புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.
ஷஇ.தொ.கா மக்களை மனதில் இருத்தி இயங்கும் பேரியக்கம்; வாய்ச் சவாடல்கள் எமக்கு பொருட்டல்ல''

ஷஇ.தொ.கா மக்களை மனதில் இருத்தி இயங்கும் பேரியக்கம்; வாய்ச் சவாடல்கள் எமக்கு பொருட்டல்ல''

மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சரும் நுவரெலிய மாவட்ட ஐ. ம. சு மு வேட்பாளருமான வீ. இராதாகிருஷ்ணன் மனம் திறக்கிறார்

உரையாடியவர்:

அருள் சத்தியநாதன்

“மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஐ. தே. க. கூட்டணி நுவரெலியாவில் செல்வாக்கு செலுத்தியது உண்மைதான். அத் தேர்தலில் 45 ஆயிரம் வாக்குகளைப் பெற்றதனால் இப்பொதுத் தேர்தலிலும் தாமே வெற்றிபெறுவோம் என நுவரெலியா மாவட்டத்தில் வெட்பாளர்களாகக் களமிறங்கியிருக்கும் சிலர் மனப்பால் குடிக்கலாம். ஆனால் நிலைமைகள் மாறிவிட்டன. இம்முறை இவர்கள் மண் கெளவத்தான் போகிறார்கள், நீங்கள் பார்த்துக் கொண்டே இருங்களேன்...”

கடந்த வாரம் ஒரு குளிர் மிகுந்த இரவில் மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சின் விருந்தினர் இல்லத்தில், பகலெல்லாம் தேர்தல் பிரசாரம், சந்திப்புகள் எனக் களைத்துப் போயிருந்த மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணனை சந்தித்த போது எம்மிடம் இப்படிக் கூறினார். அமைச்சரை பகல் பொழுதில் சந்திப்பது சிரமம் என்பதால்தான் சந்திப்பு இரவில் வைத்துக் கொள்ளப்பட்டது.

இரவு பத்து மணியைத் தாண்டிய பின்னரும் கூட அதே உற்சாகம், மலர்ந்த முகத்துடன் உரையாடலைத் தொடரும் சித்தத்துடன்தான் காணப்பட்டார் இராதாகிருஷ்ணன். அரசியலில் இறங்கினால் சளைக்கவும் கூடாது களைத்தலும் அகாது என்பார்கள். இந்தத் தன்மைகளை இராதாகிருஷ்ணனிடம் காண முடிகிறது.

அதெப்படி அவ்வளவு நிச்சயமாகச் சொல்கிaர்கள்?

காரணம் இருக்கிறது. அன்று மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றபோது நிலைமைகள் வேறு. அது போர் உச்சகட்டத்தில் இருந்த பொழுது, தமிழர்கள் பல துன்பங்களையும் இழப்புகளையும் வன்னியில் சந்தித்துக் கொண்டிருந்த நேரம் அது.

இயல்பாகவே தமிழர்களுக்கு இன உணர்வு மேலோங்கி இருந்திருக்கும். தப்பில்லை, மேலும் ஏற்கனவே ஐ. தே. க.வுக்கு வாக்களிக்கப் பழகியிருக்கும் மலையகத் தமிழர்கள் இன உணர்வும் சேர்ந்துகொள்ள, ஐ. தே. க. ஆதரவு வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர்.

ஆனால் இப்போது அந்த நிலை மாறிவிட்டது. யுத்தம் முடிந்து விட்டது. அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு மஹிந்த ராஜபக்ஷவே ஜனாதிபதியாக வீற்றிருக்கப் போகிறார். யுத்தம் முடிந்ததும் நாட்டை அபிவிருத்தி செய்தாக வேண்டும். அடுத்ததாக இதைத்தான் அரசாங்கம் செய்யப் போகிறது.

 நாட்டின் அபிவிருத்தி என்றால் அதன் உள்ளார்ந்த பொருள் மக்கள் அபிவிருத்தி, சமூக அபிவிருத்தி, பிரதேச அபிவிருத்தி என்பதுதானே! அப்படியானால் நமது மக்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்து நகத்தைக் கடித்துக் கொண்டிருக்கப் போகிறார்களா? சிறுபான்மையினரிலும் சிறுபான்மையினரான மலையக மக்கள் அரசுடன் இணைந்து, ஜனாதிபதி அதிகாரங்களையும் பாராளுமன்ற அதிகாரங்களையும் பயன்படுத்தி மலையக மக்களை சகல வழிகளிலும் துறைகளிலும் அபிவிருத்தி செய்வது புத்திசாலித் தனமான காய் நகர்த்தலா அல்லது எதிர்க்கட்சியில் அமர்ந்து கோஷம் போடுவது புத்திசாலித்தனமா?

வாக்காளர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம் இது.

ஜனாதிபதித் தேர்தலின் போது அன்றைய சூழலின்படி மலையக மக்கள் மாற்றத்தை வேண்டி வாக்களித்திருக்கலாம். நிலைமை இப்போது முற்றாக மாறிவிட்டிருப்பதால் இன்றைய தேவைகளுக்கு- மலையக சமூக பொருளாதார மற்றும் வேலை வாய்ப்பு போன்றவற்றை மனதில் இருந்தி- வாக்களிக்க வேண்டும். அப்படித்தான் நுவரெலியா வாக்காளர்களும் கருதுகிறார்கள் என்பதை மாறிவரும் சூழல்கள் அப்பட்டமாக எடுத்துக்காட்டுகின்றன. எனவே கடந்த மாகாணசபைத் தேர்தலில் வாக்களிக்கப்பட்ட அதே நடைமுறையை இம்முறையும் வாக்காளர்கள் பின்பற்றுவார்கள் என அவர்கள் எதிர்பார்த்திருந்தால் ஏமாற்றமே மிஞ்சும். முன்னர் மாற்றத்தை விரும்பி வாக்களித்த வாக்காளர்கள் இன்று அதே நபர்களுக்கு ஏமாற்றத்தைத் தரப் போகிறார்கள். இது நிச்சயம்.

இன்னொன்றையும் நான் இங்கு குறிப்பிட வேண்டும். 45 ஆயிரம் வாக்குகளைப் பெற்றவர்கள் மாகாண சபையில் மக்களுக்காக எதைப்பற்றிப் பேசியிருக்கிறார்கள்? இதைச் சாதித்திருக்கிறார்கள்? 18 ஆயிரம் வாக்குகளைப் பெற்ற நான் குறுகிய காலத்தில் எத்தனையோ காரியங்களைச் செய்து முடித்திருக்கிறேன். ஏனெனில் இ. தொ. கா. சாதிக்கக் கூடிய இடத்தில் உள்ளது என்பதை மக்கள் அறிவார்கள். ஏனெனில் போராட்டம், ‘பிக்கட்டிங்’ பண்ணி எதையும் சாதித்துவிட முடியாது’

வழமையாக இ. தொ. காவுக்குத் தொழிலாளர்கள் வாக்குகளோ கிடைக்கும். ஏன் நகரங்களில் வாழும் தமிழர்களை வசப்படுத்த முடியவில்லை?

நீங்கள் சொல்வதில் உண்மை இல்லை. இ. தொ. கா. என்றால் அது தொழிற்சங்கம் மாத்திரமே என்றும் தொழிலாளர்களுக்கான இயக்கம் என்றுதான் பலரும் கருதுகிறார்கள். ஆனால் அந்த வேலிகளை எங்கள் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் எப்போதோ உடைத்தெறிந்து விட்டார். இ. தொ. கா. இன்று மலையகம் தழுவிய ஒரு இயக்கம். அதற்கு மேலாக இது ஒரு தேசிய இயக்கமுமாகும். தோட்ட மக்களை கல்வியறிவு பெறச்செய்து அவர்களை தோட்டக் கட்டமைப்பில் இருந்து வெளியே கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கும் இ. தொ. கா. இனி மேலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டுமான கட்சி அல்ல என்பதை வர்த்தகர்களாகவும், அரசு ஊழியர்களாகவும் இருக்கும் மலையக சமூகம் உணர்ந்து கொண்டு விட்டது.

