ஹிஜ்ரி வருடம் 1434 ஷஃபான் மாதம் பிறை 01
விஜய வருடம் வைகாசி மாதம் 28ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE , 11 , 2013
வரு. 81 இல. 136
 

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன தமிழ் சேவையின் கல்விப் பணியை நாம் மதிக்க வேண்டும்

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன தமிழ் சேவையின் கல்விப் பணியை நாம் மதிக்க வேண்டும்

நாட்டின் தாய்க்குலம் இன்று உயர் கல்வித் துறையிலே மிகுந்த ஆர்வம் காட்டி வருவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். அபிவிருத்தி அடைந்து வரும் ஒரு நாட்டின் எதிர்கால சுபீட்சத்துக்கு இது சிறந்த அடித்தளமாகும்.

இவ்வாறு தெரிவித்தார் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தபான வர்த்தக சேவை நாடளாவிய ரீதியில் தமிழ் மொழி மூலம் பாடசாலைகள் மத்தியில் நடத்தி வரும் “அறிவுச் சுரங்கம் போட்டி நிகழ்ச்சித் தொடரின் கண்டி மாவட்ட பாடசாலைகளுக்கிடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவத்தில் கலந்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மடவள மதீனா தேசிய கல்லூரி அஷ்ரப் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற விழாவில் தொடர்ந்து பேசிய அமைச்சர் மேலும் கூறியதாவது, ஒரு காலத்தில் எமது பெண்களின் கல்வி அவர்கள் பருவ வயதை அடையும் வரை மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டது. இன்று அந்த நிலை இல்லை. அவர்களுக்க கல்விச் சுதந்திரம் தாராளமாக வழங்கப்பட்டுள்ளது.

இன்று பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாவோரின் பெரும் பாலானவர்கள் பெண்களே அலுவலக அதியுயர் பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருப்பவர்களும் பெண்களே, இது இந்த நாட்டு சுபீட்சப் பாதையின் குறிப்பிடத்தக்க மைல் கல்லாகும். தாய் மொழிக்கு முன்னரிமை வழங்கி ஆங்கில மொழி எமது கல்வித்துறையிலே புறக்கணிக்கப்பட்டிருந்தது. அந்த கல்வி முறையின் கீழ் விளைந்த விபரீதங்களை சமூகம் இன்றும் அனுபவிக்கிறது. இதனை உணர்ந்துள்ள சமூகம் பிறமொழி அறிவைப் பெறுவதிலும் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நாட்டு மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு கைகொடுத்து உதவி வரும் இதிகாசம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு உண்டு. மாணவர்களின் பல்துறை சார் கல்வி மேம்பாட்டுக்கும் வானொலி ஆற்றி வந்துள்ள பணி அளப்பரியது. தேசிய ரீதியில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் மாணவ சமுதாயம் அறிவில் சிறக்க இப்பணி இன்றியமையாதது. எனவே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் சேவையின் கல்விப் பணியை நாம் திக்க வேண்டும் என்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி