ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 22, 2013
வரு. 81 இல. 251
 

எடிசன் வைத்த பரீட்சை

எடிசன் வைத்த பரீட்சை

எடிசன் ஒரு பிரபல விஞ்ஞானி மாத்திரமல்ல, மனோதத்துவத்திலும் கைதேர்ந்தவர். ஒருவரிடம் சில நிமிடம் அவர் உரையாடினால் போதும். அவரைப் பற்றி அனைத்தையும் தெரிந்துகொள்ளும் ஆற்றல் அவருக்கு இருந்தது. அவருடைய பெரிய பரிசோதனைச் சாலையில் வேலை கேட்டு அநேக விண்ணப்பங்கள் வரும்.

அனைவரையும் ஒரு நாள் குறித்த நேரத்தில் வரச்சொல்லி, தந்திரமாக ஏதாவது ஒரு பரீட்சை செய்வது அவர் வழக்கம். அன்றைக்கு நான்கு பேர் வந்திருந்தார்கள். அனைவர் படிப்பையும் விசாரித்துவிட்டு, சற்று மனம் புழுங்கினான் மைக்கேல். ஏனென்றால், மற்ற மூவரையும்விட அவன் படிப்புதான் குறைவு.

இந்த வேலை நமக்குக் கிடைக்குமா என்றெண்ணிப் பெருமூச்சு விட்டான் அவன். சற்று நேரத்தில் அனைவரையும் உள்ளே அழைத்தார் எடிசன். அந்த விண்ணப்பதாரர்களிடம் அவர் கேட்ட கேள்வி இதுதான்: ‘உன் கையில் கடைசியாக இருந்த பத்து வெள்ளிக் காசும் போய்விட்டது. இனி வைத்து விளையாட ஒரு தம்படிக்காசுகூடக் கிடையாது.

யாரோ ஓர் அந்நியனுடன் சீட்டாடுகிறாய். உன் கையில் நல்ல சீட்டு தட்டுகிறது. களத்தில் அரை டாலர் கிடக்கிறது. அந்த அந்நியன் கால் டாலரை எடுத்து களத்தில் எறிகிறான்; நீ என்ன செய்வாய்?’ அனைவரும் அதைக்கேட்டு விழித்தார்கள். ‘யோசித்துச் சொல்லுங்கள். அவசரம் வேண்டாம்’ என்றார் எடிசன். ‘நான் கடன் சொல்லுவேன்’ என்றான் ஒருவன்.

‘அவன்தான் அந்நியனாயிற்றே! சம்மதிப்பானா?’, ‘நான் மோதிரத்தைக் கழற்றி வைப்பேன்’ என்றான் மற்றொருவன். ‘அதற்கு அவன் சம்மதிக்க வேண்டும்; அந்த சமயத்தில் உன்னிடம் மோதிரம் இல்லாவிட்டால்?’, ‘நல்ல சீட்டு கையிலிருக்கும் பொழுது, அந்த ஆட்டத்தை விட மனம் வராதே! மனம் வராதே! மனம் வராதே!’ என்று முணுமுணுத்துக்கொண்டே இருந்தான் மூன்றாமவன். மைக்கேல், என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தான். ‘டக்’கென்று ஒரு யோசனை வந்தது அவனுக்கு. ‘சார் எனக்கு பணம் வைத்து சீட்டாடும் பழக்கமில்லை’ என்று கத்தினான். ‘இப்பொழுதே வேலையை ஏற்றுக்கொள்’ என்று அந்த மைக்கேலையே தேர்ந்தெடுத்தார் எடிசன்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி