புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.
ஷபாடுபடும் மலையக மகளிருக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்''

ஷபாடுபடும் மலையக மகளிருக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்''

மனம் விட்டு பேசுகிறார் திருமதி சாந்தினி சந்திரசேகரன் நேர்காணல்:

மலையக அரசியலில் அமரர் பெ. சந்திரசேகரனுக்கென தனியிடமிருக்கிறது. மலையக மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த அவர் எம்மிடையே இல்லாவிட்டாலும் அந்த மக்கள் மத்தியில் இலட்சிய வடிவில் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அவரது இழப்பை எவராலும் ஈடு செய்ய முடியாவிட்டாலும் விட்டுச் சென்ற பணியை தொடர்ந்து முன்னெடுக்க அவரது மனைவி சாந்தினி சந்திரசேகரன் மலையக மக்கள் முன்னணியின் தலைவியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மலையக மக்கள் முன்னணியின் தலைவி சாந்தினி சந்திரசேகரன் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மலையக மக்கள் முன்னணியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் மண்வெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார். தனது தந்தை டி¨க்கோயா தரவளை தோட்டத்தில் ஒரு தோட்ட உத்தியோகத்தராக இருந்ததால் தொழிலாளர்களின் அத்தனை பிரச்சினைகளையும் அறிந்தவர் அவர்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டவர்.

அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் உயர்தரம் வரை கற்ற இவர். ஆசிரியராகி தரவளை தோட்டப் பாடசாலை, நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயம், தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம், கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி ஆகியவற்றில் 20 வருடங்களாக பணிபுரிந்திருப்பதால் எதிர்கால சந்ததியினரை வழிநடத்த வேண்டிய பொறுப்பும் தெளிவான நோக்கமும் இவருக்கு இயல்பாகிப்போன விஷங்கள். ஒரு ஆசிரியையாக பணி புரிந்ததால் சமூகத்தின் மீதான அக்கறைமிக்க ஒரு அக்கறைமிக்க ஒரு பார்வை இவரிடமிருக்கிறது. அரசியலுக்கு புதிது என்றாலும் தன் கணவரின் இலட்சியங்களை நிறைவேற்றவும் அவர் விட்ட இடத்திலிருந்து மலையக மக்களுக்காக குறிப்பாக மலையகப் பெருந்தோட்டப் பெண்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

மலையக தொழிற்சங்க அரசியல் வரலாற்றில் பலமானதொரு தொழிற்சங்கத்திற்கு தலைவியாக ஒரு பெண்மணி இப்போது பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கியிருக்கிறார்.

தேர்தல் பிரசாரப் பணிகளில் மிகவும் மும்முரமாக இருந்த அவரை தலவாக்கலையிலுள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் சந்தித்தோம்.

கணவரின் மறைவின் துயரத்திலிருந்து மீள்வதற்கிடையில் சமூகப் பொறுப்பை சுமந்து கொண்டிருக்கிaர்கள். ஒரு குடும்பப் பெண்ணாக இருந்து திடீரென கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிaர்கள். அத்துடன் பொதுத் தேர்தலும் வந்துவிட்டது. இதற்கு எப்படி முகங்கொடுக்கிaர்கள் எனக் கேட்டோம்

ஜனாதிபதித் தேர்தலின் போது மிகவும் முக்கியமானதொரு காலகட்டத்தில் எனது கணவர் எம்மைவிட்டுப் பிரிந்து விட்டார். துயரம் ஒருபுறம் என்றால் மறைந்த தலைவரின் கொள்கைகளுக்காக சட்டென சுதாரித்துக் கொள்ள வேண்டிய ஒரு இக்கட்டான நிலைமை. கட்சியில் ஒரு தலைமைப் பதவி என்பதை விட அக்கட்சியின் சிறந்த கொள்கைகளைக் கட்டிக்காக்க வேண்டிய அவசியம் இருந்தது. ஏனெனில் அவர் மக்களால் நேசிக்கப்பட்டத் தலைவராக இருந்தார். கணவரின் அரசியலில் நான் நேரடியாக அல்லது முழுமையான பங்களிப்பை கடந்த காலங்களில் செய்யாவிட்டாலும் கூட அவற்றை நன்கு அவதானித்திருக்கிறேன். அவரைச் சந்திக்க வரும் மக்களுடன் பேசி அவர்களின் பிரச்சினைகளை செவிமடுத்திருக்கிறேன். அவர் சிறைக்குச் சென்ற போது ஏற்பட்டதைப் போன்றதொரு நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது. அப்போது நடைபெற்ற தேர்தலில் அவரது வெற்றிக்காக உழைத்த அனுபவம், மலையக மக்களும், கட்சி உறுப்பிபனர்களும் கொடுத்த ஊக்கம் நான் அரசியலில் இறங்கக் காரணமாய் அமைந்திருக்கிறது.

அவரது மரணத்தின் போது மலையக மக்கள் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் அடைந்த துன்பங்களையும், விட்ட கண்ணீரையும் நேரடியாக பார்த்தேன். இறுதியாக ஒரு முறை பார்த்துவிட வேண்டும் என துடித்ததையும் பார்த்த போது அவர் மலையக மக்கள் மீது எந்தளவுக்கு கரிசனை கொண்டிருந்தார் என்பது தெரிந்தது. அரசியலுக்காக நேர்மையான தலைமைக்¡க அவரை நம்பிய சமூகம் தனித்துவிடப்படக்கூடாது என்பதை உணர்ந்தேன். அவரின் கொள்கைகளை உயிர்வாழ வைக்க வேண்டியிருக்கிறது. அவர் கொண்டிருந்த சமூகப் பார்வையும் நோக்கங்களும் வெற்றிடமாகிவிடக்கூடாது. இதன் காரணமாகவே கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்.

கேள்வி: பொதுத் தேர்தலில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு பற்றி சுருக்கமாக கூறுங்கள்?

பதில்: எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்து வெறுமனே அரசாங்கத்தை விமர்சித்துக் கொண்டிருப்பது மிகவும் எளிதான விடயம் எமது தனித்துவத்தை இழந்து விடாமல் அரசாங்கத்துடன் இணைந்து எமது சமூகத்திற்கு சேவையாற்றுவதென்பது இன்னொரு வழி எமது ஒரு வாக்கினால் சந்திரிகா அம்மையாரின் அரசாங்கத்தை அமைத்த காலத்திலிருந்து இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலம் வரையில் எமது சமூகத்திற்கு பல்வேறு வசதிகளை பெற்றுக் கொடுத்திருக்கிறோம்.

தோட்ட வீடமைப்பு, மின்சாரம், பாதை அமைப்பு, மலையக சமூக கலாசார விடயங்களில் கூடிய கவனமெடுத்திருக்கிறோம். தோட்ட ஆலயங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. படித்த மலையக இளைஞர் யுவதிகளுக்கு தமிழ் கிராம சேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அரச துறைகளில் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்திருக்றோம். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆட்சியில் மலையகம் பெரும் மாற்றம் கண்டிருக்கிறது என்றே கூற வேண்டும் ஐ.தே. கட்சியின் ஆட்சிக்காலத்தில் மலையக மக்கள் பலவிதத்திலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய அமைப்புகள் இன்றைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேவையாற்றும் போது அடிப்படை வசதிகள் எதுவுமில்லாத எமது சமூகத்திற்காக நாம் ஏன் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படக்கூடாது? நான் எந்தப் பொய்யையும் கூறி மக்களிடம் வாக்கு கேட்கவில்லை. பொய்யான வாக்குறுதிகளை வழங்கவில்லை. எனது கணவரின் வழியில் அரசியல் செய்ய திடசங்கற்பம் பூண்டிருக்கிறேன். எனது அரசியல் பிரவேசத்தை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

எனது கணவர் ஆரம்பித்த பல வேலைத்திட்டங்களை நான் முன்னெடுத்துச் செல்கிறேன். அவரால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்த போது நானே பல தடவைகள் இதெல்லாம் உண்மையா என அவரிடம் கேட்டிருக்கிறேன். அவர் இறந்த பின்னர் அந் இடங்களுக்குச் சென்று பார்த்த போதுதான் அவர் இந்த மக்களுக்காக ஆற்றிய சேவைகள் தெரியவந்தன. அவரால் திறக்கப்பட்ட சனசமூக நிலையங்கள் நல்ல பலனைத் தந்திருக்கிறது. அவரால் கட்டி முடிக்கப்பட்ட பல கட்டடங்கள் இப்போது திறக்கப்பட்டு வருகின்றன. அவரது சேவையைத் தொடர மக்கள் எனக்கொரு சந்தர்ப்பத்தை தரவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி: இ.தொ.காவுடன் இணைந்து ஒரு அமைப்பை ஏற்படுத்தி இத்தேர்தலில் போட்டியிருக்கலாமே?

