ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 22, 2013
வரு. 81 இல. 251
 

ஆள் அறிவுறுத்தும் கணந்துள் பறவை!

ஆள் அறிவுறுத்தும் கணந்துள் பறவை!

kமலைச் சாரல்களும் அடர்ந்த காடுகளுமாக இருக்கும் வழியிடையே செல்லும் பயணிகளையும் வாணிபம் செய்வோரையும் வழிப்பறி செய்யும் “ஆறலை கள்வர்கள்” அங்கு சுற்றித் திரிவர்.

அம் மலையடுக்கக் காடுகளிலேயே “கணந்துள்” பறவைகள் கூட்டம் கூட்டமாகக் காணப்படும். அவற்றைப் பிடிக்க மலை வேடர்கள் வலை பின்னி வைத்திருப்பர். அதைப் பார்த்ததும், இப் பறவைக் கூட்டம் அஞ்சி, ஒலி எழுப்புவது, பாலை வழியே செல்லும் கூத்தர்கள் இசைக்கும் யாழிசை போல் கேட்கும். காலம் காலமாக அங்கு வாழும் அப் பறவைகள் அறிவு மிக்கவை.

பயணிகள் பலர் தொகுதி தொகுதியாக அக் காட்டு வழியிலே செல்வர். வழியிடையே மறைந்து நின்று, திடீரென வெளிப்பட்டு, கள்வர்கள் பயணிகளைத் துன்புறுத்தி, அவர்களின் உடைமைகளைப் பறித்துச் செல்வர்.

இதனைப் பார்த்துப் பார்த்துப் பழகிப் போன கணந்துள் பறவைகள், “ஆறலை கள்வர்” கூட்டம் வருவதைப் பார்த்ததும் அரவம் எழுப்பிப் பயணிகளுக்குக் கள்வர் கூட்டம் வருவதை அறிவுறுத்துமாம். கணந்துள் பறவைகளின் எச்சரிக்கை ஒலியைக் கேட்டதும் பயணிகள் கூட்டம், பாதையை மாற்றிக் கொண்டு தப்பித்துச் செல்லுமாம்.

இங்ஙனம் “ஆள் அறிவுறுத்தும்” கணந்துள் பறவை பற்றி, சங்கப் பாடல்களில் இரண்டு இடத்தில் வருகிறது.

“ஆற்றயல் இருந்து இருந்தோட்டு அஞ்சிறை

நெடுங்காற் கணந்துள் ஆள் அறிவுaஇ

ஆறுசெல் வம்பலர் படைதலை பெயர்க்கும்

மலையிடைக் கானம்” (குறு 350)

ஆலத்தூர்கிழார் பாடிய இப்பாடலைப் போல, குடவாயிற்

கீரத்தனாரும் நற்றிணையில் ஒரு பாடலில் குறித்துளார்.

“யார்வை வேட்டுவன் படுவலை வெரீஇ

நெடுஞ்கால கணந்துள் அம் புலம்புகொள் தெள்விளி

சுரஞ்செல் கோடியர் கதுமென இசைக்கும்

நரம்பொடு கொள்ளும் சத்தத்து” (நற். 212)

“கணந்துள் பறவைகள் தொகுதி தொகுதியாக இருக்கும்; அவற்றைப் பிடிக்க வேட்டுவர் வலையை விரித்து வைத்திருப்பர். அதைக் கண்டதும் அவை “வெருவிக்” கத்தும், நெடுநாள் பழக்கத்தில், வழியிடையே ஒளிந்திருந்து வெளிப்பட்டுத் துன்புறுத்தும், வழிப்பறி செய்வோர் வருவதை இக் கணந்துள் பறவை கத்தி அறிவிக்கும். அவர்கள் உடனே பாதையை மாற்றிக் கொண்டு, தப்பித்துச் செல்வர்” என்கிறது மேற்சுட்டிய பாடல்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி