புத் 64 இல. 12

கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25

SUNDAY MARCH 18  2012

 
இன நல்லுறவைச் சீர்குலைக்கவே வழிவகுக்கும்

nஜனீவா பிரேரணை ஒரு மாயையே

இன நல்லுறவைச் சீர்குலைக்கவே வழிவகுக்கும்

- அமைச்சர் ரி'hத் பதியுதீன்

கேள்வி:- ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை எடுப்பதில் அமெரிக்கா முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறதே?

பதில்:- இந்து சமுத்திரத்திலே இலங்கை கேந்திர மையமாக விளங்குகின்றது. இந்தியா, சீனா போன்ற பிராந்திய வல்லரசுகளின் முழுமையான செல்வாக்கை இலங்கை பெறக்கூடாது என்பது அமெரிக்கா உட்பட மேற்கத்தேய வல்லரசுகளின் எண்ணம். நமது நாட்டின் வெளிநாட்டுக் கொள்கைக்கமைய மேற்கத்தேய நாடுகளுடன் மட்டுமின்றி ஈராக், ஈரான், ஜப்பான், மலேசியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் வர்த்தகத் தொடர்புகளும் உறவுகளும் நம் நாட்டுக்குண்டு. ஈரானுடன் இலங்கை நெருக்கமான தொடர்பை வைத்திருப்பதும் அமெரிக்காவுக்குப் பிடிக்காத ஒன்று. இலங்கைக்கெதிராக அமெரிக்கா செயல்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

மேலும் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் தமிழ்ச் சமூகத்தினர் கடந்த 30 ஆண்டு காலமாக பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

இயல்பாகவே தமிழ் மக்கள் திறமைசாலிகள். எங்கே வாழ்ந்தாலும் அங்கேயுள்ள சூழலுக்கு தம்மை ஆட்படுத்தி சிறப்பாக வாழும் இயல்பினர். மேற்குறிப்பிட்ட கால இடைவெளியிலே தமிழ் மாணவர்கள் அந்தந்த நாட்டு மொழிகளிலே பாண்டித்தியம் பெற்று அங்குள்ள மாணவர்களுடன் போட்டியிட்டு பரீட்சைகளில் அதி உயர் சித்தியைப் பெற்று விடுவதை நாம் அறிவோம். இதன் காரணமாக பேராசிரியர்களாகவும் வைத்தியர்களாகவும் எஞ்சினியர்களாகவும் பணிபுரிகின்றனர்.

மேற்கத்தேய நாட்டவருடன் நெருங்கிய தொடர்பும் உறவும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதேவேளை இலங்கையில் தமிbழம் உருவாகும் என்ற எண்ணத்துடன் செயற்பட்ட அவர்களுக்கு போர் முடிவடைந்ததனால் விரக்தி ஏற்பட்டது.

இதனால் ஜனாதிபதி மீதும் அரசின் மீதும் அவர்களுக்கு எற்பட்ட காழ்ப்புணர்வின் செல்வாக்கு மேற்கத்தேய தலைவர்களிடம் பிரதிபலிக்கின்றது. அதன் காரணமாகவே மேற்கத்தேய தலைவர்கள் இலங்கைக்கு எதிராகத் தொழிற்படுகின்றனர்.

ஈராக், லிபியா, எகிப்து, சிரியா போன்ற நாடுகளை துவம்சம் செய்த அமெரிக்கா, தற்போது இலங்கையிலும் மூக்கை நுழைக்க எத்தனிக்கின்றது.

கேள்வி:- ஜெனீவா பிரேரணை தொடர்பாக நீங்கள் என்ன கருதுகின்aர்கள்?

பதில்:- கடந்த கால யுத்தச் சூழ்நிலையில் சிங்கள, தமிழ், முஸ்லிம்களுக்கிடையிலான இன நல்லுறவும் நல்லிணக்கமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இரு பக்கமும் ஏற்பட்ட உயிர்ச்சேதங்களும் பொருட் சேதங்களும் இன ஐக்கியத்தில் பாரிய விரிசலை ஏற்படுத்தியிருந்தது. புலிகள் சிங்களப் பொதுமக்களை அழிக்கின்றனர் என்றும் சிவில் இராணுவம் தமிழ் மக்களை இம்சைப்படுத்துகின்றனரென்றும் ஏற்பட்ட மனத்தாக்க எண்ணங்கள் கருத்து வேற்றுமையை ஏற்படுத்தி ஒன்றுகூடி வாழ வேண்டிய சமாதான சூழ்நிலையை பெரிதும் பாதித்தது. இன்று யுத்தம் முடிந்துவிட்டது. அபிவிருத்திப் பணிகள் அசுர வேகத்தில் நடைபெறுகின்றன. இடம்பெயர்ந்த மக்கள் மீள் குடியமர்த்தப்படுகின்றனர். மீள் கட்டுமானப் பணிகள் இடம்பெறுகின்றன. புலிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கை மக்கள் வடக்கே சென்று சகஜமாகத் தொழில் புரியவும் வடகிழக்குப் பிரதேச மக்கள் தென்னிலங்கைக்கு பயமில்லாமல் வந்து காரியங்களை நிறைவேற்றக் கூடிய சுமுக சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மேற்கத்தேய நாடுகள் இலங்கையின் அபிவிருத்திக்கு உதவுவதற்குப் பதிலாக உபத்திரவம் செய்வது வேதனைக்குரியது. மட்டுமின்றி துரதிஷ்டமானது.

அமெரிக்காவின் இந்தப் தேவையற்ற பிரேரணையில் அமெரிக்காவுக்கு நன்மை கிடைக்கப் போவதில்லை. மாறாக இலங்கையில் வாழும் சிங்கள மக்களுக்கிடையேயுள்ள இன நல்லுறவு மீண்டும் பாதிக்கப்படக் கூடிய சாத்தியம் உண்டென்பதை அமெரிக்காவுடன் சேர்ந்துள்ள மேற்கத்தேய நாடுகள் உணர வேண்டும். ஜெனீவா பிரேரணையால் தமிழர்கள் தமக்கு ஏதோ வெற்றி கிடைக்குமென எண்ணுகின்றனர். அதே சமயம் சிங்களவர்கள் தாம் பாதிக்கப்படுவதாக எண்ணுகின்றனர். இந்தப் பிரேரணையால் ஏதாவது நாட்டுக்குப் பாதகம் ஏற்பட்டால் அது சிங்களவர், தமிழர், முஸ்லிம் அனைவருக்குமுரிய பாதகமாகவே கருத வேண்டும். ஏனெனில் நாம் அனைவரும் இலங்கையர்களே!

மேலும் அத்தகைய பாதிப்பு புலம்பெயர் தமிழ் சமூகத்துக்கோ தென்னிந்திய தமிழ் சமூகத்துக்கோ நஷ்டத்தை ஏற்படுத்தப் போவதில்லை. அதை அனுபவிக்கப் போகின்றவர்கள் நாமே என்பதை அமெரிக்காவின் பிரேரணையை ஆதரிப்பவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தப் பிரேரணை ஒரு மாயை என்பதே என் கருத்து.

கேள்வி:- ஜெனீவாவில் இலங்கைக்குழு எவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது?

பதில்:- அமெரிக்கா தலைமையில் கொண்டுவரப்பட்ட இந்தப் பிரேரணையானது உண்மைக்குப் புறம்பான சம்பவங்களை வைத்து கொண்டுவரப்படுகின்றது. இது ஒரு பாரபட்சமான நடவடிக்கை என்பதை மனித உரிமைப் பேரவை உறுப்புரிமை நாடுகளுக்கு விரிவாக எடுத்துரைத்துள்ளோம். பேரவையில் அங்கம் வகிக்கும் ஆசிய நாட்டுத் தலைவர்களையும் ஆபிரிக்க நாட்டுத் தலைவர்களையும் முஸ்லிம் நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து இலங்கை தொடர்பான உண்மை நிலைவரத்தை விரிவாக எடுத்துரைத்தோம். கடந்த 30 ஆண்டு காலத்திலும் புலிகளின் போர்க் கொடுமைகளின் தாக்கம், அதனால் ஏற்பட்ட அழிவுகள், அப்பாவி மக்களை புலிகள் கொன்ற சம்பவங்கள் அனைத்தையும் எடுத்துரைத்தோம். இனப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது தலைமையிலான அரசும் எடுத்துவரும் நடவடிக்கைகளை விபரித்தோம். போரொழிந்த இன்றைய நிலையிலே மக்களின் அவலங்கள் ஒழிந்து அச்சமின்றியும் அமைதியுடனும் நாட்டு மக்கள் சமாதானமாக வாழும் நிலைமையை விளக்கினோம். நாட்டின் அபிவிருத்திக்காக புனர்வாழ்வு நடவடிக்கைகள், அழிந்த உட்கட்டமைப்புகள் சீராக்கப்பட்டமை, மீள் கட்டுமானப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படும் நிலைமை குறித்து வெளிநாட்டவருக்கு விபரித்துக் கூறினோம்.

இனப் பிரச்சினையைத் தீர்க்கும் வழிமுறையாக நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகளுக்கு அமைய அரசின் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் விபரித்தோம். ஆசிய, ஆபிரிக்க நாடுகள் பல எமது விளக்கத்தை ஏற்றுக்கொண்டன.

மேலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உறுப்பு நாடுகள் பல ஏற்றுக்கொண்டன.

கேள்வி:- இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பாக மேற்குலகம் அடிக்கடி கூறி வருகின்றதே?

பதில்:- மனித உரிமை பற்றிப் பேசுபவர்கள் மனித உரிமையை மதிப்பவர்களாக இருக்க வேண்டும். அத்துடன் மனித உரிமையை மீறாதவர்களாக இருக்க வேண்டும். உலகிலே மனித உரிமை மீறல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

அமெரிக்கா தனக்கு இணக்கமாக இல்லாத நாடுகள் பலவற்றிலே அத்துமீறிப் புகுந்து ஆக்கிரமித்து அக்கிரமம் செய்து மக்களைக் கொன்று குவித்தமையை மனித உரிமை மீறல்களாகக் கருத உலகில் எந்த சக்தியுமில்லை. மனித உரிமை மீறல் தொடர்பாக செல்வாக்குள்ள நாடுகளுக்கு ஒரு நீதியும் சிறிய நாடுகளுக்கு இன்னுமொரு நீதியும் அமைவதுதான் வேதனைக்குரியது.

கேள்வி:- இந்நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் இன நல்லுறவு பேணப்பட்டு வருகின்றதா?

பதில்:- இனப் பிரச்சினை என்பது தனியே தமிழ் மக்களுக்கு மட்டும் தேவைப்பட்டதல்ல. அது ஒரு சிறுபான்மையினர் பிரச்சினை என்பதால் முஸ்லிம்களும் அதில் உள்ளடக்கப்பட வேண்டியவர்கள். இந்நாட்டு முஸ்லிம்கள் பல்வேறு பிரதேசங்களில் வாழ்ந்த போதும் வடக்கிலும் கிழக்கிலும் இதய சுத்தியோடு இன நல்லுறவைப் பேணி வாழ்ந்து வந்தவர்கள். மதத்தால் வேறுபட்டாலும் மொழியால் ஒன்றுபட்ட சமூகம். முஸ்லிம்களுக்குரிய கட்சியாக மு. கா. உருவாக முன்னர் முஸ்லிம் தலைவர்கள் தமிழ்க் கட்சிகளுடனேயே இணைந்திருந்தனர். மு. கா.வின் ஸ்தாபகர் அஷ்ரப் அதன் பின் வந்த தலைவர்களும் தமிழ்ச் சமூகத்துடன் முரண்படாது தமிழ்த் தலைவர்களோடு முரண்பாடாது ஒற்றுமை பேணி வாழ்ந்து வந்தனர். முஸ்லிம்களின் ஏக கட்சியான மு.கா விலிருந்து வெளியேறியவர்கள் உருவாக்கிய முஸ்லிம் கட்சிகளின் பல தலைவர்களும் தமிழ் மக்களோடும் தலைவர்களோடும் ஒற்றுமை பேணியே வந்தனர். தலைவர்கள் பலர் முஸ்லிம்களிடையே தோன்றிய போதும் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கான தனித்துவச் சிறப்பு, அரசியல் உரிமை என்ற கோட்பாட்டிலே முஸ்லிம் கட்சிகளுக்கிடையே அபிப்பிராய பேதமோ முரண்பாடோ இல்லை. ஜனநாயக வழியில் அரசியல் செய்துவரும் சம்பந்தன் ஐயா போன்ற பெருந்தலைவர்கள் முஸ்லிம்களைப் புறக்கணித்து எதையும் செய்யும் நோக்கம் அற்றவராகக் காணப்படுகின்றனர் இவரின் வழியில் மாவை சேனாதிராஜா, சுமந்திரன், ஸ்ரீதரன் போன்ற எம். பிக்கள் கருமமாற்றுகின்றனர். இதேவேளை வேறுவழியில் அரசியலுக்கு வந்தவர்கள் முஸ்லிம்களையும் முஸ்லிம் தலைவர்களையும் மதிக்காது ஒதுக்கித் தள்ளுவது கவலைக்குரியதாக அமைகிறது. இத்தகைய தலைவர்கள் ஊடகங்களிலும் மேடைகளிலும் தெரிவிக்கும் கருத்துக்கள் முஸ்லிம்களைப் புண்படுத்துவதாக அமைந்த போதும் தமிழ், முஸ்லிம் சமூகத்தினர் இன நல்லுறவு விடயத்தில் தெளிவாகவும் திடமாகவும் இருக்கின்றனர்.

கேள்வி:- இனப்பிரச்சினை காரணமாக இடம்பெயர்ந்த வடபுல முஸ்லிம்களின் வாழ்வியல் பற்றிக் கூறுங்களேன்.

பதில்:- வடபுல முஸ்லிம்கள் குற்றமிழைக்காது புலிகளால் தண்டிக்கப்பட்டவர்கள். 24 மணிநேரத்துள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டவர்கள். எங்கே போகின்றோம், எதைச் செய்வோம் என்று தெரியாது திக்குமுக்காடி பொடி நடையிலே தென்னிலங்கை வந்து சேர்ந்தவர்கள்.

சொந்த ஊரிழந்து, வளம் கொழிக்கும் வயல் நிலங்களை இழந்து, தொழிலையும் தொழில் மையங்களையும் இழந்து துன்பத்தைச் சுமந்தவர்கள். இடம்பெயர்க்கப்பட்டு 22 ஆண்டுகள் கடந்தும் சொந்த மண்ணில் மீண்டும் தொழில் செய்ய முடியாத நிலையில் உள்ளவர்கள்.

வீடுகளும் வயல்களும் காடாகிக் காட்சியளிக்கின்றன. அவற்றை அழித்து புனர்வாழ்வு பெறுவதற்கான பொருளாதார வசதி இவர்களிடம் இல்லை. அரசின் உதவி கிடைக்கிறது. எனினும் அவர்களுக்கு மேலும் உதவி தேவைப்படுகின்றது.

இவர்களுக்கான உதவியை வழங்க யு. என். எச். சி. ஆர். போன்ற தாபனங்கள் பின்னிற்கின்றன.

இதுவரை சொந்த மண்ணிலே குடியேறிய முஸ்லிம் அகதிகளை ஐ. நா.வின் கீழ் இயங்கும் யு. என். எச். சீ. ஆர். போன்ற தாபனங்கள் இரண்டாம் தரமாகக் கணிக்கின்றன. உதவிகளை மறுக்கின்றன.

2008 ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் இடம் பெயர்ந்தவர்கள் பழைய அகதிகள் என்றும் குறிப்பிட்ட திகதிக்குப் பின்னர் உள்ளவர்கள் புதிய அகதிகள் என்றும் வரையறுக்கப்பட்டு 90ம்ஆண்டில் இடம்பெயர்ந்த முஸ்லிம் அகதிகளின் உதவிகள் மறுக்கப்படுகின்றன. இது ஒரு பாரபட்ச நடவடிக்கை என்றே கருத வேண்டியுள்ளது.

சுஐப் எம்.காசிம்... -

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.