புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.
பிரதேசத்தின் அபிவிருத்தியே எமது எதிர்காலம்: அதற்கேற்ற அரசியல் அதிகாரம் தேவை

பிரதேசத்தின் அபிவிருத்தியே எமது எதிர்காலம்: அதற்கேற்ற அரசியல் அதிகாரம் தேவை

புத்தளம் மாவட்டத்தில் தமிழ் பேசுகின்ற ஒரே ஒரு அரசியல் தலைமை என்ற வகையில் மாவட் டத்தில் உள்ள தமிழ் மக்களும் எனது மக்கள் என செயற்படுவதற்கும், அவர்கள் எதிர்நோக்கு கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கும் எனக்கு ஒரு கடப்பாடு இருக்கி றது.’ என புத்தளம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பின ரும், முன்னாள் பிரதி அமைச்சரும் ஐக்கிய மக் கள் சுதந்திர முன்னணி வேட்பாளருமான

கே.ஏ. பாயிஸ்

தெரிவித்தார்.

தினகரன் வாரமஞ்சரிக் காக, முன்னாள் பிரதி யமைச்சரை புத்தளத்திலு ள்ள அவரது இல்லத் தில் சந்தித்து உரையாடி னோம். தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் ஆதரவாளர் கள், தொகுதி மக்கள் என வீடே நிரம்பி வழி ந்து கொண்டிருந்தது. அந்த பிசியான நேரத்தி லும் வாரமஞ்சரி வாசகர் களுக்காக எம்முடன் உரையாடினார்.

உரையாடியவர்

கே. அசோக்குமார்

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் ஐ. ம. சு. மன்னணி சுமார் 11,000 வாக்குகளால் பின்னடைவை அடைந்திருந்தது. இதற்கான காரணம் என்ன என்பதை கண்டறிந்தீர்களா? இதனை பொதுத் தேர்தலில் எவ்வாறு ஈடுசெய்யப் போகிaர்கள்?

11,000 வாக்குகளால் பின்னடைவு என கூறமுடியாது. கடந்த 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடும் போது இது பின்னடைவு அல்ல.

புத்தளம் தொகுதியில் ஹசன் குத்தூஸ் போட்டியிட்டபோது 1970களில் முதல் முறையாக ஸ்ரீல. சு. க. தனியே 103 வாக்குகளால் வென்றது. அது ஒரு சிறிய காலம். அதனை ஸ்ரீல. சு. க. தக்கவைத்துக் கொண்டிருந்தது. அவரது மரணத்தின் பின்னர் மீண்டும் ஒரு வருடத்தில் புத்தளம் மாவட்டத்தை ஐ. தே. க. பிடித்துக்கொண்டது. அதன் பின்னர் கூட்டுச் சேர்ந்து சில வெற்றிகள் கிடைத்தாலும் தனியே ஸ்ரீல. சு. க. வென்ற வரலாறு இல்லை.

எங்களுடைய வருகைக்குப் பின்னர் கடந்த வருடம் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் புத்தளம் தொகுதியில் வெற்றி கிடைத்தது. சுமார் 4000 வாக்குகளால் வெற்றியீட்ட முடிந்தது. அது முதலாவது வெற்றி. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வித்தியாசமான அலை ஏற்பட்டது. சிறுபான்மை மக்கள் அந்த அலையுடன் அள்ளுப்பட்டுச் சென்றனர். சிறுபான்மை மக்கள் ஏமாற்றப்பட்டனர். நாடு முழுவதிலும் சிறுபான்மை மக்களுக்கு ஏற்பட்ட அந்த அலைதான் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியது.

இதனை நாம் பின்னடைவாக கருதவில்லை ஒரு தோல்வியாக பார்க்கவில்லை. சிறிய பின்னடைவாக மட்டுமே பார்க்கிறோம். ஆனால் சுமார் 15,000 முதல் 20,000 வரையிலான வாக்கு வித்தியாசத்தில் புத்தளம் தொகுதியை நாம் இம்முறை வெல்லுவோம்.

தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்கள் சிந்திக்க வேண்டிய விசயங்கள் பற்றி நாம் பார்த்தால், நமது பிரச்சினைகள், நமது பிரதேசம் நமது எதிர்காலம், போன்றவற்றை பற்றி சிந்திக்க வேண்டிய தேவை இன்று இருக்கிறது.

சிறுபான்மை கட்சிகள் என்பது வடக்கிற்கும் கிழக்கிற்கும் மாத்திரம் மட்டுப்படுத்தக்கூடிய கட்சிகள், அல்லது மலையகத்திற்கு மாத்திரம் உரிய கட்சிகள் இவை போடுகின்ற கோஷங்களுக்காக, சுலோகங்களுக்காக அந்த கோஷங்களையும் நாமும் உச்சரித்துக் கொண்டு வடக்கு, கிழக்குக்கு வெளியே பரந்துபட்டு வாழும் தமிழ், முஸ்லிம் மக்களும் பின்னால் சென்றுவிட முடியாது.

கடந்த காலங்களில் அந்த அனுபவம் எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் முஸ்லிம் கட்சிகளின் பின்னால் சென்றவர்கள்.

ஆனால் அந்த கட்சிகள் வடக்கின் பிரச்சினை வேறு, கிழக்கின் பிரச்சினை வேறு வடகிழக்கிற்கு வெளியே இருக்கும் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினை வேறு மலையக மக்களின் பிரச்சினை வேறு என்பதை சரியான முறையில் ஆராய்ந்து சரியான முடிவுகளையும், வியூகங்களையும் வகுத்திருந்தால் வடக்கு, கிழக்குக்கு வெளியேயுள்ள தமிழ், முஸ்லிம் மக்களுக்கு பிரயோசனத்தை தரலாம்.

ஆனால் தற்போது அவர்கள் அமைக்கின்ற வியூகங்களும் கொள்கைகளும் அவர்களையோ அவர்களது பிரதேசத்தையோ காப்பாற்ற முடியாமல் உள்ளது. வடக்கில் உள்ள கட்சிகள் அமைக்கின்ற வியூகங்கள் வடக்கையே காப்பாற்ற முடியாமல் உள்ளது. கிழக்கிலுள்ள கட்சிகள் அமைக்கின்ற வியூகங்கள் கிழக்கையே காப்பாற்ற முடியாமல் உள்ளது. இவர்களுக்குள் நாங்களும் நுழைந்துகொண்டு இருப்பதால் பாதிக்கப்படப் போவது வடகிழக்கிற்கு வெளியேயுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள்தான்.

எனவே வடகிழக்கிற்கு வெளியே உள்ள மக்கள் இன்று சிந்திக்க வேண்டிய விடயம் எமது பிரதேசம், எமது எதிர்காலம், எமது அபிவிருத்தி என்றால் அதற்கு ஏற்ற அரசியல் அதிகாரத்தை பெற்றெடுக்க வேண்டும் என்பதுதான்.

ஆனால் இன்று சிறுபான்மை கட்சிகள் என்று சொல்லப்படும் கட்சிகள் தமிழ், முஸ்லிம் மக்களை தங்களுக்குள் சேர்த்துக் கொண்டு மொத்த வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். ஏதாவது ஒரு ஆளுங்கட்சி அல்லது எதிர்க் கட்சியுடன் மொத்த வியாபாரத்தில் பேரம் பேசுகின்றனர். ஆளுந்தரப்புடன் செய்யும் மொத்த வியாபாரமானால் பரவாயில்லை. ஆனால் எதிர்க் கட்சியுடன் செய்யும் வியாபாரத்தினால் அவர்களது ‘பாக்கெட்’ நிரப்பப்படுகிறது. மக்களுக்கு எதுவும் செய்யப்படுவது இல்லை. ஆளுங்கட்சியுடன் செய்யும் மொத்த வியாபாரத்தினூடாக மக்களுக்கு ஏதாவது சேவை செய்யப்படுகிறது. எனவே இந்த விடயத்தில் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

தேர்தல் முறையில் மாற்றங்கள், கொண்டுவரவும், அரசியலமைப்பில் மாற்றங்கள் கொண்டு வரவும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இந்த தேர்தலில் பெற வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். இது தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன?

என்னைப் பொறுத்தவரையில் இவ்விரண்டு முறைகளிலும் மாற்றங்கள் வேண்டும்.

தொகுதி ரீதியான பிரதிநிதித்துவமும் திpனிu இல்லாமலும் மாவட்ட ரீதியான பிரதிநிதித்துவமும் உள்ளடக்கியதான ஒரு தேர்தல் முறை வரப்போவதால் இதில் ஒரு பாரிய பிரச்சினையை சிறுபான்மை மக்கள் எதிர்நோக்க மாட்டார்கள். எனவே இதற்கு எமது பூரண ஆதரவு இருக்கிறது.

நீங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரா? அல்லது ஸ்ரீல. மு. காவா?

