புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.

சமூகத்தில் வேரூன்றி இருக்கும் தமக்கு எதிரான அதிகார முளைகளை பெண்கள் இனம் காண வேண்டும்

சமூகத்தில் வேரூன்றி இருக்கும் தமக்கு எதிரான அதிகார முளைகளை பெண்கள் இனம் காண வேண்டும்

பெண்ணிய முன்னெடுப்புக்கள் ஆரம்பமாகி நூற்றாண்டு காலம் கடந்து விட்ட நிலையிலும் பெண்கள் இன்னமும் பால் ரீதியான அடக்கு முறைகளுக்கு உள்ளாகி உள்ள நிலை தொடரவே செய்கிறது.

கல்வி, பொருண்மிய மேம்பாட்டினால் கூட பெண்கள் முழுமையான விடுதலை அடைய முடியாதவர்களாக இன்றும் இரண்டாந்தரப் பிரஜைகளாகவே இருக்கிறார்கள்.

முன்னேற்றப் பாதையில் ஆணுக்கு நிகராக பல்வேறு துறைகளில் பெண்தடம் பதித்தாலும் அவள் சுதந்திரப் பறவையாக இன்னும் சமத்துவம் பெறவில்லை.

சமூக ரீதியிலான அடக்குமுறை ஒருபுறமிருக்க இன்று குடும்ப வன்முறைகள் பல்கிப் பெருகி வருகின்றன. விழிப்படைந்துவரும் பெண்களை ஆணாதிக்கம் தன் அதிகார வரம்புக்குள் வைத்திருக்க முயலும் பிரயத்தனமாக இவ்வன்முறை அதிகரிப்பை காண முடிகிறது.

குடும்பத்துள் தம் உறவுகள் மூலமே பெண்கள் அதிகளவில் அடக்கு முறைக்கு உள்ளாகிறாள் என்பதையும் அவதானிக்க முடிகிறது.

பெண்ணடிமைத் தனத்தை, பெண்களின் மூலமாகவும் மேற்கொள்ளத்தக்கவாறு இச்சமுதாயம் கட்டமைக்கப்பட்டுள்ளது. தான் வேடிக்கையானதும் வேதனையானதுமான விடயமாகும்.

பெண்ணுரிமை இயக்கங்கள் தோன்றிய தொடக்கத்திலிருந்தே அதற்கு எதிரான அலையை ஆணாதிக்க சமூகம் முடுக்கி விட்டது. அந்த அலை இன்று வரை தொடர்ந்து பெண்ணியவாதிகள் கடுமையாக விமர்சிக்கப்படுவதும், ஏதோ ஒரு வகையில் இழிவுபடுத்தப்படுவதும் தொடர்கிறது.

இத்தனை தடைகளுக்கு மத்தியிலும் பெண்ணியவாதிகள் தாம் தேர்ந்தெடுத்த பாதையை முழு அர்ப்பணிப்போடு தொடர்ந்தார்கள். தடைதாண்ட முடியாமல் சில பெண்ணியவாதிகள் தம்மை ஒடுக்கிக் கொண்டு பொசுங்கிப் போனதும் உண்டு.

இன்று மெல்ல மெல்ல பெண்ணியத்தின் அவசியமும், அதற்கான சமூகத் தேவையும் இன்று பல்வேறு தரப்பினராலும் உணரப்பட்டு வருகிறது. இதில் பல ஆண்களும் அடங்குவர்.

துரதிரஷ்டம் என்னவென்றால் இன்றும் கூட பல பெண்கள் பெண்ணியத்திற்கு எதிரானவர்களாக இருந்து, பெண்ணிய மேம்பாட்டைத் தாம் உணராமலே எதிர்ப்பதன் மூலம், பெண் விடுதலையையும் பால் சமத்துவத்தையும் எட்டுவதை பின்தள்ளிப் போக வைக்கிறார்கள்.

பெண்ணியத்திற்கு தாம் எதிராக செயற்படுவதை இப்பெண்கள் உணராத வரை பெண் விடுதலை என்பது எட்டாக கனிதான்.

முதலில் ஒவ்வொரு பெண்ணும், பெண் ஒடுக்கப்பட்டிருக்கிறாள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அரசியல் சமூக பொருளாதாரம் கல்வி என்பவற்றில் இன்னமும் பெண் பிற்படுத்தப்பட்டுள்ள நிலையையும், பண்பாடு கலாசார அம்சங்கள் பெண்ணை எவ்வளவு தூரம் இரண்டாந்தரப் பிரஜைகளாக்கியுள்ளது என்பதனையும் எல்லா மட்டத்திலுள்ள பெண்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சமூகத்தில் வேரூன்றியிருக்கும் தமக்கு எதிரான ஆதிக்க அதிகார முளைகளை இனம் காணாது, பெண் விடுதலை நோக்கிய பயணத்தை முன்னெடுக்க முடியாது. தமக்கு எதிரான வலைப் பின்னல்களை இனம் கண்டு அவற்றை அறுத்தெறிந்து வெளிவருவதற்கான பயணப் பாதையைத் தேர்ந்தெடுத்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் தான் பெண் விடுதலைக் கனியை எட்ட முடியும்.

இம்முயற்சியானது குடும்பத்தின் உள்ளேயும் சமூக மட்டத்தில் ஒன்றிணைந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பெண்ணின் வாழ்வும் சமூகப் பின்புலமும் வெவ்வேறான அடுக்கில் எழுப்பப்பட்டிருந்தாலும் அடிப்படையில் ஆணாதிக்கத்தின் அதிகார அமைப்பே பெண் விடுதலையை அசாத்தியமாக்குகிறது என்பதை உணர்ந்து கொண்டு, அவ் ஆதிக்கத்தைத் தகர்த்தெறிய தயக்கமின்றி முன்வர வேண்டும்.

இதில் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படுவது தவிர்க்க முடியாது. சேறு பூசுபவர்களைக் கண்டு அஞ்சாமல் அதைக் கழுவிவிட்டு முன்னெடுத்த காலைப் பின் வைக்காது பெண் விடுதலைப் பயணத்தைத் தொடர்ந்தால் தான் பெண்ணிய இலக்கை முற்றாக எட்ட முடியும்.

இதற்கான பயணத்தில் பெண்ணியச் சிந்தனையைப் பல்வேறு களங்களில் முன்னெடுக்க வேண்டும். கலை இலக்கியம், பண்பாடு, அரசியல் முதலானவற்றின் ஊடாக ஏற்படுத்த கூடிய மாற்றங்களுக்கு வித்திட வேண்டும். ஒவ்வொரு பெண்ணினதும் ஆற்றலும் ஆளுமையும் முழுமையாக செயற்படுத்தப்பட்டு, ஒன்றிணைந்த பயணமாக இதர பெண்களையும், ஆண்களையும் இணைத்து செயற்பட்டால் வெற்றி நிச்சயம்.

சந்திரகாந்தா முருகானந்தன்

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.