ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 22, 2013
வரு. 81 இல. 251
 

சி.பி.ஐ.யின் அறிக்கை இன்று உச்ச நீதிமன்றில் தாக்கல்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் விவகாரம்

சி.பி.ஐ.யின் அறிக்கை இன்று உச்ச நீதிமன்றில் தாக்கல்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பான விசாரணை நிலவர அறிக்கையை உச்ச நீதிமன்றில் சி.பி.ஐ. இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்கிறது.

பிரதமர் மன்மோகன் சிங் நிலக்கரித்துறை மந்திரி பொறுப்பு வகித்த காலத்தில் நாட்டில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை பல்வேறு தரப்பினருக்கு ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசுக்கு 186 இலட்சம் கோடி ரூபா இழப்பு ஏற்பட்டிருப்பதாக தலைமை கணக்கு தணிக்கையர் அறிக்கை குற்றம் சாட்டியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில், சி. பி. ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த ஊழலில் இதுவரை சி.பி.ஐ. 14 வழக்குகள் பதிவு செய்துள்ளது. ஒடிசாவில் தலபிரா 2 மற்றும் தலபிரா 3 என்ற இரண்டு நிலக்கரி சுரங்கங்களை விதிமுறைகளை மீறி, ஊழல் புரிந்து ஆதித்யபிர்லா குழுமத்தை சேர்ந்த ஹிண்டால்கோவுக்கு ஒதுக்கியது தொடர்பாக 14வது வழக்கினை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ஆதித்ய பிர்லா குரூப் தலைவர் குமாரமங்கலம் பிர்லா, ஹிண்டால்கோ, நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் பி.சி.பரேக் மற்றும் பெயர் தெரியாதவர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் நிலக்கரித்துறை மந்திரி பொறுப்பு வகித்த பிரதமரும் குற்றவாளி தான் என பி.சி. பரேக் கருத்து தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் பிரதமர் அலுவலகம், ஓடிசா நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என விளக்கம் அளித்துள்ளது.

இன்னொரு பக்கம், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றிருப்பதால், ஒதுக்கீடுகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றில் 3 பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின்பேரில், 1993 ம் ஆண்டில் இருந்து நடைபெற்ற நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளை உச்சநீதிமன்றம் ஆராய்ந்து வருகிறது.

இதில் சமீபத்தில் நடந்த விசாரணையின்போது, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் பின்பற்றப்பட்டு வந்த கொள்கை பற்றி 29ஆம் திகதிக்குள் விளக்கம் அளிக்குமாறு ஒடிசா உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கு நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இந்த நிலையில், இதுவரை பதிவு செய்துள்ள 14 வழக்குகளின் நிலைவரம், அவற்றின் முன்னேற்றம், ஆரம்ப நிலை விசாரணை அறிக்கை பதிவு செய்து மேற்கொண்டு வரும் விசாரணைகளின் நிலைவரம் ஆகியவை குறித்து உச்ச நீதிமன்றில் சி.பி.ஐ. இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணை நிலைவர அறிக்கையை தாக்கல் செய்யும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒடிசா நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெறவில்லை என்று பிரதமர் அலுவலகம் அளித்த அறிக்கையின் ஆதரவாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் கருத்து தெரிவித்தார்.

இது தொடர்பாக டில்லியில் நேற்று முன்தினம் அவர் கூறுகையில், பிரதமர் அலுவலகத்துக்கு ஒரு கோப்பு வருகிறது. அதை பிரதமர் அலுவலகம் ஆராய்கிறது. பின்னர் பிரதமருக்கு அனுப்புகிறது. அதில் கையெழுத்திடுவதற்கு முன் ஒவ்வொரு பக்கத்தையும் பிரதமர் படித்துப் பார்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிaர்களா? நானும் ஒரு மந்திரியாக இருந்து வருகிறேன். இப்படிப் படித்து பார்க்க ஆரம்பித்தால் எந்த வேலையும் நடக்காது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் சதி இல்லை' என்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி