புத் 64 இல. 12

கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25

SUNDAY MARCH 18  2012

 
"மனித உரிமைகள் பேரவையில் பிரேரணை''

"மனித உரிமைகள் பேரவையில் பிரேரணை''

இலங்கை பற்றிய உலக நாடுகளின் கருத்தொற்றுமையும்

மாறுபட்ட நிலைப்பாடுகளும் நாடுகள் ரீதியான நோக்கு

கடைசி நேரத்தில் வாபஸ் பெறப்பட லாம் என்ற ஊகம் குறிப்பிட்ட சிலரிடையே இருந்திருக்கலாம் என கருதப்பட்ட தருணத்தில் பிரேரணை முன்வைக்கப்பட்ட செய்தி அமெரிக்கா அதன் முயற்சிகளில் அக்கறை கொள்ளவில்லை என்றும் வெறுமனே பிதற்றுவதாகவும் தற்காலிகமாக சிவப்புக் கொடி காண்பிப்பதாகவும் உலாவந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் அமுலாக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானம் வலியுறுத்துக்கிறது. ஆனால் இறுதி வாசகத்தில் உண்மையான எதிர்பார்ப்பு புலனாகிறது. மனித உரிமை பேரவையில் தொழில் நுணுக்க உதவியை இலங்கை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென கூறப்பட்டிருக்கிறது. 2009 மேயில் இலங்கையின் வடபுலத்தே புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகான ஐரோப்பிய யூனியன், கனடா போன்ற நாடுகளின் செயல்பாடுகள் மீதான அனுபவத்தை கொண்டு இலங்கை அரசாங்கத்தால் குறித்த விடாப்பிடியான பின்புல சூழ்ச்சி தடுக்கப்பட வேண்டும் என கூறப்படுகிறது.

இது ஒரு நவீன கால நன்மையடைவதற்கான சூட்சுமங்கள் நிறைந்த வேட்டையாகவும் தீர்மானத்தை சம்பந்தப்படுத்தியதான முழு அசெளகரியத்துக்குள்ளாக்கும் பொருத்தமற்ற நடவடிக்கைகளாகவும் அமைந்துள்ளன. செயற்பாட்டாளர்கள் கூட முரண்பாடான கருத்துக்களை கூறி வருவதை காண முடிகிறது. உதாரணமாக பிரிட்டனின் வெளிவிவகார செயலர் பேரவையில் இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடு, ஆகவே சம்பந்தப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் பாதுகாப்பான எல்லை நோக்கி வழிநடத்தும் நியாயமான காரணமுண்டு என கூறுகிறார்.

அதன் பின்னர் இரு வாரங்களில் நமது நாட்டிலுள்ள உயர்ஸ்தானிகர் இலங்கை திட்டவட்டமாக தோல்வியடைந்த நாடல்ல என்று குறிப்பிடுகிறார். இந்த நிலைமை பாரிய வேறுபாட்டை ஒரே நாட்டைச் சேர்ந்த இரு ராஜதந்திரிகளிடையே வெளிக்காட்டியது. உலக மேடையில் பிரிட்டன் நடந்து கொள்கின்ற உறுதியான நிலைப்பாட்டின் மாறுபட்ட தன்மைகளை அவதானிக்க முடியவில்லையா என அக்கறையுள்ளோர் கேள்வி எழுப்புகின்றனர்.

எவ்வாறாயினும் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. வாக்கெடுப்பா, வாபஸா, நகர்த்தலா, ரத்துச் செய்யப்படுமா என்ற கேள்விகளிடையே சமகாலத்தில் வாக்களிக்கும், வாக்களிக்காத நாடுகளின் நிலைப்பாடுகளை நோக்குவோம்.

இந்தியா

சமகால அரசாங்கத்துடன் அந்நியோன்யமான உறவுகளைக் கொண்டதாக கணிப்பீட்டுக்குள்ளாகியுள்ள நாடு இந்தியா, இதுவரையில் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. இலங்கையைப் புறக்கணித்துச் செயல்படும் மனப்பாங்கை இந்தியா கொண்டிருக்கும் என ஊகிக்கத் தேவையில்லை. சொந்த நாட்டிலேயே மாநிலங்கள் வாயிலான இலங்கைக்கு எதிர்ப்பான அலைகள் உண்டு. நாங்கள் சமஷ்டி கொண்ட நாடு, மாநிலங்கள் தொடர்பில் தங்களுக்கு பெரிய மரியாதையுண்டு, மாநில அரசாங்கங்களின் மதிப்பீடு எதுவாக இருப்பினும் அவற்றை பலமான முறையில் கருத்தில் கொள்ள வேண்டிய தேவையில்லாமலில்லை என்று இந்திய அதிகாரி குறிப்பிட்டார். இதேவேளை பாராளுமன்றத்தில் மாநிலத்தாரின் அமளி துமளிகளையும் அறிந்து கொண்டிருக்கிறோம். என்றாலும் இந்தியாவுக்கு ஒரு தர்மசங்கட நிலை தோன்றியுள்ளது எனில் மிகையாகாது. அதேவேளையில் தனிப்பட்ட முறையில் ஒரு நாடு குறித்த தீர்மானங்களுக்கு இந்தியா ஆதரவளிக்காது எனக் கூறப்படுகிறது.

ரஷ்யா

ரஷ்யா இலங்கையின் நேச சக்தி, வாக்களிக்கத் தகுதி பெற்ற நாடு. வாக்கெடுப்பு வருமாயின் நிச்சயமாக இலங்கைக்கு சார்பாகவே வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் பிரேரணை இறைமையுள்ள தேசத்துள் ஒரு வெளிவாரியான தலையீடு. இது ஏற்புடையதுமல்ல. ஏற்றுக்கொள்ளக் கூடியதுமல்ல.

ஜப்பான்

இலங்கையின் நீண்டகால அபிவிருத்திப் பங்காளியான ஜப்பான் மனித உரிமைகள் பேரவை அமர்வில் உரைநிகழ்த்துகையில், இலங்கையின் நல்லிணக்கம் புனர் நிர்மாண செயல்பாடுகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் எனக் குறிப்பிட்டது. அழுத்தங்களை ஏற்படுத்தாமல் இலங்கையுடன் பணியாற்றுமாறு சர்வதேச சமூகத்தை ஜப்பான் கோரியுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பல நல்ல பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய தேவையை வலியுறுத்திய ஜப்பான், மனித உரிமை நிலைமைகள் தொடர்பாக சர்வதேச சமூகத்துடன் திறந்த முறையான சம்பாஷணைகளில் ஈடுபட வேண்டுமென கூறியது. ஒரு பார்வையாளராக அமர்வுகளில் பங்கேற்றிருக்கும் அந்த நாடு, 2009 இல் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது அச்சமயம் வாக்களிக்கும் உரிமை கொண்டிருந்தும் வாக்களிப்பில் இருந்து தவிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

சீனா

இலங்கை அதன் நல்லிணக்க முயற்சிகளை எதுவித அழுத்தங்களுமின்றி நிறைவேற்ற அனுமதிக்கப்பட வேண்டும். தேசிய நல்லிணக்க முறைமைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ள முயற்சிகளை சீன அரசாங்கம் பாராட்டுவதாக கூறப்படுகிறது. வெளித்தலையீடுகளில் இருந்து சுதந்திரமாக குறித்த நல்லிணக்க முறைமைகளை நிறைவுக்குக் கொண்டு வருவதற்கு இலங்கைக்கு கால இடைவெளி வழங்கப்பட வேண்டும். அத்துடன் சர்வதேச உதவியே வழங்கப்பட வேண்டும் என சீனா அபிப்பிராயம் கொள்கிறது. இந்த நாடு இலங்கையின் நேச சக்தி. இம்முறை வாக்களிக்கும் அங்கத்துவ நாடு. இலங்கைக்கு சார்பாக நிச்சயமாக வாக்களிக்கலாம் என ஊகிக்கப்படுகின்ற சீனா, ஒரு குறித்த நாடு தொடர்பான பிரத்தியேக தீர்மானத்துக்கு ஆதரவளிக்க முடியாது என்றும் அமெரிக்கா இரட்டைக் கொள்கைகளை கடைப்பிடிப்பதாகவும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான்