மலையக ஆசிரியர்கள் தொண்டமான் தலைமையிலான ஆக்கபூர்வமான இ. தொ. கா. வை இப்போது அறிந்து கொண்டிருக்கிறார்கள். அரசு ஊழியர், வர்த்தகர் சமூகங்களின் தேவைகளையும் நிறைவேற்றி வைக்கக்கூடிய, புதிய தொழில் வாய்ப்புகளையும், நிதிப் புரள்வையும் உருவாக்கக் கூடிய கட்சியாக அவர்கள் இன்று இ. தொ. கா. வை அடையாளம் கண்டிருக்கிறார்கள். இம்முறை மலையகத்தில் ஆசிரிய மற்றும் வர்த்தக சமூகத்தினரின் முழுமையான ஆதரவுடன் இ. தொ. கா. வெற்றியீட்டப் போகிறது என்பதை இப்போதே சொல்லி வைக்க விரும்புகின்றேன். ஏனெனில் இ. தொ. கா. வுடன் இருப்பதுதான் தமக்கு பாதுகாப்பு என அவர்கள் கருதுகிறார்கள். பாதுகாப்பு என்றால் கத கதப்பான அரவணைப்பு என்றும் கூட சொல்லலாம்.

மலையகத்தில் உங்கள் தேர்தல் பிரசாரம் எப்படிப் போகிறது?

அற்புதம் என்றுதான் சொல்வேன். தலைவர் ஆறுமுகன் தொண்டமான் வழிக்காட்லில் புதிய உத்வேகத்துடன் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். புதிய முகங்கள் களத்தில் இறக்கப்பட்டிருக்கிறார்கள். மத்திய மாகாணத்துக்கு பழைய முகம் என்றாலும் பாராளுமன்றத்துக்கு நான் புதிய முகம் தானே! நுவரெலியா மாவட்டத்தில் இம்முறை சட்டத்தரணியான ராஜதுரை என்ற புதுமுகம் களமிறக்கப்பட்டுள்ளார். நாங்கள் செய்ததையும் செய்யப் போவதையும்தான் சொல்லி வருகிறோம். ஆறுமுகன் தொண்டமானின் மகத்தான வெற்றி இப்போதே நிச்சயம் செய்யப்பட்டுவிட்டது.

அவர் தலைமையிலான இ. தொ. கா. நுவரெலியா மாவட்டத்தில் என்¦ன்ன சாதித்திருக்கிறது என்பதை வாக்காளர்கள் அறிவார்கள். தொழில் வழக்குகளைப் பேசித் தீர்க்கும் சங்கம் என்ற கட்டமைப்பில் இருந்து நாங்கள் எப்போதோ வெளியேறிவிட்டோம். இது ஒரு மக்கள் இயக்கம். எங்களை எதிர்க்கின்றவர்கள் என்ன உருப்படியான வாதங்களை முன்வைக்கிறார்கள்? ஆறுமுகன் தொண்டமான் சாதித்திருப்பதில் ஒரு துகளையாவது இவர்களால் சாதித்துக்காட்ட முடியுமா? ஒருமலையக அரசில்வாதி செல்கிறார்.

வெயில் அதிகம் என்பதால் மக்களுக்கு வரட்சி நிவாரணம் பெற்றுத்தர வேண்டுமாம். எமது வீடமைப்புத் திட்டங்கள் , பிரஜாசக்தி, நவசக்தி சுயதொழில் கடன் திட்டம், மாணவர் பஸ்சேவை என எமது மக்கள் சேவைகள் பன்முகப்பட்டு மக்களை நாடிச் செல்கின்றன. எதிர்த்தரப்பினருக்கு சொல்வதற்கு எதுவுமே இல்லை! அதனால்தான் வரட்சி நிவாரணம் வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

கூட்டு ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவோம் என்றும் மாதச் சம்பளம் அல்லது 750 ரூபா தினச் சம்பளம் அல்லது வாழ்க்கைச் செலவுப் படியுடன் கூடிய சம்பளம் என்றெல்லாம் பேசுகிறார்கள். நீங்கள் என்ன சொல்லப் விரும்புகிaர்கள்?

கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இவர்கள் அனைவரும் சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்ட முடியும் என்பதை மறந்துவிட்டார்கள். தேயிலைக்கு விலை இருக்கிறது என்கிறார்கள். அது உண்மைதான். எனினும் விலை குறைந்துபோன கடந்த வருட நஷ்டத்தை இக்கம்பனிகள் தாங்கிக்கொள்ள வேண்டும். இப்போதும் கூட சில கம்பனிகள்தான் இலாபத்தில் ஒடுகின்றன. பலாங்கொடைப் பக்கமாகச் சென்றால் பெருந்தோட்டச் செய்கையை வெளியாருக்கு கொடுக்கும் நிலை ஏற்பட்டிருப்பதைக் காணலாம். பல மத்துரட்ட தோட்டங்கள் மூடுப்பட்டுவிட்டன. புதிய தேயிலைச் செடிகளில்தான் நல்ல விளைச்சல்.

பழைய செடிகளில் கொழுந்து விளைச்சல் குறைவு. எனவே நாம் பெலன்ஸ் பண்ண வேண்டியிருக்கிறது. கம்பனிக்காரர்களின் நிலைமைகளையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். முரட்டுப்பிடிவாதம் பிடிப்பதில் அர்த்தம் இல்லை. பேரம் பேசும் போது கம்பனிகளின் நிலைமைகளையும் கவனத்தில் கொண்டாக வேண்டும் சித்திரம் வரைவதற்கு முதலில் சுவர் வேண்டாமா? இன்று எழுபது வீதமான தேயிலைத் தோட்டங்கள் சிறு தோட்டங்களாகிவிட்டன. பெருந்தோட்ட கம்பனிகள் வசம் 30 சதவீதமே உள்ளது. இந்த நிறுவனங்களிடமும் கன்னாபின்னா என்று முரண்டு பிடித்தால், யதார்த்தமற்ற கோரிக்கைகளை முன்வைத்தால் அவர்கள் கம்பனிகளை மூடிவிட்டுப் போய் விடுவார்கள்.

இனி நமது மக்கள்தான் அவதிப்பட வேண்டியிருக்கும். மேலும் கூட்டு ஒப்பந்தம் என்பது வெறுமனே சம்பள உயர்வு மட்டுமல்ல என்பதை இச்சங்கங்கள் உணர வேண்டும். எத்தனையோ தொழிலாளர் நலன்கள் இந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. சம்பளத்தை மட்டும் அதிகரித்துவிட்டு சலுகைகளை நிறுத்தி விட்டால் என்ன செய்வது? கடைசியாக ஒன்று. நாங்கள் பெற்றுக்கொடுத்ததைவிட ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் அதிகம் கேட்டுப் பெற்றுக் கொடுக்க வேண்டியதுதானே! வாய்வீச்சுமட்டும் அரசியலாகாது.

மூவாயிரம் ஆசிரியர் தெரிவில் சில குளயறுபடிகள் நிகழ்ந்ததாகவும் தகைமையற்றவர்களும் நியமனம் பெற்றுக் கொண்டதாகவும் கேள்விப்பட்டோமே!

நானும் தான் கேள்விப்பட்டேன். தமிழ்க் கல்வி அமைச்சரானதும் நான் இது பற்றி விசாரித்தேன். 61 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படவில்லை. தகுதி அடிப்படையில் அவர்களுக்கு பணி நியமனம் வழங்கி விட்டோம், தகுதியற்றோருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும் விசாரித்தேன். அப்படி எதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. நடைபெற வாய்ப்பும் இல்லை. ஏனெனில் தகைமைகளை நிர்ணயிப்பதும் அவை பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிப்பதும் பரீட்சைகள் திணைக்களம்தான்.

 எனவே இந்தப் புகாருக்கான ரிஷிமூலத்தை விசாரித்ததில், கஷ்டப் பிரதேச பகுதிகளுக்கு குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களே போகத்தயாராக இருந்ததையும் இவர்கள், குறிப்பிட்ட பிரதேசத்துக்கு வெளியே வசிப்பவர்கள் என்பதும் தெரியவந்தது. இந்த ஆசிரிய பதவிகளுக்கான நியமனங்கள் பாடசாலை அமைவிடத்தை அடிப்படையாகக் கொண்டே வழங்கப்பட்டுள்ளன என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். எனவே நியமனங்கள் சரியாகத்தான் வழங்கப்பட்டுள்ளன என்பதை உறுதி செய்து கொண்டோம்.

எனினும் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. இந்த ஆசிரியர்கள் நேரத்துக்கு பாடசாலை செல்வதில்லை. அதிலும் குறிப்பாகத் திங்கட்கிழமையன்று காலை தத்தமது ஊர்களில் இருந்து புறப்பட்டு வந்து தமது பாடசாலைகளைச் சென்றடையும் போது பகல் 12 மணியும் ஆகிவிடுகிறது. சமீபத்தில் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஹேவாஹெட்டயைச் சேர்ந்த தமிழ்ப் பாடசாலை ஒன்றுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார். அப்போது நான்கு ஆசிரியர்கள் சமூகமளிகவில்லை என்பது தெரியவந்தது.

