ஹிஜ்ரி வருடம் 1434 ஷஃபான் மாதம் பிறை 01
விஜய வருடம் வைகாசி மாதம் 28ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE , 11 , 2013
வரு. 81 இல. 136
 

அலப்போ நகர் மீது பாரிய தாக்குதலுக்கு தயாராகும் சிரிய படை

குசைர் வெற்றிக்கு பின்

அலப்போ நகர் மீது பாரிய தாக்குதலுக்கு தயாராகும் சிரிய படை

குசைர் நகரை கைப்பற்றிய உற்சாகத்துடன் சிரிய அரச படை கிளச்சியாளர் வசமிருக்கு வடக்கு நகரான அலப்போ மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகள் மீது பாரிய தாக்குதலை ஆரம்பிக்க தயாராகி வருகிறது.

இந்த பாரிய இராணுவ நடவடிக்கை இன்னும் ஒரு சில மணி நேரங்களிலோ அல்லது தினங்களிலோ ஆரம்பிக்கப்படும் என பாதுகாப்பு பிரிவை மேற்கோள் காட்டி அரச ஆதரவு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதலுக்காக பெருமளவான அரச படைகள் அனுப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

எனினும் இவ்வாறான ஒரு நடவடிக்கைக்கான சமிக்ஞைகள் தென்படவில்லை என செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

லெபனான் எல்லைப்பகுதியில் இருக்கும் குசைர் நகரை சிரிய படை ஹிஸ்புல்லா அமைப்பின் ஆதரவுடன் ஒரு சில தினங்களுக்கு முன்னர் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து மீட்டுள்ள நிலையிலேயே அது அலப்போ மீது கவனம் செலுத்தியுள்ளது. இதில் கிளர்ச்சியாளர் வசமிருந்த குசைர் நகரின் கடைசி கிராமத்தையும் அரச படை கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்டது.

கடந்த ஆண்டு தொடக்கம் வடக்கு சிரியாவின் பெரும் பகுதியை கிளர்ச்சியாளர்கள் தன் வசம் வைத்திருந்தனர். இதில் அலப்போ நகர் கிளர்ச்சியாளர்களின் முக்கிய தளமாக செயற்பட்டு வருகிறது. எனினும் அரச படையின் குசைர் நகர வெற்றி சிரிய உள்நாட்டு யுத்தத்தில் திருப்புமுனையாக அமைந்திருப்பதாக விமர்சகர்கள் நம்புகின்றனர்.

இந்நிலையில் சிரிய அரச ஆதரவு பத்திரிகையான ‘அல் வதானில்’ பிரசுரமாகியுள்ள ஒரு கட்டுரையில், அலப்போவுக்கு அருகில் இருக்கும் கிராமப் பகுதிகளை நோக்கி பெருமளவான படையினர் நகர்த்தப்பட்டு வருவதாகவும் அலப்போ மோதலுக்கு அரசு தயாராகி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஆரம்பகட்டமாக அலப்போவை ஒட்டியிருக்கும் பகுதிகள் மீட்கப்பட்டு துருப்புகள் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்படும். குசைர் மற்றும் கிக்கு கவ்தா (டமஸ் கசை அண்டிய பகுதி) பகுதிகளில் பெற்ற முன்னேற்றத்தை அனுபவமாக கொண்டு சிரிய இராணுவம் தாக்குதல்களை முன்னெடுக்கும்” என அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

சிரிய பாதுகாப்பு தரப்பும் அடுத்த இலக்கு அலப்போ என்பதை உறுதி செய்துள்ளது. “அலப்போ மோதல் எதிர்வரும் மணித்தியாலங்களில் அல்லது நாட்களில் ஆரம்பிக்கப்படும். மாகாணத்தில் ஒவ்வொரு நகரம் மற்றும் கிராமங்களையும் மீட்கும் நோக்கில் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்படும்” என சிரிய அரச தரப்பு அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு கூறினார்.

இந்த இராணுவ நடவடிக்கைக்கு ‘வடக்கு புயல்’ என பெயரிடப்பட்டு ள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் அலப்போவை யொட்டி எந்த படைக்குவிப்பையும் அவதானிக்கவில்லை என அரச எதிர்ப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் அலப்போவுக்கு அருகிலிருக்கும் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நப்லூ மற்றும் செஹ்ரா கிராமங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மோதல் வெடித்துள்ளது.

இதில் ஹிஸ்புல்லா மற்றும் ஈராக்கின் ஷியா போராளிகளின் உதவியுடன் சிரிய அரச படை அலப்போவை அண்டிய கிராமங்கள் மீது வான் மூலம் தாக்குதல் நடத்தியதாக கிளர்ச்சியாளர்களின் கட்டளை தளபதி மற்றும் முன்னாள் சிரேஷ்ட இராணுவ அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் முஸ்தபா அல் ஷைக் குறிப்பிட்டார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி