ஹிஜ்ரி வருடம் 1434 ஷஃபான் மாதம் பிறை 01
விஜய வருடம் வைகாசி மாதம் 28ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE , 11 , 2013
வரு. 81 இல. 136
 

முதியோரை புறக்கணிக்கும் சமுதாயம் எக்காலத்திலும் மீட்சி பெறப்போவதில்லை

முதியோரை புறக்கணிக்கும் சமுதாயம் எக்காலத்திலும் மீட்சி பெறப்போவதில்லை

"ஆற்றுவார் ஆற்றல் இகழாமை

போற்றுவார்

போற்றலுளெல்லாம் தலை"

திருவள்ளுவர் திருவாக்கிற்கிணங்க வல்லவர்களாம், நல்லவர்களாம் முதியோர் தம் ஆற்றலை, சிறப்பை இகழாதிருக்க சிறப்பானதொரு காவலை நாமெல்லோரும் பெற்றிருக்கின்றோம்.

வளர்ந்து தேயாது ஒளி வீசுகின்ற தண்மதியங்கள் நம் முதியோர்; வாழ்க்கைப் பாதையின் விடி வெள்ளிகள் நம் மூத்தோர், தேவை கருதாது சேவை புரியும் பகலவன்கள் நம் ஆன்றோர்

நம் முதியோர் தோற்றத்தால் வாடிப்போய்விட்டார்கள்தான். ஆனாலும் சளைக்காத உள்ளம் அங்கே செதுக்கப்பட்டிருக்கிறது. முதுமை தேடிவிட்ட நரையின் தோற்றமாகட்டும், தோல் சுருங்கி ஆங்காங்கே கோடுவிட்ட இளமை விடை கொடுத்த இயலாமைத் தோற்றமாகட்டும், ஆடி ஓடி வென்றுவிட்ட உடல் இன்று தள்ளாடித் தோற்றுப்போய் ஓய்வைத்தான் தேடிடட்டும், என்னதான் இருந்தாலும் நம் மூத்தோரின் உள்ளம் உறங்கவில்லை. உணர்வுகள் உறையவில்லை; சிந்தனை சிதையவில்லை. உடல்தான் முதிர்ச்சியின் எல்லையைத் தேடித் தொட்டதே தவிர முதியோர் இன்னும் இன்றும் இளமையாகத்தான் இருக்கின்றார்கள்.

இவ்வாறான நம் முதியோரை நாம் புறக்கணித்து வாழ முடியாது.

முதுமைக்காலத்தில் அவர்கள் விரும்பியவற்றைச் செய்து கொடுக்காது இருந்து விட்டு அவர்கள் இறந்த பின்னர் சொந்த பந்தம், ஊருலகத்திற்குச் செய்தி அனுப்பி, உயிரற்ற உடலை சுமந்து நடந்திட நிலபாவாடை விரித்து அமர்க்களம் பண்ணுவதில் நன்மை இல்லை.

இன்றைய மேலைத்தேய மற்றும் சினிமா கலாசாரத்தில் ஊறியிருக்கும் பலருக்கு முதியோர் கூறுகின்ற விடயங்கள் அத்தனையும் கசப்பாகத் தோன்றலாம். இளைஞர்களுக்கு முதியோர் கூறுவது கசப்பினும் அதுவே மருந்து என்று உணராது திண்டாடுபவர்களும் உண்டு. இளங்கன்று பயமறியாது. அனுபவமும், ஆற்றலும் நிறையவே கொண்ட நம் மூத்தோர் சொற்படி வாழ வேண்டும்.

இளைஞர்கள் பட்டத்தால் வந்த வர்கள். நம் மூத்த முதியோர்கள் பட்ட றிவால் வந்தவர்கள். இவ்வாறான முதியோர்களின் உதவி நமக்கு மிக மிக அவசியம். இவர்களை நாம் ஏனோதானோ என உதறித் தள்ளிப் புறக்கணித்து விடுவோமாயின் நம் நிலையற்ற வாழ்வும் புறக்கணிக்கப் பட்டே போய்விடும். முதியோர்களின் தரத்தை அறியாது அவர்களைப் புற க்கணித்து அவர்கள் இருப்பது பார மெனக்கருதி ஒதுக்குகின்ற புறக்கணிக் கின்ற சமுதாயம் தீமையையே சந்திக் கும். தோன்றிய சமூக விரோதிகளாகின் றனர். பெரியாரை, முதியாரை மதியாது சொற்தவறி நடப்பவர்கள் மறையோன் வாக்கிற்கிணங்க,

"எரியால் சுடப்படினும் உய்வுண்டாம்

- உய்யார்

பெரியார் பிழைத்தொழுவார்"

அதாவது, உய்வின்றி உலகில் உழன்று திரிவர்.

சினிமா கலாசாரத்தில் மூழ்கிவிட்ட இன்றைய இளைஞர் சிலரின் செயல்கள் நம்மை அச்சத்தில் ஆழ்த்துகின்றன. கொலை, களவு, பொய், பித்தலாட்டம், தற்கொலை என நீண்டு கொண்டே போகிறது ஓர் பட்டியல்.

திட்டமிடப்படாத வாழ்வு, ஒழுக்கம் குன்றிய வாழ்வு நெறி ஆகியவற்றின் வெளிப்பாடே இவை. சினிமா கலாசாரத்தினையே ஓர் முன்மாதிரியாகக் கொண்டு அதன் வழியிலேயே வாழ்வை நடத்திச் செல்வதின் வெளிப்பாடே இவையனைத்தும் ஆகும்.

பதின்ம வயதுக் காதலுக்காக பெற்ற தாய், தந்தையரைக் கொலை செய்யும் இளைஞர்கள், அளவுக்கு மீறிய கடன்பழுவால் குடும்பத்திற்கே நஞ்சு கொடுத்து இரத்த உறவுகளையே கொலை செய்யும் கொலை கலாசாரம்.....

இவ்வாறெல்லாம் சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

இவையெல்லாம் மெய் கூசச் செய்யும் ஈனச் செயல்கள். இவற்றினைப் பார்க்கும் போது எம்மவர் மத்தியில் ஓர் கேள்வி தோன்றுகிறது! எமது முன்னோர் எவ்வளவு சிறப்பான வாழ்வை வாழ்ந்தார்கள்! அவர்களின் வாழ்வு இன்றும் எமக்கு ஓர் படிப்பினையாக இருக்கின்றது. ஆனால், நவநாகரிக உலகத்திலே. நவீன வசதிகளுடன் சுக போகமாய் வாழும் இன்றைய சமுதாயத்தால் ஏன் பிறர் மெச்சும் படியான; பிறருக்கு முன்மாதிரியான வாழ்வை வாழ முடியாதுள்ளது?

சூடு கண்ட பூனைகளான எமது முதியோர் தமது பட்ட றிவினால் சொல்லுகின்ற விட யங்களை ஓர் கணம் செவி மடுப் போமாயின், அவர்கள் சொற்படி நடப்போமேயானால் நம் வாழ்வு சிறக்கும். பலருக்கும் முன்மாதிரியான போற்றும்படியான வாழ்வை வாழலாம்.

ஆகவே வளரும் நம் சமுதாயம் முதியோர் உட்பட யாவரது ஆசியையும் பெற்று வாழ வேண்டும். முதியோரை புறக்கணிக்கும் சமூக விரோதிகளை ஒதுக்கி நல்லதோர் சமுதாயத்தை உருவாக்க ஒன்றிணைவோமாக!

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி