புத் 64 இல. 12

கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25

SUNDAY MARCH 18  2012

'இந்திய கிரிக்கெட்டின் பிதாமகன்'

'இந்திய கிரிக்கெட்டின் பிதாமகன்'

ஊடகங்கள் புகழாரம்

டெண்டுல்கரின் 100வது சதம்

வழமைபோல விழலுக்கிறைத்த நீரான டெண்டுல்கரின் சதம்

டெண்டுல்கர் விசிறிகள் மாத்திரமல்லாமல், உலகெங்கிலுமுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கடந்த வெள்ளியன்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். காரணம், அவர்களது சுமார் ஒரு வருட காலக் காத்திருப்புக்கு சுபமாக முற்றுப் புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த வருடம் இதே மாதத்தில், அதாவது மார்ச் 12ம் திகதி, உலகக் கிண்ணப் போட்டிகளில் தென்னாபிரிக்க அணியுடனான போட்டியின் போது தனது 99வது சதத்தை அடித்து, நூறாவது சதம் என்ற மைல் கல்லுக்கான ஏக்கத்தை கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் விதைத்து விட்டார் டெண்டுல்கர். அன்று முதல் அவர் விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் 100 சதத்தை அவர் அடித்து விடுவார் என்ற ஏக்கத்திலேயே காத்திருந்தனர் கிரிக்கெட் ரசிகர்கள். அவர்களது ஒரு வருட காலக் காத்திருப்பு வீண் போகவில்லை.

டாக்காவில் இடம்பெற்று வரும் ஆசியக் கிண்ணப் போட்டிகளில் வெள்ளியன்று நடைபெற்ற பங்களாதேஷ¤க்கு எதிரான போட்டியின் போது 114 ஓட்டங்களைப் பெற்று தனது 100 சதம் என்ற மைல் கல்லைக் கடந்துள்ளார். பங்களாதேஷ் அணிக்கு எதிராக டெண்டுல்கர் பெற்ற முதலாவது சதமும் இதுதான். 99வது சதத்தைப் பெற்றதில் இருந்து இன்று வரை டெண்டுல்கர் நல்ல Form ல் இருந்த போதும், பங்களாதேஷ¤க்கு எதிரான போட்டியின் போதே அது சாத்தியப்பட்டிருக்கிறது.

முன்னதாக மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான போட்டிகளின் போது நூறுக்கு மிகக் குறைவான ஓட்டங்கள் இருக்கையில் டெண்டுல்கர் ஆட்டமிழந்தமை நினைவிருக்கலாம். 100வது சதம் என்ற மைல்கல்லை, தங்கள் அணியுடனான போட்டிகளின் போது டெண்டுல்கர் பெற்றுவிடக் கூடாது என்பதில் அவுஸ்திரேலிய அணியினர், உறுதியாக இருந்தனர்.

அதனால் அவுஸ்திரேலியாவுடனான கிரிக்கெட் போட்டிகளின் போது டெண்டுல்கரால் 100வது சதத்தை அடிக்க முடியவில்லை. இங்கிலாந்துடனான தொடரும் கடும் விமர்சனத்துக்குள்ளானது.

டெண்டுல்கர் 100 சதத்தை அடித்து விட்டார் எனப் பலர் பெருமிதம் கொண்ட போதும் பங்களாதேஷ¤டனா என்று அங்கலாய்க்கின்றனர்.

ஆனால் இந்திய அணியினருக்கு தாம் சளைத்தவர்கள் அல்லர் என்பதை பங்களாதேஷ் மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள். வெள்ளியன்றைய போட்டியில், 290 என்ற இலக்கை லாவகமாக எட்டி பங்களாதேஷ் அணியினர் வெற்றிபெற்றனர்.

வழமை போல, டெண்டுல்கர் சதம் அடித்தால் இந்தியா தோற்கும் என்ற விமர்சனம் மெய்யாக்கப்பட்டிருக்கிறது.

நூறாவது சதத்தை பெற்ற முதலாவது கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அதனை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட முடியாமல் செய்துவிட்டது. இந்திய அணியின் தோல்வி.

பங்களாதேஷின் ஷேர் ஈ - பங்களா கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற போட்டிகளில் ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 289 ஓட்டங்களைப் பெற்றது. (டெண்டுல்கர் -114, விராட் கோஹ்லி- 66, ரைனா- 51) பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 49.2 ஓவர்களில் 293 ஓட்டங்களைப் பெற்று ( தமிம் இக்பால் –70, ஜஹாருல் இஸ்லாம்-53, ஷகிப் அல் ஹசன்- 49) வெற்றிபெற்றது. 2007ம் ஆண்டின் உலகக் கிண்ணப் போட்டிகளின் போது பங்களாதேஷ் அணி, இந்தியாவை தோற்கடித்து போட்டிகளில் இருந்தே ஓரங்கட்டியது. இப்போது மீண்டும் இந்தியாவைத் தோற்கடித்து, இன்றைய பாகிஸ்தானுடனான ஆசியக் கிண்ணப் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றேயாகவேண்டும் என்ற நிலையைத் தோற்றுவித்துள்ளது.

இந்தியர்கள் ஒவ்வொருவரும் தாம் இந்தியர்களாக உணரும் தருணம். பாகிஸ்தானுடன் கிரிக்கெட்டில் மோதும் போதுதான் ஏற்படும் என்பதால், இந்தியா தன் உச்ச திறமையை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். இந்திய அணி மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற விமர்சனங்கள் கடந்த சில காலமாக இருந்து வருகிறது.

கடந்த உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியிலேயே டெண்டுல்கர் பதவி விலகியிருக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் தலைவர் கபில்தேவ் காட்டமாக விமர்சித்திருந்தார்.

இந்திய அணியில் 40 வயதை அண்மிக்கும் வீரர்கள் சிலர் இருப்பதால், அது அணியின் செயற்பாடுகளை மந்திப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால், டெண்டுல்கர் வெள்ளியன்று தனது 100வது சதத்தை பூர்த்தி செய்ததையடுத்து,

விமர்சனங்கள் தலைகீழாக மாறியுள்ளது. டெண்டுல்கர் இன்னும் சில வருடங்கள் சர்வதேச கிரிக்கெட் விளையாடலாம் என்று கங்குலி புகழாரம் சூட்டியிருக்கிறார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிளைப் லொயிட் துடுப்பாட்டத்தின் கடவுள் என்று சச்சினைப் புகழ்ந்திருக்கிறார். இந்திய பாராளுமன்றத்தில் பட்ஜெட் விவாதம் காரசாரமாக நடந்த போதிலும் பிரதமர் மன்மோகன் சிங் நாட்டுக்கு சச்சின் பெருமை சேர்த்துள்ளதாக அறிவித்துள்ளார். என்னதான் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், சச்சின் இன்னமும் சிறிதுகாலம் இந்திய அணியில் விளையாடப் போவதென்னவோ உண்மைதான்.

சச்சின்

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.