பேரவையில் கருத்துக் கூறிய பாகிஸ்தான் - சீனாவின் மனோபாவத்தையே அழுத்திக் கூறியது. உள்நாட்டு ரீதியாக இலங்கை மேற்கொண்டுள்ள நல்லிணக்க பொறி முறையை தொடர்வதற்கு அந்த நாட்டுக்கு கால இடைவெளி வழங்கப்பட வேண்டும் என கூறப்படுகிறது. பேரவையில் சமாசாரங்களை வெளிக்கொணர்ந்து இலங்கையின் காலத்தை வீணடிக்கக்கூடாது என கூறிய பாகிஸ்தான் - இதனை விடவும் கலந்துரையாடப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள் பல உள்ளதாகவும் கூறிற்று. ஆதரவளிக்கும் இந்த நாட்டுக்கு வாக்களிக்கும் உரிமை இந்தத்தடவை இல்லை என தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீட்டை தோற்றுவிக்கக்கூடிய எத்தகைய நடவடிக்கைக்கும் பாகிஸ்தானின் ஆதரவு இல்லையாம். பயங்கரவாதத்தை தோற்கடிப்பதில் இலங்கைக்கு பக்கபலமாக நின்ற பாகிஸ்தான், சமகால நல்லிணக்க முன்னெடுப்புகள் ஆபத்துக்குள்ளாக்கக்கூடிய பேரவையின் எத்தகைய நடவடிக்கையையும் கடுமையாக எதிர்க்குமென முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொட்சுவானா

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத் தொடரில் வைத்து இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை வரவேற்ற நாடுகளிடையே பொட்சுவானாவும் ஒன்று. அதே நேரம் பேரவையில் உரையாற்றிய பிரதிநிதி மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு பரிகாரம் காணப்பட வேண்டிய தேவையை வலியுறுத்தினார்.

பிரிட்டன்

இது அமெரிக்காவுடன் தோழமை கொண்டுள்ள நாடு, இந்தத்தடவை இந்த நாட்டுக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது. வாக்களிக்கத் தூண்டும் நடவடிக்கைகளை பிற நாடுகள் மீது மேற்கொள்ளலாம். அங்கத்துவ நாடுகளின் கோரிக்கைக்கு செவிசாய்த்து நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுலாக்க வேண்டும் என்ற கருத்து ஆரம்பத்தில் இருந்தே இந்த நாட்டிடம் இருந்து வருகிறது.

ஐரோப்பிய யூனியன்

ஐரோப்பிய யூனியன் - ஸ்திரமான முறையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டிலேயே இருந்து கொண்டிருக்கிறது. 27 அங்கத்துவ நாடுகளைக் கொண்டமைந்துள்ள யூனியன் ஆரம்பத்திலிருந்தே இலங்கை பொறுப்புக் கூற வேண்டும் என்ற பிடிவாதத்திலேயே உள்ளது. ஐரோப்பிய யூனியனின் சார்பில் கருத்துரைத்த டென்மார்க் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பேரவை ஊக்குவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது.

பிரான்ஸ், கியூபா

தாங்கள் அமெரிக்கத் தீர்மானத்துக்கு உறுதியாக ஆதரவாளிக்கிறோம். ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையையும் கவனத்தில் கொள்ளுமாறு பேரவையை கோருவோம் என்று பிரான்ஸ் கூறியது. அதேவேளை தமது கருத்துக்களை வெளியிட்ட கியூபா 20 வருடங்களுக்கு முன்பு கியூபாவுக்கு எதிராகவும் ஒரு தீர்மானம் முன்வைக்கப்பட்டது. எதுவும் நடக்கவில்லை. விசேட வானூர்திகளைக் கொண்டு தாக்குவதும் கெளதனாமோ தளத்தில் தடுத்துவைத்துள்ளவர்களைப் போன்று மனித உரிமை மீறல்களே என்று கூறியது.

அதேநேரம் போர்த்துக்கல், ஜேர்மன், அவுஸ்திரேலியா, சுவீடன் போன்ற நாடுகள் முறையே பிரேரணையை வரவேற்பதாகவும் பிரேரணை முக்கியமானதும், உறுதியானதுமாகும் என்றும், நிறைவானதும், நியாயமானதுமாகும் என்றும், சிறப்புச் சமநிலை மிக்கதும் ஏற்புடையதுமாகும் எனவும் அபிப்பிராயம் தெரிவித்தன.

சுவிற்சலாந்து, நோர்வே, ஹங்கேரி, போலந்து

சுவிற்சலாந்தும் நோர்வேயும் வாக்களிக்கும் நாடுகளாக உள்ளன. அமெரிக்கா இந்த தீர்மானத்தை கொண்டு வந்தமைக்காக நன்றி தெரிவிக்கும் சுவிற்சலாந்து பூரணமாக அதனுடன் உடன்படுகிறது. பிரேரணை நகர்த்தப்பட வேண்டும் என்ற ஆத்மபலத்துடன் எடுக்கப்பட வேண்டுமாம். அதேவேளை வாக்களிக்கும் நாடான நோர்வே தனது கருத்தில் குறித்த பிரேரணையை வரவேற்பதாகவும், ஆதரிப்பதாகவும் கூறுகிறது.

எகிப்து, ஸிம்பாப்வே

அணிசேரா நாடுகள் அமைப்பின் சார்பில் எகிப்து கருத்துக்கூறுகையில், தாங்கள் தீர்மானத்தை வன்மையாக எதிர்க்கிறோம். இந்த இயக்கத்தால் முன்னர் விடுக்கப்பட்ட அறிக்கை வாசிக்கப்பட்டது. அணிசேரா நாடுகளின் நிலைப்பாட்டையே தாங்களும் எடுப்பதாகவும் ஆதரவளிப்பதாகவும் கூறிய ஸிம்பாப்வே, இதனைக் கொண்டு வருவது மிக்க அநீதியானது என்று குறிப்பிட்டது.

தென்னாபிரிக்கா

தென்னாபிரிக்க அரசாங்கம் - இலங்கையில் மனித உரிமைகள், இடம்பெயர்ந்த மக்களின் மீள் வருகை, மீள்குடியேற்றம், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈடு, நிவாரணம் யுத்தத்துக்கு பின்னரான புனரமைப்பு, தேசத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பில் அறிந்துள்ளதாக கூறியுள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கவென அதிகாரபூர்வமான பொறிமுறையை தோற்றுவிப்பதற்கு தீர்மானம் எடுத்தமைக்காக இலங்கை அரசாங்கத்தை பாராட்டுவதாக தென்னாபிரிக்கா தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்காவின் வெளிநாட்டு மத்தியஸ்த எதிர்ப்புக் கொள்கை, இலங்கைக்கு ஒரு உற்சாகமான கொள்கையாகும். வெளிவாரித் தலையீடுகளுக்கு இட்டுச் செல்லும் செயல்பாடுகளை இலங்கை விரும்புவதில்லை என்ற பரஸ்பர செய்தி பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் காப்பகம்

இலங்கையில் பொறுப்புக் கூறல் கடப்பாடுகளுக்கு மனித உரிமைகள் பேரவையில் வைத்து சர்வதேச பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டுமென மனித உரிமைகள் காப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பேரவைக்கு விடுத்துள்ள தனது குறிப்பில் பொறுப்புக்கூறல் விவகாரங்களில் ஈடுபடுவதற்கான முக்கிய படிமுறைகளை அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும் அவை யாவும் மனித உரிமை பேரவை அமர்வுகளை மையமாகக் கொண்டு இலங்கைக்கு எதிரான தீர்மானம் நகர்த்தப்படுவதை தடுப்பதற்காக துரிதமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளாகும் என தெரிவித்துள்ளது. அதேவேளையில் சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்டதாக உலக தமிழ் போரம், மனித உரிமைகளுக்கான தமிழ் நிலையம் போன்ற சர்வதேச நிறுவனங்கள் பங்கேற்ற கூட்டத்தில் பல்வேறு விசயங்கள் தொடர்பான விசாரணைகள் பற்றி சர்வதேச மன்னிப்புச் சபை கேள்விகள் எழுப்பியதாக தெரிய வருகிறது. ஜெனீவாவுக்கான இலங்கைத் தூதுக்குழுவில் இடம் பெறும் நீதியமைச்சர் றவூப் ஹக்கீம் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு தனிநபர் தொடர்பாகவும் தெளிவாக பொறுப்புக் கூறப்பட்டுள்ளதை உணராமல் சர்வதேச மன்னிப்புச் சபை மிகைப்படுத்தப்பட்ட அறிக்கையை வெளியிடுவதாக தெரிவித்துள்ளார். இது சர்வதேச ரீதியில் இலங்கையின் பெயரை கறைப்படுத்துவதற்கான முயற்சியாகும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இதேவேளை ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு பிரேர ணையை ஆதரிக்கிறது. இலங்கையில் சட்ட ஆட்சியை ஸ்திரப்படுத்துவதற்கு ஏற்புடையது. முன்னேற்றங்களை கண்டடைவதற்கு சிறந்த வாய்ப்பு கிட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதேவேளை மனித உரிமைகள் ஆர்வலரான சுனிலா அபேசேக்கர கூறுகையில்: ஐ.நா.வில் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் பெரும் பிரிவினைகளை தோற்றுவித்துள்ளதாக தெரிவித்தார். அங்கத்துவ நாடுகளிடையே ஸ்திரமான உடன்பாடின்மைகளை தோற்றுவித்துள்ளது. தீர்மானம் தொடர்பில் இடம்பெற்று வருகின்ற விவாதங்கள், உரைகளின் போது நாடுகளிடையேயான பிரிவினை வெளிப்படையாக புலனாவதாக சுட்டிக்காட்டினார்.

