புத் 64 இல. 12

கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25

SUNDAY MARCH 18  2012

 
என் வாசிப்புக்கு கால்கள் முளைக்கத் தொடங்கியது நண்பர்களின் சஞ்சிகைகளாலேயே!

என் வாசிப்புக்கு கால்கள் முளைக்கத் தொடங்கியது நண்பர்களின் சஞ்சிகைகளாலேயே!

- ராஜகவி ராஹில்

தமிழ் இலக்கிய வளர்ச்சியில் 1980 காலகட்டம் காத்திரமான படைப்பாளிகள் பலரைத் தந்திருக்கிறது. அந்த வகையில் நிந்தவூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ராஜகவி றாஹில் ஆளுமைமிக்க புனைவாளராகவும், ஒரு சிறந்த ஒலிபரப்பாளராகவும் திகழ்கிறார். பல்துறை ஆளுமையும், ஆற்றலும் மிக்க றாஹிலை திரும்பிப் பார்க்கிறேன் பக்கத்திற் காகச் சந்தித்தேன்.

s உங்களின் பிறப்பிடம், ஆரம்பக் கல்வி பற்றி சொல்லுங்கள்?

கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நிந்தவூரில் தான் நான் பிறந்தேன். குடும்பத்தில் மூத்த பிள்ளையான நான் நிந்தவூரில் உள்ள கமு/அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை (இன்று கமு/ அல் மதீனா மகா வித்தியாலயம்) யில் தான் எனது ஆரம்பக் கல்வியைக் கற்றேன். அந்தப் பாடசாலையில் பெரிய அரச மரம் இருக்கிறது. அந்த அரச மரத்தின் கீழ் தான் நான் முதல் முதல் அந்த மணலில் அகரம் எழுதக் கற்றேன். அப்போது அதிபராக இருந்த பாவா மாஸ்டரை என்னால் மறக்க முடியாது. (டொக்டர் ஜாபிர் அவர்களுடைய வாப்பா) எஸ்.எச்.எம். கபூர் சேர் பிறகு அதிபராக வந்தார். சரியான கண்டிப்பானவர். ஐந்தாம் வகுப்பு வரை இங்கு தான் படித்தேன். நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரியாக இருக்கின்ற சால்தீன் தான் நெருங்கிய தோழன்.

s உங்களது பால்ய காலத்து நண்பர்கள் பற்றி கூற முடியுமா?

நான் பிறந்ததிலிருந்து இன்று வரை அவர்கள் நண்பர்களாக இருக்கின்றார்கள். எனது வாசிப்பும், தேடலும் அவர்களிடம் இருந்து தான் ஆரம்பமானது. எனது பக்கத்து வீட்டுக்காரர்கள் அவர்கள். கல்முனைக் கல்விக் காரியாலய உதவியாளராக கடமையாற்றிய மீரா லெப்பை ஆதம்பாவா (மீயன்னா) அவர்களின் மகன்களான முஹம்மட் நசீர், முஹம்மட் அஷ்ரப் (புதுநகரான்), அப்துல் ஹாதி, முஹம்மட் முஸம்மில் இவர்கள் தான் எனது நண்பர்கள். இவர்களின் தந்தை மிகமிக கண்டிப்பானவர். எனது தந்தையின் கையால் பட்ட அடிகளை விட இவரிடம் பட்ட அடிகள் தான் அதிகம்.

இன்று ஒரு நல்ல நிலையில் அவரின் வாரிசுகள் இருக்கின்றார்கள். முஹம்மட் நசீர் அக்கரைப்பற்று மக்கள் வங்கி முகாமையாளராக இன்று பணியாற்றுகின்றார். நான் இன்று கலைத்தறையிலும், இலக்கியத்துறையிலும் சிறந்து விளங்குவதற்கு அடித்தளம் இட்டவர் நசீர் தான். ஆனந்த விகடன், குமுதம், கல்கண்டு, தினகரன் போன்றவை நசீரின் விருப்பத்திற்குரியவை. அவற்றை அவர் படித்த பின் எனக்குத் தருவார். இப்படித்தான் எனது வாசிப்புக்கு கால்கள் முளைக்கத் தொடங்கின. நண்பர்களின் வழிகாட்டல் என்னைப் பொறுத்த வரையில் சரியாக இருந்திருக்கிறது.

s உங்களுடைய உயர்கல்வியைப் பற்றி அறிய விரும்புகிறோம்?

நிந்தவூர் அல் அஷ்ரக் மகா வித்தியாலயத்தில்தான் ஓ.எல், ஏ.எல் படித்தேன், இந்தக் காலத்தில் கலை, இலக்கியம், கல்வி ஆகிய துறைகளில் என் கவனம் திரும்பியது. கல்வி ஆகிய துறைகளில் என் கவனம் திரும்பியது. சின்னலெப்பை சேர் அதிபராக இருந்த காலம் அது. மாணவர் நலனில் மிகவும் அக்கறையும், அன்பும் கொண்டவர். ஏ.எல் கலைப்பிரிவில் கல்வி கற்றேன். கூடிய புள்ளிகள் பெற்றதனால் பல்கலைக்கழகம் சென்றேன்.

ஏ.எல் படிக்கும் போது தான் மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் அவர்கள் எனக்கு அறிமுகமானார். உதவி அதிபராக அந்த பாடசாலைக்கு வந்தார். எனது கவிதைகளை அவரிடம் தான் முதன் முதலில் காட்டி பாராட்டும் பெற்றேன். ஒலிவாங்கியை வாங்கி நீ அறிவிப்புச் செய் என்று என்னைப் பணித்தவர் அவர். அதுமட்டுமல்ல நான் ஏ.எல் பரீட்சை எடுத்த பின் என்னைக் கொழும்புக்கு அழைத்துச் சென்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தையும் அங்குள்ள அறிவிப்பாளர்களையும், தயாரிப்பாளர்களையும் எனக்கு அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல் வானொலி நிகழ்ச்சிகளில் பங்குபற்றக்கூடிய வாய்ப்பினையும் ஏற்படுத்தித் தந்தார்.

அத்தோடு பழைய சோனகர் தெருவில் இயங்கி வந்த இக்பால் ஹோட்டலில் கணக்குப் பிள்ளை உத்தியோகமும் வாங்கித் தந்தார். என்னுடைய கலைக்கும் இலக்கியத்திற்கும் தந்தை மருதூர் ஏ. மஜீத் அவர்கள் தான். இக்பால் ஹோட்டலில் வேலை செய்து கொண்டிருக்கும் போது தான் எனக்குப் பேராதனை பல்கலைக்கழக வாய்ப்புக் கிடைத்தது. கொழும்பு வாழ்க்கையை தற்காலிகமாகப் பிரிந்தேன்.

s உங்களுடைய பல்கலைக்கழக வாழ்க்கையைப் பற்றிச் சொல்லுங்களேன்?

எனது வாழ்க்ககையில் பெரிய திருப்புமுனை அது. நல்ல நண்பர்கள், நண்பிகள் வாய்த்த சுகமான காலமது. பேராசிரியர் என் இலக்கியப் படைப்புகளைப் பார்த்து நெருக்கமான, இறுக்கமானவர்களாக மாறிய சந்தோசம் அது.

நான் பல்கலைக்கழகத்தில் முதலாம் வருட மாணவனாக இருந்த போதே “தூய்மை தெய்வீகமாகிறது” என்ற எனது முதலாவது நாவல் தினகரனில் தொடராக வெளிவந்து கொண்டிருந்தது. இந்த நாவல் பாடசாலை வாழ்க்கையை பிரதிபலித்த நாவல்.

அந்த நாவல் எல்லோரையும் கவர்ந்தது. அடுத்த அங்கம் என்ன? அடுத்த கதை என்ன? அதன் முடிவு என்ன? என்று கேட்டுக் கேட்டே எனது சிரேஷ்ட மாணவர்கள் “றாக்கிங்” பண்ணியதை இன்றும் என்னால் மறக்க முடியாது.

பேராசிரியர் எஸ். தில்லைநாதன், பேராசிரியர் பூலோகசிங்கம், பேராசிரியர் க. அருணாசலம், பேராசிரியர் சதாசிவம், பேராசிரியர் துரைமனோகரன் போன்றவர்களின் அன்பும், தொடர்பும், என்னை மேலும் மேலும் வளர்த்தது. பேராசிரியர் எஸ். தில்லைநாதன் அவர்களும், பேராசிரியர் துறைமனோகரன் அவர்களும் எனது குடும்ப ஆசான்களாக இருந்து வருகிறார்கள். எனது மனைவி கரீமாவையும் இங்கு தான் சந்தித்தேன்.

s கவிதை, சிறுகதை, நாவல் என உங்கள் இலக்கியப் பணி தொடர்கிறது. உங்கள் முதல் முயற்சி எது?

எனது எழுதுகோலை நான் நிர்வாணப்படுத்திய போது காகிதங்களுக்கு ஆடை வழங்கியது கவிதை தான். புல்லாங்குழலுக்குள் நுழையும் காற்று தேனாக வடிவதைப் போல் எழுதுகோலுக்குள் நுழையும் கவிஞனின் இதயம் பல வடிவங்கள் பெறுகின்றன. ஒரு மொட்டு அவிழ்வதை கவிதைகளில் காணலாம். இப்படிப்பட்ட கவிதை வெளியில் தான் நானும் பறந்திருக்கிறேன். மொழி ஒரு மனிதனை வானமாக மாற்றி விடுகிறது.

s சிறுகதைகள் பற்றி உங்கள் அனுபவங்கள்?

தேவை இல்லாதவற்றை அகற்றும் போது தான் சிற்பக்கலை பிறக்கிறது. ஒரு புள்ளியைச் சுற்றி வரைகின்ற கோடுகள் தான் சிறுகதை. ஒரு முடிச்சுப் போட்டு வலை பின்னுவது பொல சிறுகதை சிருஷ்டிக்கப்படுகிறது. சிறுகதை ஒரு வாக்கியத்தை இழந்தால் கூட அது சிதைந்துவிடும். அவள் தேடிய வாழ்க்கை, இது தான் என் முதல் பிரசவம் சிந்தாமணியில் வெளிவந்தது. பல நூறு சிறுகதைகள் எழுதி முடித்திருக்கிறேன். ஒரு பக்கக் கதைகள், மின்சாரக் கதைகள், மின் மினிக் கதைகள், சிலவரிக் கதைகள் என ஏராளமாக எழுதியிருக்கிறேன். இன்னுமொரு சுவாசம், எனது முதலாவது சிறுகதைத் தொகுதி. இது அரச ஊடகத்துறைக்கான விருது பெற்றது. மணிமேகலை பிரசுர வெளியீடு பேராசிரியர் துரைமனோகரன் அவர்கள் அணிந்துரை வழங்கியிருக்கிறார்.

s உங்களுடைய நூல் வெளியீடுகள் சிறப்பாக இருக்கிறது என சொல்லப்படுகிறது. இதைப்பற்றிக் கூறுங்கள்?

எனது இரண்டு நூல்கள் ஒன்றாக வெளியிடப்பட்டன. கொழும்பு மருதானை எல்பிஸ்டன் ஹோலில் தான் 2000 ஆம் ஆண்டு மே மாதம் நடந்தது. உன்னிடம் விரல்கள் கேட்கிறேன் கவிதைத் தொகுதி, இன்னுமொரு அவகாசம் பல்லாயிரக்கணக்கானவர்கள் மத்தியில் அந்த நூல் வெளியீடு இடம்பெற்றது மறக்கமுடியாத மகிழ்ச்சிகரமான விடயம்.

இந்து, இஸ்லாம் கலாச்சாரத்தோடு அது நடைபெற்றது. ஒலி, ஒளிபரப்பாளர் மதியழகன் அவர்கள் தலைமை தாங்கினார். பேராசிரியர் எஸ். தில்லைநாதனும் அவருடைய துணைவியாரும் பிரதம அதிதிகளாக கலந்து சிறப்பித்தார்கள். புரவலர் ஹாசிம் உமர் முதல் பிரதி வாங்கினார். பத்திரிகைத் துறை சார்ந்தவர்கள், ஒலி ஒளிபரப்புத்துறை சார்ந்தவர்கள், கல்வித்துறை சார்ந்தவர்கள், இலக்கியத்துறை சார்ந்தவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்திரா விழாவா!? இலக்கிய விழாவா!? என்ற தலைப்பில் தினகரன் கூட செய்தி வெளியிட்டிருந்தது. 2001 இல் கொழும்பு சுகததாச ஸ்போர்ட்ஸ் ஹோட்டலில் என் உயிரும், என் முகவரியும் நூல் வெளியீடு ஒலிபரப்பாளர் எஸ். சிவராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

2001 இல் கண்ணால் உன்னைத் தேடுகிறேன் கொழும்பில் ஹமீட் அல் ஹுஸைனி தேசிய பாடசாலையில் பிரமாண்டமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.

சின்னச் சித்திரங்களில் சூரியன், மனவனத்தில் நந்தவனம், நீ கேட்ட கவிதை, அன்புடன் பூங்காற்றுக்கு போன்ற கவிதை நூல்கள் நிந்தவூரில் பிரமாண்டமாக வெளியிட்டு வைக்கப்பட்டன. இதுவரை எட்டு நூல்களை வெளியிட்டிருக்கிறேன்.

s பல நாவல்கள் எழுதியிருக்கிaர்கள் இதைப்பற்றிய உங்கள் கருத்துக்கள் என்ன?

ஒரு பூவைப் பறித்து நுகர்தல் போலத்தான் சிறுகதை. ஒரு சோலைக்குள் நுழைந்து சோலையையே அனுபவித்தல் போலத்தான் நாவல். வாழ்க்கையின் தாக்கங்களையும், தவிப்புகளையும் வாளி வாளியாக அள்ளி இறைத்து நோக்கக் கூடியது தான் நவீனம். 19 வயதுக்குள் எனது பருவம் தீப்பற்றிய போது பனித்துளிக் குளிருக்குள் சிலிர்த்த போது அனுபவச் சிதறல்களாகவும், என் அந்தரங்கச் சப்தங்களின் பாசைகளாகவும், எனக்குள் நிகழ்ந்த யுத்தங்களின் ஓசைகளாகவும் பதிவு செய்யப்பட்டது தான் தூய்மை தெய்வீகமாகிறது, இது எனது முதல் அழகும் முதல் மொழியுமாகும். நிந்ததாசன் என்ற புனைப்பெயரில் பதிவானது. நித்தியா அவள் வித்தியாசமா? எனது இரண்டாவது சுவாசம் இது தினகரன் பக்கங்களை நிரப்பியது. ஒரு காலை புலர்கிறது, கலாசாலைக் கிளிகள், நனைகின்ற கைக்குட்டைகள் இது தினமுரசு வாரமலரில் கரீமா றாஹில் என்ற எனது மனைவியின் பெயரில் வெளியானது. பல வானம் ஒரு நிலா, ரோஜாவில் நிலா என எனது நாவல் நகர்வு தொடர்கிறது. ரோஜாவில் நிலா எனது அடுத்த வெளியீடாக வர உள்ளது.

s உங்களுடைய உரை நடை வித்தியாசமாகவும், தனித்துவமாகவும் காணப்படுகிறது. இது இயல்பாக ஏற்படுகிறதா?

நூறு குப்பி அத்தரை விட ஒரு ரோஜாவின் நறுமணம் அலாதியானது. இயல்பானது. அழகு என்பது ஒன்றின் தனித்துவம். எது மனதுக்கு மகிழ்ச்சியையும், அமைதியையும் வழங்குகிறதே அது தான் அழகின் பெறுமானம். மொழி என்பது அழகு. அந்த மொழியை அழகுபடுத்தல் என்பது அழகின் அழகு இது செயற்கையாக இருக்கும் போது காகிதப் பூவுக்கு நிகராகிவிடுகிறது. இயற்கையாகும் போது கமகம மலர்களுக்கு ஒப்பாகி விடுகிறது. எனது சிறுகதைகளை, கவிதைகளை அடையாளப்படுத்த முடியும். எனது பெயரைப் போடாமலேயே சொல் புதிது, பொருள் புதிது, சுவை புதிது எனப் புதியவை செய்தலை மொழி உள்வாங்கும் போது மொழி பூரித்துப் போகின்றது. அதன் மகிழ்ச்சிக்கும், அதன் வளர்ச்சிக்கும் ஒரு துளி நாம் வழங்குகின்ற போது மொழி புல்லாங்குழல் இசையாகி விடுகிறது. இதனால் எனது உரைநடை கனிநடையாக, தனிநடையாகத் திகழ்கிறது.

s தோழன் என்ற கலை இலக்கியச் சஞ்சிகை ஆசிரியராகவும் இருந்திருக்கிaர்கள்? இதைப்பற்றிச் சொல்ல முடியுமா?

நான் மாவனல்லையில் வசித்த காலத்தில் தோழன் சஞ்சிகையை வெளியிட்டேன். அந்தக்காலத்தில் ஒரு சஞ்சிகையை தொடராக வெளியிட வேண்டும் என்ற ஆசை அதிகம் இருந்தது. பல்கலைக்கழக பேராசிரியர்கள் தொடக்கம் இலக்கிய வாதிகள் பலர் அதில் எழுதியிருக்கிறார்கள். இருபது இதழ்கள் வெளிவந்தன. வேலைப்பழுதான் தோழனுக்கு முற்றுப்புள்ளியானது.

s நீங்கள் ஒரு சிறந்த ஒலிபரப்பாளர். இது பற்றிய உங்கள் அனுபவங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளலாமே?

எழுத்தும் கலையும் எனது இரு கண்கள். எனது குரலும், உச்சரிப்பும் சிறப்புக்குள் இருந்ததால் வர்த்தக சேவை, தென்றல் சேவைகளில் அறிவிப்பாளனாக கடமையாற்றும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. வாலிப வட்டம் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் பல வருடங்களாகப் பணியாற்றினேன். முத்து விதானம், அந்தி நேரச் சிந்து போன்ற பிரபலமான இலக்கியச் சாயல் கொண்ட நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினேன். இப்பொழுது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய சேவையான பிறை எப்.எம். வானொலியில் சிரேஷ்ட அறிவிப்பாளரக கடமையாற்றி வருகிறேன். என்னை ஒலிபரப்புத் துறைக்குள் நுழைத்த பேராசிரியர் பூலோகசிங்கம் பேராசிரியர் எஸ். தில்லைநாதன் அவர்களை என்றுமே மறக்க முடியாது. ஒலிபரப்புக் கலையைக் கற்றுத்தந்து என்னை நெறிப்படுத்திய உலக அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத், எஸ். எழில்வேந்தன், நடராஜசிவம், புவனா அக்கா ஆகியோரை நன்றியுடன் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைத்துப் பார்க்கிறேன். என் வளர்ச்சியில் கணிசமான பங்கு வகிக்கின்ற ராஜபுத்திரன் யோகராஜனின் நினைவுகள் என் நெஞ்சில் நிழலாடுகின்றன. ஒளிபரப்புத் துறையில் எனக்குக் களம் தந்து வழிபடுத்திய விஸ்வநாதன், எம். என். ராஜாவுக்கும் நன்றிக் கைதட்டல்கள்.

s உங்களுக்குக் கிடைத்த விருதுகள் பற்றிச் சொல்லுங்களேன்?

1985 ல் நிந்ததாசன் என்ற பெயர் எனக்கு எனது பாடசாலை கலாமன்றத்தினால் சூட்டப்பட்டது. 1996 இல் தமிழகத்தில் சந்தப்பா வேந்தர் பட்டமளித்து கெளரவிக்கப்பட்டது. 1997 இல் பல்துறைகளுக்கான ரத்னதீப விருது வழங்கப்பட்டது. 1998 இல் சாமஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இதே ஆண்டு மொரிசியஸ் தூதுவர் ஈஸ்வரன் ஐயா தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழக மணிவிருது வழங்கப்பட்டது. ராஜ கவி விருது, கவிவாணன் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. மதுரா ட்ரவல்ஸ் அதிபர்தமிழ்நாடு வி.கே.ரி. பாலன் அவர்களால் இலக்கிய மணி விருது வழங்கி வைக்கப்பட்டது.

s இறுதியாக ஒரு கேள்வி. உங்கள் குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

எனது மனையி நூறுல் கரீமா பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரி. இப்போது தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளராக இருக்கிறார். தமிழில் உள்ள கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். ஒரு மகள் பெயர் பாத்திமா ஹனீக்கா, வயது 16 ஆங்கில மொழியில் கல்வி கற்கிறார்.

நல்ல பாடகி, பல மொழிகளிலும் பேசும் வல்லமை கொண்டவர். சிறுகதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் (ஆங்கில மொழியில்) அகில இலங்கை, மாகாண மட்டங்களில் முதல் இடம்பெற்றிருக்கிறார்.

இவருடைய ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பு வெளிவர இருக்கிறது. இவர் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் கல்வி கற்கிறார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.