அவர் எனது கவனத்துக்கு இதைக் கொண்டுவந்தார். மாகாண கல்வித் திணைக்கள மட்டத்தில் விசாரணை இடம்பெற்ற போதுதான் ஆசிரியர்கள் தாமதமாக வரும் விஷயம் தெரியவந்தது. ஆனால் கஷ்டப்பிரதேசம், தூரம் என்றெல்லாம் இவர்கள் காரணம் காட்ட முடியாது. இது அவர்களாகவே விரும்பி ஏற்றுக் கொண்ட ஒரு தொழில். கஷ்டப் பிரதேசம் என்பதும் அவர்களுக்குத் தெரியும். எனவே நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் கடமைக்கு சமுகமளிக்க வேண்டியது அவர்களின் கடமை.

கடைசியாக ஒரு கேள்வி. நுவரேலியா மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல்களில் வெளிமாகாண வேட்பாளர்கள் போட்டியிடுவது சமீபகாலமாக அதிகரித்து வருவதாக ஒரு புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு இலங்கைப் பிரஜை எந்தவொரு இடத்திலும் போட்டியில் முடியும். எனவே இக் குற்றச்சாட்டு சரியானதா?

ஒருவர் எங்கு வேண்டுமானாலும் போட்டியிலாம். அது அவர் உரிமை. ஆனால் வெளிமாவட்டத்தவர்கள் வேறு இடங்களில் முளையாமல் நுவரெலியாவையே நாடி வருகிறார்கள் என்றால் நாம் எச்சரிக்கையாகத் தான் இருக்க வேண்டும். ஊடகங்களில் அமர்ந்து கொண்டு அரசியல் பேசுவது வேறு; நேரடியாக அரசியல் செய்வது வேறு என்பதை இவர்களுக்கு இன்னும் சில தினங்களில் மக்கள் பாடமாகப் புகட்டுவார்கள்.

 முதலாளிமார் தமது வசதிகளை மென்மேலும் பெருகிக் கொள்வதற்கான தளமாக நுவரெலியா மாவட்ட அரசியல் களத்தைப் பயன்படுத்த நினைக்கிறார்கள். மலையக மக்கள் நுவரெலிய தமிழ் வாக்களார்கள் இளிச்சவாயர்கள் என இவர்கள் நினைப்பது தான் இந்த அந்நியப் படையெடுப்புக்குக் காரணம். இது எமது மக்களை அவமானப்படுத்தும் ஒரு சிந்தனை. ஏன். இவர்கள் முதலில் தமது சொந்த மாவட்டங்களில் வெற்றிபெற்று காட்ட வேண்டியது தானே!

இவர்கள் நினைப்பது போல நுவரெலிய வாக்காளர்கள் மடையர்கள் அல்ல என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்தப் போகின்றன. இதன் பின்னர் இந்தப் படையெடுப்பு நின்று விடும் என்பது என் நம்பிக்கை. இ.தொ.கா. சேவை செய்துதான் மக்கள் மனதில் இடம் பிடித்ததே தவிர எதிர்ப்பு அரசியல் செய்தல்ல. சுதந்திரமாக வெளியே நின்று கொண்டு குறைகள் சொல்வது எவருக்கும் சுலபம்தான். ஆனால் இவர்களிடம் ஏதேனும் மாற்றுத் திட்டங்கள் உண்டா?

நாங்கள் 150 மில்லியன் ரூபாவை பாடசாலை அபிவிருத்திக்காக ஒதுக்கியிருக்கிற்றோம். இதில் 75 மில்லியன் ரூபா புதிய பாடசாலைக் கட்டடங்களுக்காக செலவிடப்படும். மிகுதிப் பணம் கட்டடத் திருத்த வேலைகள், சுத்தமான குடிநீர் விநியோகம், வடிகால், கழிப்பறை, மின்வசதி, தளபாடங்கள் என்பற்றுக்காக செலவிடப்படும். இனிமேல் இப்பாடசாலைகளில் வளப்பற்றாக்குறை இருக்க கூடாது என்பதாலேயே இப்படி ஒரு திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். இதை எல்லாம் இவர்களால் நினைத்துத் தான் பார்க்க முடியும்?

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.