ஆர்ப்பாட்டம்

இதேவேளை ஐரோப்பியத் தமிழர்கள் 2000 பேர் ஜெனீவாவிலுள்ள ஐ.நா. தலைமையகம் முன்பாக இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்களை விசாரிக்கவென சர்வதேச நியாய சபை நியமிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. மார்ச் 23 வரை நடைபெறும் ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் கோஷமிட்டனர். தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப நிரந்தர அரசியல் தீர்வு சுயாதீன, சர்வதேச விசாரணை வடகிழக்கிலிருந்து இராணுவம் வாபஸ், ஐ.நா ஏற்பாட்டில் சர்வஜன வாக்கெடுப்பு, தமிழர்களின் சுயநிர்ணயம், அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு, உடனடி விடுதலை போன்ற சுலோகங்களை தாங்கிய பதாகைகளும் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்கப் பிரேரணையின் அடிப்படைக் குறிக்கோளை உற்று நோக்குகையில் இலங்கையில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருதலே உள்நோக்கமாக தெரிகிறது என்று ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தெரிவித்துள்ளார். மனித உரிமை பேரவையில் நிலைமைகளை உறுதிப்படுத்துவதற்கு செய்யப்பட வேண்டிய கருமங்கள் இன்னும் நிறையவே காணப்படு வதாக குறிப்பிடும் அவர், மேற்குலகின் உண்மையான குறிக்கோள் ஆட்சிமாற்றம் என்றும் தோல்வியடைந்த நாடு என்ற எண்ணம் தலையீட்டை நியாயப்படுத்த வழக்கமாக பாவிக்கப்படுகின்ற ஜாலவித்தையின் பகுதி என்றும் தெரிவித்தார். அநேகமான அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் உதவி இலங்கைக்கு உண்டு. அமெரிக்காவின் மறைந்து கிடக்கும் குறிக்கோளை பல தூதுவர்களும் பிரஸ்தாபித்திருப்பதை அறிய முடிகிறது. யுகோஸ்லாவியா, ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, சமகாலத்தில் சிரியா போன்ற இடங்களில் தங்களது தலை யீட்டை சட்டபூர்வமானதாக்கவும், நியாயப் படுத்துவதற்குமான வாதத்தை மேற்குலகம் விருத்தி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வாக்களிப்புக்கு வந்து தோற்கடிக்கப்படும் வரை காத்திராமல், தீர்மானம் அர்த்தமற்றது என்ற வகையில் அதனை நம்பச் செய்து சர்வதேச சமூகத்தை வளைத்துப் போட முயற்சிக்கப்படுகிறது. தோற்கடிப்பதற்கான முழு முயற்சியில் இலங்கை ஈடுபடும். அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையிலுள்ள பிரேரணை சரிவுகாணாவிட்டால் 23 ஆம் திகதிக்கு முன்பு 21 ஆம் திகதியளவில் வாக்கெடுப்புக்காக நகர்த்தப்படலாம். எவ்வாறாயினும் குறித்த இலங்கைக்கு எதிரான பிரேரணை சர்வதேச சமூகத்தை பிளவுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது வெவ்வேறு பக்கங்களாக பிரிவடையச் செய்துள்ளது. இணக்கப்பாடுகளின்றி பிளவுண்டு காணப்படுகின்ற 47 நாடுகள் சர்வதேச சமூகத்தின் மரியாதைக்குரிய பெறுமதியை இழந்து வருவதாக பேராசிரியர் அமைச்சர் பீரிஸ் கூறினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.