புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.
பாராளுமன்றத் தேர்தலில் 25 இலட்சம் வாக்குகளால் வெற்றி பெறுவோம்

பாராளுமன்றத் தேர்தலில் 25 இலட்சம் வாக்குகளால் வெற்றி பெறுவோம்

கேள்வி:- எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான உங்களது பார்வையைச் சுருக்கமாகக் கூற முடியுமா?

பதில்:- ஆம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ம் ஆண்டில் மஹிந்த சிந்தனையில் அளித்த வாக்குறுதிகளை குறுகிய காலத்தில் நிறைவேற்றியுள்ளார். குறிப்பாக சுமார் மூன்று தசாப்த காலம் இந்நாட்டுக்குப் பெரும் தலையிடியாக இருந்த பயங்கரவாதம் ஒழித்துக் கட்டப்பட்டுள்ளது. அச்சம் பீதியின்றி வாழும் சூழல் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இதேநேரம் நாட்டில் பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஒரே நேரத்தில் ஐந்து துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. புதிதாக சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படுகின்றது. பல வருடங்களாக ஆரம்பிக்கப்படாதிருந்த நுரைச்சோலை, மேல் கொத்மலை, கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி வேலைத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பிரதான நகர்களின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவென மேம்பாலங்கள் அமைக்கப்படுகின்றன. நெடுஞ்சாலைகளும், கிராமிய பாதைகளும் அபிவிருத்தி செய்யப்படுகின்றன.

ஒரு நாட்டின் துரித அபிவிருத்திக்குத் தேவையான சகல உட்கட்டமைப்பு வசதிகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் குறுகிய காலத்தில் மேம்படுத்தியுள்ளது. இதன் பயனாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் 18 இலட்சம் மேலதிக வாக்குகளால் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். அவர்தான் அடுத்துவரும் ஏழு வருடங்களுக்கு இந்நாட்டின் ஜனாதிபதியாக இருப்பார்.

இவ்வாறான சூழ்நிலையில் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலிலும் ஐ. ம. சு. முன்னணியே அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இதில் ஐயமில்லை.

ஏனெனில் ஜனாதிபதி பதவி ஒரு கட்சியிடமும் பாராளுமன்ற ஆட்சி அதிகாரம் வேறு கட்சியிடமும் இருந்தால் நாட்டில் எதுவிதமான அபிவிருத்தியுமே நடைபெறாது. இதற்கு 2002 முதல் 2004 வரையான காலப்பகுதி நல்ல உதாரணம். இதனை மக்கள் நன்கறிந்திருக்கிறார்கள். அக்காலப் பகுதியில் பயங்கரவாதம் தான் வளர்ச்சி பெற்றது. அவ்வாறான நிலைமை மீண்டும் ஏற்பட நாட்டு மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள்.

அதேநேரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் நல்ல அனுபவம் மிக்கவர். அவர் மக்களின் குரலுக்குச் செவி சாய்ப்பவர். பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய ஆளுமையும் அவரிடம் இருக்கின்றது. ஆகவே ஐ. ம. சு. முன்னணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதியானதாகும். இதனை எதிரணியினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதனாலேயே அவர்கள் ஐ. ம. சு.மு. மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெற இடமளியோம் என்கின்றனர்.

கேள்வி:- இத் தேர்தலில் ஐ. ம. சு. மு மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கோருவது எதற்காக...?

பதில்:- இந்நாட்டிலுள்ள பிரதான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுவதற்குப் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் அவசியம். அதற்காகவே நாம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை இத்தேர்தலில் கேட்கின்றோம். ஆனால் எதிரணியினர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதாகக் கூறி கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்களிடம் வாக்குக் கேட்டனர். நிறைவேற்று ஜனாதிபதி முறையை, ஜனாதிபதியால் ஒரு போதும் ஒழிக்க முடியாது. இது அரசியல் யாப்பில் இருக்கும் ஒருவிடயம். ஆகவே எதிரணியினர் குறிப்பிட்ட நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கும் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவை.

மேலும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு 13வது திருத்தத்திலும் கூடுதலான தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கும் 17வது திருத்தத்திலுள்ள குறைபாடுகளை நிவர்த்திப்பதற்கும் தற்போதைய தேர்தல் முறையை மாற்றி நாட்டுக்குப் பொருத்தமான தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்கும் அரசியல் யாப்பில் திருத்தம் செய்ய வேண்டும். இதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் மிகவும் அவசியம்.

மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் வலுவானதாகவும் ஸ்தீரமானதாகவும் அரசாங்கம் அமையும் போது நீண்ட கால, குறுகிய அபிவிருத்தித் திட்டங்களை எவ்விதமான தடங்கல்களுமின்றி முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும். அத்தோடு எந்தச் சக்தியினது நிபந்தனைக்கும் கட்டுப்பட வேண்டிய தேவையும் அரசுக்கு இராது. அதனால்தான் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கோருகின்றோம். அது கிடைக்கும் என்ற முழுமையான நம்பிக்கையும் எம்மிடமுள்ளது.

கேள்வி:- கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களில் ஐ. ம. சு. முன்னணி அபேட்சகர் பெற்ற வாக்குகளில் வீழ்ச்சி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறதே...

பதில்:- இக்கூற்றை ஏற்றுக்கொள்ள நான் தயாரில்லை. 2005ம்ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக் கொண்ட வாக்குகளை விடவும் 2010ம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அப்பிரதேசங்களில் ஜனாதிபதி அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுள்ளார். இதனை எவரும் மறுக்க முடியாது.

மஹிந்த சிந்தனையின் கீழ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டு வரும் வேலைத் திட்டங்களின் பயனாக தமிழ், முஸ்லிம் தலைவர்கள் பலர் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றனர்.

அப்பிரதேசங்களில் பலவிதமான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் காரணமாக கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக் கொண்ட வாக்குகள் அதிகரித்துள்ளன.

இப்போது முன்னாள் எம். பி.க்களான எம். எம். நெளஷாத், தங்கேஸ்வரி கதிர்காமர், சிவநாதன் கிஷோர், எஸ். கனகரட்ணம் போன்றோர் ஐ. ம. சு. முன்னணியுடன் இணைந்துள்ளனர்.

ஆகவே ஜனாதிபதித் தேர்தலை விடவும், பொதுத் தேர்தலில் ஐ. ம. சு. மு. அதிகப்படியான வாக்குகளைப்பெறும். குறிப்பாக பாராளுமன்றத் தேர்தலில் 25 இலட்சம் மேலதிக வாக்குகளால் நாம் வெற்றி பெறுவோம்.

கேள்வி:- தேசிய இனப் பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே உங்களது நிலைப்பாடாகும். இருப்பினும் உங்களது நிலைப்பாட்டுக்கு முரணான அபிப்பிராயத்தை கொண்ட அரசியல் கட்சிகளும் ஐ. ம. சு. முன்னணியில் இணைந்திருக்கின்றனவே...

பதில்:- தேசிய இனப் பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில்தான் அன்றும் இன்றும் நானிருக்கிறேன். என்றாலும் வெவ்வேறு நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் ஐ. ம. சு. மு. யில் இணைந்திருப்பதை நான் மறுக்கவில்லை. இது ஐ. ம. சு. மு. யில் மாத்திரம் இடம் பெறவில்லை.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அதிகாரப் பகிர்வுக்கு அதரவான நிலைப்பாட்டைக் கொண்ட ஐ. தே. க. வினரும் எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட ஜே. வி. பியினரும் ஒன்றாக இணைந்து செயற்பட்டார்கள். இந்நாட்டு தமிழர்கள் இந்தியாவுக்கும், முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கும் செல்ல வேண்டும் என்று கூறிய சரத் பொன்சேகாவுடன் இவர்கள் ஒன்றாக இருந்தார்கள்.

இவரது கூற்றுக்கு அரசுக்குள் இருந்து நான் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தேன். ஆனால் அப்படியான எண்ணம் கொண்டவருடன் த. தே. கூ. தலைவர் இரா சம்பந்தனும் ஸ்ரீ ல. மு. கா. தலைவர் ரவூப் ஹக்கீமும் இணைந்து செயற்பட்டா¡ர்கள் தானே.

அவ்வாறுதான் ஐ. ம. சு. முன்னணியிலும் ஜா. ஹெ. உ, தேசிய சுதந்திர முன்னணி போன்ற கட்சிகள் தேசியப் பிரச்சினைக்கு 13வது திருத்தத்தை அடிப்படையாக வைத்து தீர்வு காண விரும்புவதாக இல்லை. மேலும் சிலர் இதற்கு அரைவாசி விருப்பம் தெரிவிப்பவர்களாக உள்ளனர்.

இன்னும் இ. தொ. கா., ம. ம. மு, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, எல். எஸ். எஸ். பி. போன்ற கட்சிகள் இப்பிரச்சினையை 13வது திருத்தத்தின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் முழுமையான விருப்பம் கொண்டுள்ளன.

ஆனால் இப்பிரச்சினையை ஒற்றையாட்சியின் கீழ் ஐக்கிய இலங்கைக்குள் 13வது திருத்தத்தின் அடிப்படையில் தீர்த்து வைக்க வேண்டுமென்பதே அரசின் கொள்ளையாகும். இதனை ஜனாதிபதியும் தெளிவாகக் கூறியுள்ளார்.

ஆகவே இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக இலங்கைக்கே பொருத்தான மாதிரியொன்றை நாமெல்லோரும் ஒன்றுபட்டுத் தேட வேண்டும். இம்முயற்சியில் எதிர்நிலைப்பாட்டைக் கொண்டிருப்பவர்களையும், ஐ.தே. க, த. தே. கூ. , ஸ்ரீல. மு. கா. போன்ற அரசியல் கட்சிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும். அப்போது ஒற்றையாட்சியின் கீழ் ஐக்கிய இலங்கைக்குள் இலங்கைக்கே பொருத்தமான தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம். அது 13வது திருத்தத்திற்கு மேலாகவும் செல்லலாம்.

தமிழ் மக்களுக்குள்ள பிரச்சினை தான் பயங்கரவாதமாக வெளிப்பட்டது. அப்பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டோம். ஆனால் அப்பிரச்சினைக்கான காரணத்திற்கு தீர்வு தேட வேண்டும். இல்லாவிட்டால் பயங்கரவாதத்தை ஒழித்ததில் பயனில்லாது போய் விடும்.

கேள்வி:- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் தான் மலையகப் பெருந்தோட்ட மக்களுக்குப் பாரியளவு சேவைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. மலையகப் பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதி என்ற வகையில் இது தொடர்பாக உங்கள் அபிப்பிராயம் என்ன?

பதில்:- இதில் இரு கருத்துக்கு இடமிருக்க முடியாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்நாட்டின் ஆட்சித் தலைவராக வர முன்னர் மலையக பெருந்தோட்ட அரசியல் தலைவர்களுக்கு மலையகத்துடன் தொடர்பான அமைச்சுக்களும், பிரதியமைச்சுக்களும் தான் வழங்கப்பட்டன.

இது ஒரு பாராம்பரியமாக இருந்தது. இந்நிலைமையை மாற்றியமைத்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான். மலையகப் பெருந்தோட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு மலையகத்துடன் தொடர்பான அமைச்சுப் பதவிகளை மாத்திரமல்லாமல் கல்வி, சுகாதாரம், தேசிய ஒருங்கிணைப்பு போன்ற தேசிய அமைச்சுக்களின் பிரதியமைச்சு பதவிகளையும் வழங்கினார்.

மலையகப் பெருந்தோட்ட மக்களும் இந்நாட்டு பிரஜைகளே. அதனால் ஏனைய பிரதேச மக்கள் பெற்றுக் கொள்ளும் சகல வசதி வாய்ப்புகளையும் மலையகப் பெருந்தோட்ட மக்களும் பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்விடயத்தில் ஜனாதிபதி தெளிவான நிலைப்பாட்டில் இருக்கின்றார்.

மலையகப் பெருந்தோட்டப் பாடசாலைகளில் நீண்ட காலமாக நிலவிய ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் வகையில் சுமார் 3700 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கினார். இதனூடாக மலையகப் பெருந்தோட்ட மக்களின் பிள்ளைகளுக்குத் தரமான கல்வி கிடைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

இது மாத்திரமல்லாமல் மலையகப் பெருந்தோட்ட மக்கள் அரச அலுவலகங்களில் எதிர்கொள்ளும் மொழி ரீதியான அசெளகரியங்களைப் போக்கவும், அவர்கள் தமது காரியங்களை உடனுக்குடன் செய்து கொள்ளுவதற்கும் ஏற்றவகையில் தொடர்பாடல் உதவியாளர் நியமனங்களையும் ஜனாதிபதி வழங்கியுள்ளார். தமிழ் பேசுபவர்களே இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 2008ம் ஆண்டில் தேயிலை கைத்தொழில்துறை பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுத்தது. தேயிலை விலை வீழ்ச்சி அடைந்தது. இவ்விடயத்தில் விஷேட கவனம் செலுத்திய ஜனாதிபதி தேயிலை தொழிற்துறை பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.

மகநெகும, கமநெகும திட்டங்களின் ஊடாக முழு நாட்டிலும் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கின்றது. இத் திட்டங்களின் நன்மைகள் மலையகப் பெருந்தோட்டங்களுக்குக் கிடைக்கவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்பாடு செய்தார்.

கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துவரும் ஜனாதிபதி பெருந்தோட்டப் பிரதேசங்களையும் மறந்து விடவில்லை. அங்கு வாழுகின்ற மக்களும் அவர்களது எதிர்கால சந்ததியினரும் மேம்படுவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார்.

தோட்ட மக்களின் குடியிருப்புக்கள் லயன் அறைகள் என்று தான் நீண்டகாலமாக அழைக்கப்பட்டு வந்தன. தற்போது அப்பெயர் ‘தோட்ட சேவையாளர் வீடு’ என மாற்றப்பட்டுள்ளது. அவர்களது இருப்பிட வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

நான் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக சுமார் ஒன்றரை மாதங்கள் கடமையாற்றினேன். இக்காலப் பகுதியில் மலையகப் பெருந்தோட்ட மக்களின் பிள்ளைகளுக்கென ஹட்டனில் பல்கலைக்கழகமொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற ‘கி!:(யி(கி முன்வைத்தேன்.

அந்த யோசனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அடுத்துவரும் ஏழாண்டு காலப் பகுதியில் செயலுருப்படுத்தப்படும். இதில் எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது.

கேள்வி:- இறுதியாக நீங்கள் கூறவிரும்புவதென்ன?

பதில்:- தமிழ் பேசும் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை முழுமையாக நம்ப வேண்டும். அவரது கரங்களைப் பலப்படுத்த வேண்டும். இந்தியா, மலேசியா உட்பட உலகின் பல நாடுகளில் தமிழ் மொழி பேசப்பட்ட போதிலும் அம்மொழியில் ஐக்கியநாடுகள் சபையில் உரையாற்றி வரலாற்று சாதனைபடைத்தவர் எமது ஜனாதிபதிதான்.

அவர் தமிழ் மொழியைக் கற்கின்றார். தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளையும், தேவைகளையும் அவர்களது மொழியிலேயே கேட்டறிந்து கொள்ளவே அவர் பெரிதும் விரும்புகின்றார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் அதிக அன்பு கொண்டவர். மக்களின் குறை நிறைகளைக் கேட்டறியக் கூடியவர். அவரால் தான் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்துக் கட்ட முடிந்தது.

பல வருடங்களாகக் காலந்தாழ்த்தப்பட்ட நுரைச்சோலை, மேல் கொத்மலை மின்னுற்பத்தித் திட்டங்களையும் அவராலேயே ஆரம்பிக்க முடிந்தது.

இந்நாட்டின் தேசிய இனப் பிரச்சினைக்கும் இந்த ஜனாதிபதியால் மாத்திரம் தான் தீர்வு காண முடியும். இவர் கூறுபவற்றை இந்நாட்டு சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளுவார்கள். ஹெல உருமயவின் தீவிர எதிர்ப்பு நிலைப்பாட்டிலும் மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய சக்தியும் ஜனாதிபதியிடம்தான் இருக்கின்றது.

சுழல் பந்த வீச்சாளர் முத்தையா முரளிதரன் போன்றவர்கள் எவ்வாறு அடிக்கடி உருவாக மாட்டார்களோ அதேபோன்று அரசியலிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்ற தலைவர்கள் உருவாக மாட்டார்கள். அதனால் இந்த ஜனாதிபதியின் தலைமையை பலப்படுத்துவது ஒவ்வொருவரதும் பொறுப்பாகும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.