற்றவியல் அறிக்கையல்ல

கஜேந்திரகுமார்

இலங்கை தொடர்பாக ஐ. நா. மனித உரிமைகள் ஆணையகம் வெளியிட்டிருக்கும் மனிதாபிமான விடயங்கள் சார்ந்த விசாரணை அறிக்கையினை நாம் வரவேற் பதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்திருக்கின்றார்.

மேற்படி விடயம் தொடர்பாக குறித்த கட்சியின் யாழ். அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.

குறித்த சந்திப்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் தமது அறிக்கையினை வெளியிட்டிருந்த போது இந்த அறிக்கை ஒரு மனித உரிமை சார்ந்த விசாரணை ஊடாக உருவாக்கப்பட்ட அறிக்கை எனவும், குற்றவியல் விசாரணை ஊடாக வெளியான அறிக்கை அல்ல எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

ஐ. நா. அறிக்கை கண்டு நெகிழ்ந்தோம் ஐயா

இலங்கையில் நடந்த வன்கொடுமைகள், யுத்த நிட்டூரங்கள், மனித வதைகள் தொடர்பில் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயித் அல் ஹுஸைன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்கொடு மைகள் மிக மோசமானவை என்பது சர்வதேசத்தின் முன் தெரியப்படுத்தப் பட்டுள்ளது.

யுத்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தங்களுக்கு நடந்த கொடூரங்கள் மறைபட்டுப் போகுமோ என்று அஞ்சியிருந்த வேளையில் ஐ. நா. மனித உரிமைகள் பேரவை மிகத் தெளிவாக தமிழ் மக்களின் அவலங்களை அம்பலப்படுத் தியது. பொதுமக்களுக்கு எதிரான கொடு மைகளை யார் செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுடன் அந்தக் குற்றங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதும் நியாயமானது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.