புத் 64 இல. 12

கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25

SUNDAY MARCH 18  2012

கோடீஸ்வர ஹோட்டல் அதிபர் படுகொலை சம்பவத்தில் துலங்காதிருக்கும் மர்மம்!

கோடீஸ்வர ஹோட்டல் அதிபர் படுகொலை சம்பவத்தில் துலங்காதிருக்கும் மர்மம்!

இரகசிய விரோதிகளின் கைங்கர்யமா என்ற ரீதியிலும் விசாரணை

2012 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இருபதாம் திகதி திங்கட்கிழமை காலை ஆறரை மணியளவில் பியகமை ‘விலேஜ் ஹோட்டல்’ அதிபர் கொலை செய்யப்பட்டமை இதர பகுதிகளையும் பீதிக்குள்ளாக்கியது. கொலைகாரன் எவ்விதத் தடயங்களையும் விட்டுச் செல்லாதது மேலுமொரு பிரச்சினையாகவிருந்தது.

அறுபத்தைந்து வயதுடைய கோடீஸ்வரரான ரண்வலகே ஈபர்ட் பெர்னாட் ஜயரத்ன இந்த ஹோட்டல் மட்டுமன்றி இன்னும் பல நிறுவனங்களின் உரிமையாளருமாவார். ஹங்வெல்ல றிகோர்ட் ஹோட்டல், பல கோடி பெறுமதியான அலுமினியம் தொழிற்சாலை, பூகொடை கிரிந்திவெலை பகுதிகளில் பல தோட்டங்கள், கட்டடங்கள் இவருக்கு உரிமையாகியிருந்தன.

ஜயரத்ன முதலாளியும் அவரது ஹோட்டலும்.

சில காலங்களுக்கு முன் கட்டப்பட்ட பியகமை விலேஜ் ஹோட்டல் ஐந்து அறைகளை கொண்டதாகும். ஒரு அறையில் இவர் தங்கியிருந்தார். இவரது நிர்வாக திறமை காரணமாக பல அறைகள் கொண்ட ஹோட்டலாக மாறியது. திருமணங்கள், உபசார விழாக்கள், கூட்டங்கள் தாராளமாக இடம்பெற்றன.

பதின்மூன்று வருடங்களாக மனைவியுடன் வாழ்ந்த இவர் சில வருடங்களுக்கு முன் நோய் காரணமாக மனைவியை இழந்தார். இவரது மகனும் மகளும் திருமணத்தின் பின் வேறு இடங்களில் வாழ்கின்றனர். முப்பது வருடங்களுக்கு முன் இலங்கை கடற்படையில் சேவையாற்றிய இவர் வர்த்தகத்திலீடுபட்டதன் மூலம் கோடீஸ்வரரானார். பியகமை சுதந்திர வர்த்தக வலயத்தின் பல காணிகளுக்கு உரிமையாளரான ஜயரத்ன பியகமை வர்த்தக சங்கத்தின் தலைவருமாவார்.

வழமைபோல் அன்று காலை தொம்பேயிலுள்ள இம்புட்டுகும்புர தென்னந் தோட்டத்துக்கு காலை 6.20 மணியளவில் வந்து சேர்ந்தார். தோட்டத்தை கண்காணிக்கும் தாய், மகள் ஆகியோருடன் பேசிக்கொண்டிருக்கையில் கறுப்பு நிற ஜக்கட் அணிந்து தலையில் முகமூடி கவசமணிந்திருந்த ஒருவர் மோட்டார் சைக்கிளில் தோட்டத்தினுள் சென்றார். ஜயரத்ன முதலாளி வாகனத்தின் அருகில் வரும்போது அவரருகில் சென்ற முகமூடி மனிதன் முதலாளியுடன் வாக்குவாதத்திலீடுபட்டபோது முதலாளி ஜயரத்ன அவனை தாக்க அவன் தாக்கியபோது முதலாளி கீழே சாய்ந்தார்.

துயரத்துடன் குடும்ப அங்கத்தினர்

உடனே அம்மனிதன் தன் ஜக்கட்டினுள் மறைத்து வைத்திருந்த பெரிய கத்தியை எடுத்து ஜயரத்னவின் தலையையும் உடலையும் நோக்கி எட்டுமுறை வெட்டினான். கீழே சாய்ந்திருந்த ஜயரத்னவின் மீது தொடர்ந்து வெட்டுக்கள் விழுந்தபோது அவரை காப்பாற்றும் நோக்கில் அருகில் தோட்ட கண்காணிப்பாளர்களான இரு பெண்கள் வந்தபோது கொலைஞன் இவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் பதினேழு வயதுடைய சந்தியா குமாரியின் கையில் காயமேற்பட்டது.

இவர்கள் சப்தமிட அயலவர்கள் கூடியபோது சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் மல்வானை பக்கமாக தப்பிச் சென்றார். காயமடைந்த சந்தியாகுமாரி கம்பஹா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இறந்த ஜயரத்ன முதலாளியின் சடலம் கம்பஹா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டது.

சந்தேக நபர் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை தன் ஜக்கட்டுக்குள் மறைத்து வைத்து எடுத்துச் சென்றுள்ளார். வழமையாக தன் வாகனத்தில் பலருடன் வரும் ஜயரத்ன முதலாளி அன்று தனியாக வருவதை சந்தேக நபர் எவ்வாறு அறிந்தார். சந்தேக நபர் தனியாக வந்துள்ளார்.

இவை போக எவ்வித தடயங்களையும் இட்டுவைக்காது சென்றுள்ளாரெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆயிரக் கணக்கான ஊழியர்களின் முதலாளியான ஜயரத்னவின் குடும்பத்தினர், உறவினர், ஊழியர்களின் வாக்கு மூலங்கள் பெறப்பட்டன. தன் தகப்பனாருக்கு எதிரிகள் இருக்கவில்லையென்றும் இதனை எவர் செய்திருப்பரென அறிய முடியாமலுள்ளதாகவும் முதலாளியின் மகள் இரோஷா சுரஞ்சி ஜயரத்ன பொலிஸாரிடம் தெரிவித்தார். தன் தகப்பனாரின் தொழிலில் தனக்கு எவ்வித சம்பந்தமுமிருக்கவில்லை அத்துடன் தந்தை பலருக்கும் உதவியுள்ளார். மக்களுடன் அன்பாக பழகுகின்றார், தினமும் உதவி வருகிறார். அதனால் அவருக்கு எதிரிகளிருப்பதில் எவ்வித நியாயமுமில்லை.

அவருக்கு பிரச்சினைகளிருப்பது பற்றி தந்தை தன்னுடன் ஒருபோதும் கதைத்ததில்லை எனவும் அவரது மகன் சுரங்க ஜயரத்ன பொலிஸாரிடம் தெரிவித்தார். இக்கொலை இரு பிரிவினரிடையே ஏற்பட்ட பிரச்சினையா, தனிப்பட்ட, பிரச்சினையா, வர்த்தக பிரச்சினையா, ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதா கொலைக்கான காரணமென்ன என்பது புதிராயுள்ளது. விசாரணைகள் பல்வேறு கோணங்களில் நடத்தப்பட வேண்டுமென எண்ணிய கம்பஹாவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச். ஏ. ஏ. சரத்குமார, உதவி அத்தியட்சகர் தேவப்பிரிய ஜயசிங்கவுக்கு ஆலோசனை வழங்க, தொம்பே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயகுமார வுட்லர் உள்ளிட்ட குழுவினர் விசாரணைகளை தொடர்ந்தனர்.

சந்தேக நபர் முதலாளியுடன் நெருங்கிப் பழகியவரா என்ற கோணத்தில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன. மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளன. கடுவலை பிரதேசத்தின் இரு பாதாள உலக நபர்கள் மீது சந்தேகம் கொண்ட பொலிஸாரின் விசாரணை திசை திரும்பியது. 2001 ஆம் ஆண்டு கம்பளையில் ஆடம்பர வாகனம் ஒன்றில் மாகொல வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்றில் சம்பந்தப்பட்ட இவ்விருவரும் ஜயரத்னவின் கெலையில் சம்பந்தப்பட்டிருக்கலாமென பொலிஸார் அனுமானம் செய்தனர்.

இறந்தவர் நடத்தி வந்த மண் வியாபாரத்தில் சில தினங்களுக்கு முன் பிரச்சினை ஏற்பட்டு பின்னர் நிலைக்குள்ளானதாக தகவல் கிடைத்தது. தன் மகன், மகள் உறவினர்களுக்கு முதலாளி சொத்துக்களை உரிமையாக்கியுள்ளதாகவும், இதில் நெருங்கிய உறவினரொருவர் ஒப்பந்த அடிப்படையில் இக்கொலையை செய்திருக்கலாமெனவும் பொலிஸார் அனுமானிக்கின்றனர்.

ஜயரத்ன முதலாளி கடந்த பதினெட்டு வருடங்களாக குடும்பத்தினரிடமிருந்து பிரிந்து தனியாக பியகமை விலேஜ் ஹோட்டலின் அறை ஒன்றில் வாழ்ந்துள்ளதாகவும் தெரிய வந்தது. இறந்த முதலாளி பல நண்பர்களுக்கு இலட்சக் கணக்கில் பணம் வழங்கியுள்ளார். இதனை திரும்பிக் கொடுக்க வேண்டியுள்ளதால் இதிலிருந்து விடுபட நினைத்த ஒருவர் இக்கொலையில் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் அனுமானிக்கின்றனர்.

கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டதால் தலையில் ஏற்பட்ட காயத்தின் மூலம் அதிகளவு உதிரம் வெளியாகியதால் மரணம் சம்பவித்துள்ளதாக கம்பஹா போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற மரண விசாரணையின்போது தெரியவந்தது. சம்பவத்தை நேரில் கண்ட இளம் பெண் சந்தியாகுமாரி வெட்டுக் காயத்தின் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டி ருந்ததால் மரண விசாரணையின்போது அவரது வாக்குமூலம் பெறப்படவில்லை.

பியகமை விலேஜ் ஹோட்டலுக்கு ஜயரத்ன முதலாளியை அடிக்கடி சந்திக்க வரும் இரு நபர்கள் பற்றியும் இவர்களது உரையாடல் பற்றியும் ஊழியர்களிடம் விசாரணைகள் நடைபெற்றன. முதலாளியின் கையடக்க தொலைபேசிக்கு சம்பவத்துக்கு அண்மித்த தினங்களில் கிடைக்கப்பெற்ற அழைப்புகள் பற்றியும் நெருங்கிப் பழகியவர்களின் அழைப்புகளும் ஆராயப்படுகின்றன. இவரது தொழில் நிறுவனங்களில் பிரச்சினை இருந்துள்ளதா என்பது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. முதலாளியின் குடும்ப அங்கத்தினர் பன்னிரெண்டு பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற ஸ்தலத்தில் வாகனத்துக்கு பக்கத்தில் இரத்த வெள்ளத்தில் காணப்பட்ட ஜயரத்ன முதலாளியின் மேல் சட்டை பையில் பெரும் தொகையான பணமும் அடையாள அட்டையும் இருந்தன. கொலை திட்டம் முடிவடையும் வரை இரண்டாம் சந்தேக நபர் தோட்டத்தின் அருகிலிருந்து கண்காணித்துள்ளதாக பொலிஸார் அனுமானிக்கின்றனர்.

ஜயரத்ன முதலாளிக்கு ஏற்கனவே மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் இவருக்கு நண்பர்களைவிட இரகசிய விரோதிகள் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி தலை கவச நபர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.