நான் இந்தத் தேர்தலில் ஸ்ரீல. சு. க. வில் போட்டியிடுகிறேன். ஸ்ரீல. சு. க. என்பதை பார்ப்பதைவிட நாம் பார்க்க வேண்டிய முக்கிய விடயம், ஆளுகின்ற ஜனாதிபதி, ஆளுகின்ற அரசாங்கம் ஆளுகின்ற, மாகாண சபை, ஆளுகின்ற பிரதேச சபை அந்தக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர் கட்சியின் அமைப்பாளர் என்ற வகையில் தான் பார்க்க வேண்டும்.

இந்தப் பகுதியின் அபிவிருத்திக்காகவும், மக்களின் சுபீட்சத்திற்காகவும் அரசியல் அதிகாரத்தை பெறப்போகிறது என்பதையும் பார்க்க வேண்டும்.

புத்தளம் மாவட்டத்திலேயே தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதியாக உடப்பு தமிழ் கிராமத்தை சொல்லலாம். இங்கு கடந்த தேர்தலின்போது கூட போதியளவு வாக்குகள் அரசுக்கு ஆதரவாக கிடக்கவில்லை. அபிவிருத்தி விடயத்தில் உடப்பு புறக்கணிக்கப்பட்டதாகவே கருதுகிறார்கள். இதுபற்றி உங்கள் கருத்து?

உண்மையிலேயே உடப்பு கிராமம் என்பது இவ்வளவு காலமும் பேரினவாத அரசியல்வாதிகளால் கூறுபோட்டு அந்த மக்களின் ஒற்றுமையை குலைத்து சின்னாபின்னப்படுத்தி வைத்திருந்த வரலாறுதான் இருந்தது.

அந்த மக்கள் பெற்றெடுக்க வேண்டிய பெற்ற பிரதேச சபை தலைமைத்துவத்தைக் கூட பறித்துக்கொள்ளும் அளவுக்கு அங்கிருக்கும் பெரும்பான்மை அரசியல்வாதிகள் செயற்பட்டார்கள்.

எனவே புத்தளம் மாவட்டத்தில் தமிழ் பேசுகின்ற ஒரே ஒரு அரசியல் தலைமை என்ற வகையில் தமிழ் மக்களும் எனது மக்கள் என்ற வகையில் செயற்படுவதற்கு எனக்கு ஒரு கடப்பாடு இருக்கிறது.

அதனால்தான் இந்த மாகாணத்திலேயே இல்லாமல் இருந்த மாகாண சபைப் பிரதிநிதித்துவத்தை முதல் முறையாக தமிழ் மக்களுக்கு எடுத்துக் கொடுத்தோம்.

தமிழ் பிரதிநிதித்துவத்தினூடாக முஸ்லிம் பிரதிநிதித்துவம், முஸ்லிம் பிரதிநிதித்துவத்தினூடாக தமிழ் பிரதிநிதித்துவம் என்ற சுலோகங்களோடு முஸ்லிம் வாக்காளர்களை தமிழ் பிரதிநிதிக்கு வாக்களிக்கச் சொல்லி ஒரு தமிழ் பிரதிநிதியை பெற்றெடுத்தோம். மாகாண சபை வரலாற்றிலேயே முதல் முறையாக இது நடைபெற்றது.

எல்லோரும் வந்து வீதியை செப்பனிடுவார்கள், மின்சாரம் வழங்குவார்கள் எல்லாம் செய்வார்கள் ஆனால் தமிழ் மக்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை எடுத்துக்கொடுக்க முன்வருவதில்லை. அவர்கள் கூறு போட்டுத்தான் பார்த்தார்கள்.

எனினும் சிறுபான்மை மக்களின் அரசியல் தலைமை என்ற வகையில் நாம் சிந்தித்தோம். முஸ்லிம்களுக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற முடியும் என்றால் தமிழ் மக்களுக்கு ஒரு மாகாண சபை பிரதிநிதித்துவத்தையாவது பெற்றெடுப்போம் என எண்ணினோம். அதனை செய்து காட்டினோம். முஸ்லிம் வாக்குகளை கொண்டு இதனை சாதித்தோம்.

அத்துடன் தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளக்கூடிய அதிகாரிகள் (பொலிஸ்) இந்த மாவட்டத்தில் இருக்கவில்லை. எதிர்நோக்கும் தமிழ் மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு அடிக்கடி கொண்டுவந்து அதற்கான தீர்வுகளையும் பெற்றுக்கொடுத்தோம்.

அத்துடன் அந்த மக்கள் எதிர்நோக்குகின்ற கடற்றொழில் ரீதியான, மொழி ரீதியான பிரச்சினைகள் தொடர்பாக உடனுக்குடன் தீர்வுகளை பெற்றுக்கொடுத்து வருகிறோம். உடப்பு முதல் இந்த மாவட்டத்தில் வாழுகின்ற அனைத்து தமிழ் மக்களும் நன்கு அறிவார்கள். எனவே அவர்களது முதன்மை வாக்கை எனக்கு தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. மேலும் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது விட்ட தவறை சரிசெய்வதற்காகவும், வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிப்பதற்கும் அந்த மக்கள் ஆயத்தமாக இருப்பதை அந்த மக்களுடன் நேரடியாகச் சென்று உரையாடினால் தெரியவரும்.

உடப்பு கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதி இப்போது மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வீதியை புனரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா? எமக்கு விபரம் தெரிந்த நாள் முதல் இந்த வீதி குண்டும் குழியுமாகத் தான் காட்சியளிக்கிறது?

உடப்பு வீதி மாத்திரமல்ல, கற்பிட்டி பிரதான வீதி கூட இதே பிரச்சினைக்கு உட்பட்டுள்ளது. மன்னார் வீதி போன்ற இந்த மூன்று வீதிகள் தான் புத்தளத்திற்குள் உள்ளன. அந்த வீதிகளை நாம் அரசாங்கத்தின் பணத்தில் செய்வது என்பது சற்று கடினமான விடயம்.

உலக நிதி நிறுவனங்கள் ஊடாக கிடைக்கும் நிதியைக் கொண்டு செய்வதற்கான ஏற்பாடுகளை நாம் செய்திருக்கிறோம். காலஞ்சென்ற அமைச்சர் ஜெயராஜ் பர்னாண்டோ புள்ளேயின் காலத்தில் இந்த வீதி அபிவிருத்தி திட்டம் உள்வாங்கப்பட்டிருந்தது. ஏனோ இந்த வேலைகள் பின்தள்ளப்பட்டுக் கொண்டே செல்கிறது.

உடப்பு முதல் மணியங்காடு என்று சொல்லப்படுகின்ற 50 கிலோ மீற்றர் பாதையை புனரமைப்பது தான் எனது முதல் வேலையாக நான் எடுத்துக்கொள்ளவுள்ளேன்.

அந்தப் பிரதேசத்துக்கான தனித்துவமான உள்ளூராட்சி சபையை தமிழ் பிரதேச செயலாளர் அலுவலகம் ஒன்றை நிறுவுவது என்பதும் எனது நடவடிக்கைகளில் ஒன்று.

புத்தளம் மாவட்டத்தில் உள்ள தமிழ், முஸ்லிம் வாக்காளர்களிடம் நீங்கள் வேண்டுவது என்ன?

இந்த மாவட்டத்தில் உள்ள தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை 100 வீதம் அல்லது முழுமையாக புரிந்துகொண்ட தனிநபர் என்ற வகையிலும், அரசியல் தலைமை என்ற வகையிலும் பிரச்சினைகளை அணுக வேண்டிய முறை பற்றியும் நன்கு தெரியும்.

எட்டு உறுப்பினர்கள் இந்த மாவட்டத்திற்கு தெரிவு செய்யும் போது ஆக ஒரு உறுப்பினரை உருவாக்குவதற்குரிய முழு நியதியும் கடப்பாடும் இருக்கிறது. அதற்கான வளமும் இருக்கிறது வாக்குகளும் இருக்கிறது. ஆகவே அதனை சரியாகப் பயன்படுத்தினால் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தலாம்.

நான் போட்டியிடுகின்ற முதலாம் இலக்கத்தை ஒரு சாதாரண இலக்கமாக தமிழ், முஸ்லிம் மக்கள் பார்க்க முடியாது. பார்க்கக் கூடாது.

இந்த மாவட்டத்தில் இருக்கின்ற தமிழ் பேசும் சிறுபான்மை ஏறக்குறைய 62,000 முஸ்லிம் வாக்குகளும், 22,000 தமிழ் வாக்குகளும் என்ற வகையில் 84,000 வாக்குகள் என்ற பெரிய வாக்கு வங்கியை வைத்துக்கொண்டுள்ள சமூகத்திற்கு சொந்தமான பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் அந்த பிரதிநிதித்துவத்தை மீட்டெடுப்பது சிறுபான்மை மக்களின் கடமை. அதிலும் முஸ்லிம்களினதும், தமிழர்களினதும் கடமை. எனவே இந்த விடயத்தை சிந்தித்து கட்சி, இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும். மக்கள் சிந்தித்து செயற்படுவார்கள் என நான் நம்புகிறேன்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.