பதில்: எமது கட்சிக்கென தனித்துவம் இருக்கிறது கொள்கைகள் இருக்கின்றன. எனது கணவர் இருந்திருந்தாலும் இத்தகைய சுமுகமானமுடிவையே எடுத்திருப்பார். அவர்களுடன் இணைந்து செயற்படுவதை விட ஒரு உறவை வைத்திருக்கிறோம். மலைளக மக்களுக்காக அவர்களும் சேவை செய்து வருகிறார்கள். நாங்களும் செய்து வருகிறோம். கட்சியின் கொள்கைகள், எதிர்கால வேலைத்திட்டங்கள் பற்றி பிரசாரம் செய்து வருகிறோம். நான் ஒரு ஆசிரியையாக இருந்தேன். தேர்தல் பிரசாரங்களில் யாரையும் எதிர்க்காமல், தாக்காமல் எவ்வித பிரச்சினைகளுமின்றி ஈடுபட்டு வருகிறோம். வருவது பாராளுமன்றத் தேர்தல். எனவே இதில் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளைப் பெறுத்தே மலையக மக்களின் எதிர்காலமும் அமையும். நல்ல ஆரோக்கியமான பிரதிநிதிகளைத் தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பினால் மலையகத்தில் எந்தப் பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை. எனவே மக்கள் நன்கு சிந்தித்து மலையக அபிவிருத்தியில் மக்களுடன் இருக்கும் எமக்கு ஆதரவு தரவேண்டும்.

நாம் மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்குவதை விடவும் அவர்களுக்கு சமூக உணர்வு சமூக ஒற்றுமை தொடர்பான விளக்கத்தை கொடுப்பதில் கவனம் செலுத்துகின்றேன். மக்களை சுயமாக சிந்தித்து முடிவெடுக்க விடவேண்டும்.

கேள்வி: மலையகப் பெண்கள் பற்றிய உங்கள் பார்வை எப்படியிருக்கிறது? அவர்களின் குறைபாடுகள் என்ன?

பதில்: மலையகப் பெண்கள் என்ற அடையாளத்தில் பெருந்தோட்ட பெண்களின் பிரச்சினைகள் வெறுமனே சம்பளத்துடனும் தொழில் சார்ந்ததாகவுமே பார்க்கப்பட்டு வருகிறது. இதற்கு அப்பால் வெளிநாடுகளில் தொழில்புரியும் பெண்கள், மலையகத்திற்கு வெளியே வீடுகளில், ஆடைத் தொழிற்சாலைகளில் தொழில் புரியும் பெண்கள், படித்துவிட்டு வேலை வாய்ப்புக்கள் எதுவும் இல்லாமல் வீடுகளில் இருக்கும் பெண்கள், வீட்டு வேலைகளுக்காக அனுப்பப்படும் சிறுமிகள் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாதல் என பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.

அதற்கப்பால் மலையகப் பெருந்தோட்டத்துறை பெண்கள் போசாக்கின்மை, குறை பிரசவம், பெண்களின் நோய்களுக்கான சிகிச்சைகளை பெறமுடியாத நிலை, போதைக்கு அடிமையான கணவர்களின் துன்புறுத்தல்களுக்கு ஆளாகுதல் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கிறார்கள்.

பெருந்தோட்டப் பெண்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் தம்மைப்பற்றிச் சந்திப்பதற்கான நிலையில் இல்லையென்றே கூறவேண்டும். தொழிலின் தன்மையானது அவர்களை ஒரு வட்டத்திற்குள்ளேயே வைத்திருக்கிறது. அதாவது தமது குடும்பச் சூழலை மட்டுமே சிந்திக்கிறார்கள். இந்த வட்டத்துக்கு அப்பால் சென்று செயற்படுவது குறைவாக காணப்படுகிறது.

கடும் உழைப்பாளிகளாக இருக்கும் அவர்கள் ஏனைய துறைகளில் வேலை செய்யும் பெண்களைப் போல விடுமுறைகளை எடுத்துக் கொள்ள முடியாது. பிரசவ விடுமுறை, விடுமுறைக்கால சம்பளம் எதுவும் இல்லாத நிலையில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

எனவே மலையகப் பெண்கள் வெளியில் வரவேண்டும். அவ்வாறு வந்தால் மலையகத்தில் மாற்றம் ஏற்படும். அவர்களுக்கு இதனை புரிய வைக்க வேண்டும்.

கேள்வி: இந்தப் புரிதலுக்கான கருவியாக நீங்கள் இருப்பீர்களா?

பதில்: நிச்சயமாக இருப்பேன். அதற்கான சந்தர்ப்பத்தை அப் பெண்கள் எனக்கு பெற்றுத்தர வேண்டும். அதன் மூலம் அவர்களுக்காக செயற்படுவேன். இப்போது கருத்தரங்குகள், செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். காலப்போக்கில் மலையகப் பெண்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இவர்களைப் பற்றி பாராளுமன்றத்தில் என்னால் பேசக்கூடியதாக இருக்கும்.

மலையகத்தில் உள்ள அனைத்து அமைப்புகளும், மலையக பெண்களின் உரிமைகளுக்காக, அவர்களின் பிரச்சினைகளுக்காக பொதுவான வேலைத்திட்டமொன்றை முன்வைத்து செயற்பட வேண்டும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.